Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஹோலோகாஸ்டை மறுத்த பாதிரியார்கள் மீண்டும் கிருஸ்துவ திருச்சபையுடன் இணைப்பு!

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியதற்காக 1988-ஆம் ஆண்டு 4 பிஷப்கள் வாடிகன் கிருஸ்துவ திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களை போப் பெனடிக்ட் மீண்டும் திருச்சபையுடன் இணைத்துக் கொண்டார். இது யூதத் தலைவர்களை கோபமடையச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஹிட்லரின் நாஜிப்படையினரால் யூதர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட நிகழ்வு 'ஹோலோகாஸ்ட்' என வரலாற்றில் பதியப் பட்டுள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இச்சம்பவங்களை உண்மை என ஏற்றுக் கொண்டிருந்தாலும் சிலர் அவற்றைப் பற்றிய சந்தேகங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான சந்தேகங்களை எழுப்புவது பல ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குற்றத்தை புரிந்ததற்காகவே 4 பிஷப்களும் திருச்சபையிலிருந்து நீக்கப் பட்டிருந்தனர்.


நால்வரில் ஒருவரான பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் வில்லியம்சன் ஹோலோகாஸ்ட் பற்றி கூறப்படுபனவற்றை மறுத்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சுவீடன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், யூதர்களைக் கொல்வதற்காக விஷ வாயு கிடங்குகள் எதுவும் இருந்திருக்கவில்லை என்றே தாம் நம்புவதாகத் தெரிவித்தார். அச்சம்பவங்களில் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 60 லட்சம் என்று சொல்லப்படுவதையும் அவர் மறுத்து, அதன் உண்மையான எண்ணிக்கை 3 லட்சம் மட்டுமே இருக்கும் எனவும் அவர் கூறினார்.

நான்கு பிஷப்களையும் மீண்டும் திருச்சபையில் இணைக்கும் உத்தரவை போப் வெளியிடுமுன்பாக பல யூதத் தலைவர்கள் போப்பின் இந்த முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். பல்லாண்டுகளாக நிலவி வரும் யூத கிருஸ்துவ சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை இது குலைத்து விடும் எனவும் 'ஆழமானதொரு காயத்தை இது மீண்டும் கிளறி விடும்' எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

குவாண்டனாமோ: 2 மலேஷிய கைதிகளை தாய்நாட்டிற்குக் கொண்டுவர பிரதமர் விருப்பம்!

அமெரிக்காவின் புதிய அதிபர் பாரக் ஒபாமா குவாண்டனாமோ சிறையை ஓராண்டிற்குள் மூடும்படி உத்தரவிட்டிருப்பது தெரிந்ததே. அங்கு அடைபட்டிருக்கும் கைதிகளுள் இரு மலேஷிய நாட்டவரும் அடங்குவர். அவர்களை மலேஷியாவிற்கு கொண்டுவர பிரதமர் அப்துல்லா படாவி விருப்பம் தெரிவித்துள்ளார்.

முகமது நாசிர் லெப் மற்றும் முகமது பரிக் அமின் என்ற இரு மலேஷிய நாட்டவரும் 2002-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்புகளை நடத்திய ஜெமா இஸ்லாமியா என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

"அதிபர் பாரக் ஒபாமா (குவாண்டனாமோ சிறையை மூடுவது பற்றிய) தமது வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக மலேஷியா தனது மகிழ்வை தெரிவித்துக் கொள்கிறது" என்று கூறிய மலேஷிய பிரதமர், அக்கைதிகள் மலேஷியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களின் எஞ்சிய தண்டணைக் காலத்தை மலேஷிய சிறையில் கழிப்பர் என்றும் தெரிவித்தார்.

குவாண்டனாமோ சிறையில் இன்னும் அடைபட்டிருக்கும் சுமார் 250 பேரில் செப் 11 தாக்குதல் நடக்க உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 நபர்களைச் சேர்த்து சுமார் 20 பேர் மீது மட்டுமே குற்ற வழக்கு பதியப் பட்டிருக்கிறது.

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பலி!

Published on: //
வடக்கு பாகிஸ்தானின் பழங்குடியினர் குடியிருப்புப் பகுதி மீது அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதல் 3 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

எதிர்பாராத விதமாக ஒன்றன் பின் ஒன்றாக பல ஏவுகணைகள் வந்து விழுந்ததாகவும் ஏவுகணை விழுந்தப் பகுதி முழுவதும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் எனவும் கண்ணால் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

அநேகமாக பராக் ஹுசைன் ஒபாமா பதவியேற்ற பின்னர், அமெரிக்கப் படைகள் நடத்திய முதல் தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.

"தீவிரவாத எதிர்ப்புப் போரின் முக்கிய பகுதிகளாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இருக்கும்" என அதிபர் பராக் ஒபாமா ஸ்டேட் டிபார்ட்மென்ட் கூட்டத்தில் நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.

சர்மா கைது செய்த காஷ்மீர் தீவிரவாதி விடுதலை!

Published on: // ,
டெல்லி ஜாமிஆ நகர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மோகன்சந்த் சர்மா தீவிரவாதி என குற்றம் சுமத்தி கைது செய்த இக்பால் என்றழைக்கப்படும் அயாஷ் அஹமது ஷா என்ற காஷ்மீர் இளைஞரை நீதிமன்றம் நிரபராதி எனக் கூறி விடுதலை செய்தது.

டெல்லி சாஸ்திரி பார்க்கின் அண்மையிலுள்ள மெட்ரோ ஸ்டேசனில் வைத்து கடந்த 2004 ஜனவரி 22 அன்று அயாஷ் கைது செய்யப்பட்டார். இவரைக் கைது செய்யும் பொழுது அவர் வைத்திருந்தப் பையில் வெடிபொருட்களும் மூன்று லட்சம் ரூபாயும் இருந்ததாகவும் அடுத்து வரும் குடியரசு தினத்தில் டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்காக அவர் அதனை வைத்திருந்தார் எனவும் டில்லி ஸ்பெஷல் செல் வழக்கு பதிவு செய்திருந்தது.

நிதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பொழுது, ஸ்பெஷல் செல்லிலுள்ள எ.எஸ்.ஐ. ரிஷிகேசிற்கு இக்பாலை கைது செய்த இடம் எங்கு என்பதைக் குறித்து விவரிக்க இயலவில்லை. மற்றொரு ஸ்பெஷல் செல் அதிகாரியான ஜெய் கிஷன், காவல்துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டவைக்கு எதிராக, மெட்ரோ அதிகாரிகள் அந்த ரெய்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார். ரெய்டில் கலந்துக் கொண்ட எஸ்.ஐ. உமேஷ் பாரதியினால் எவ்வளவு நேரம் ரெய்டு நடந்தது என்றக் கேள்விக்குப் பதிலளிக்க இயலவில்லை.

"குற்றம் சுமத்தப்பட்ட பிரதி, நாட்டுக்கு எதிராக போர் பிரகடன் செய்ததையும் நாட்டைத் தகர்க்க சதியாலோசனை நடத்தியதையும் தெளிவிப்பதில் அரசு தரப்பு தோல்வியடைந்ததாக" தீர்ப்பு கூறிய நீதிமன்றம், காவல்துறைக்கு எதிராகக் கடும் விமர்சனமும் கண்டனமும் தெரிவித்தது.

சீனா பொம்மைகள் இறக்குமதிக்கு இந்தியா தடை!

சீனாவிலிருந்து பொம்மைகள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே மெலாமின் என்ற விஷ ரசாயனப்பொருள கலந்துள்ளதுக் கண்டுபிடிக்கப்பட்டக் காரணத்தினால் சீனாவிலிருந்து சாக்லேட், பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் தற்பொழுது சீன உற்பத்தி பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொம்மைகள் உருவாக்கப்படுத்தப்படும் பொருட்களில் விஷ ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக எழுந்த சந்தேகமும் மிக விலை குறைந்த சீன பொம்மைகளின் அளவுக்கதிகமான இறக்குமதி உள்நாட்டு பொம்மை உற்பத்தியை வெகுவாக பாதித்திருப்பதும் இத்தடைக்குக் காரணமாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் 5 வயது சிறுமி கற்பழிப்பு

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று 5 வயதே ஆன சிறுமி கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளதாகவும் காவல் துறை கூறியது.

நேபாளத்தில் இருந்து வேலை தேடி பஞ்சாப் மாநிலம் மொஹாலி அருகே குராலி எனும் கிராமத்தில் அச்சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். பெற்றோர் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டனர். இவர்களது வீட்டருகே வசித்து வரும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த 27 வயதுடைய ராஜேஷ் பாரதி என்பவன் இச்சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து, சிறுமியிடம் நயமாகப் பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று இக்குற்றத்தை செய்ததாக விசாரணை அதிகாரி லக்விந்தர் சிங் கூறினார்.

மொஹாலியில் இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது நிகழ்வு இது. இம்மாதம் 7ஆம் தேதி 6 வயது நேபாளச் சிறுமி மொஹாலியின் தொழில்பேட்டை அருகே கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

"தேச துரோகி" வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி!

Published on: // ,
சமீபத்தில் வெளியான தேசதுரோகி இந்தி திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிட்டால், குழப்பங்கள் விளையலாம் என்ற மஹாராஷ்டிரா அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதற்கு முன்னர், மும்பை உயர்நீதிமன்றமும் இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசு உச்சநிதிமன்றத்தை அணுகியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் நாட்டின் மற்றப்பாகங்களில் வெளியான இத்திரைப்படத்தை, மஹாராஷ்டிராவில் வெளியிட மட்டும் மஹாராஷ்டிரா அரசு தடை விதித்திருந்தது.

அதேநேரம், உச்சநிதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னரும் இதுவரை மஹாராஷ்டிராவில் ஒரு திரையரங்கிலும் இத்திரைப்படம் இதுவரை திரையிடப்படவில்லை. திரைப்படம் திரையிட நினைத்திருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க தயாராகாததே இதற்கான காரணமாகும்.

மாலேகான் வழக்கு: சதி திட்டத்தில் ஹிமானி சவார்க்கரும்!

Published on: //
மாலேகாவ் குண்டு வெடிப்பிற்காக சதி திட்டம் தீட்டியவர்களில் வி.ட்டி. சவார்க்கரின் மருமகளும் காந்தியைக் கொன்ற கோட்சேயின் அண்ணன் கோபால் கோட்சேயின் மகளுமான அபினவ் பாரதின் தலைவி ஹிமானி சவார்க்கருக்கும் பங்குண்டு என மாலேகான் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏ.டி.எஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 11 அன்று போபாலிலுள்ள ராம ஷேத்திரத்தில் வைத்து நடந்த குண்டு வெடிப்பிற்கான ரகசிய சதியாலோசனை கூட்டத்தில் தானும் ஹிமானி சவார்க்கரும் கலந்துக் கொண்டதாக கடந்த டிசம்பர் 24 அன்று, அபினவ் பாரதின் உறுப்பினருமான வழக்கின் முக்கிய சாட்சி வாக்குமூலம் கொடுத்தார்.

இதனைக் குறித்த கேள்விக்கு, "தான் அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வேளையில் தற்பொழுது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகளாக இருந்தனர்" என ஹிமானி பதிலளித்துள்ளார்.

ஹிமானியையும் முக்கிய சாட்சியையும் குற்றவாளிகள் பட்டியலில் ஏ.டி.எஸ் சேர்க்கவில்லை. எதனால் இவர்கள் இருவரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்விக்கு, "இதற்கான பதிலை நீதிமன்றத்தில் தெரிவிப்போம்" என ஏ.டி.எஸ்ஸின் தற்காலிக தலைவர் ரகுவன்ஷி பதிலளித்தார்.

மரம் வெட்டிக்கு தண்டனை

42 மரங்களை சட்ட விரோதமாக வெட்டிய ஒருவருக்கு டெல்லி நடுவர் நீதிமன்றம் 210 மரக்கன்றுகளை நடும் விநோத தண்டனையை அளித்துள்ளது.

வாசுதேவா என்ற பெயருடைய அந்த நபர் தனக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே இப்படி செய்துவிட்டதாகக்  கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். 


மரங்களே நகரின் நுரையீரல்கள் எனவும், உலகின் பசுமை குறைந்துவருவது கவலையளிக்கும் விதயம் என்றும் நீதிபதி தேவந்தர் குமார் ஜங்காலா தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமருக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை

இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாளை அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனை(AIIMS)யில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இருதயத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவதற்காக  இச்சிகிச்சை என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர் P.K. பாண்டா தலைமையில் 11 மருத்துவர்களைக் கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறது.

76 வயதான மன்மோகன், 18 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை  ஃபைபாஸ் சர்ஜரி செய்துகொண்டிருக்கிறார். மேலும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் பெற்றுள்ளார்.

இதனால் சுமார் ஒருமாத காலம் மருத்துவ விடுப்பில் பிரதமர் இருக்க வேண்டியுள்ளதால், எதிர்வரும் குடியரசு தினக் கொண்டாட்டங்களையும், பிரதமருக்கான மற்ற அலுவல்களையும்  மூத்த அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி தலைமையேற்று நடத்துவார் எனத் தெரிகிறது. முன்னர் ப.சிதம்பரம் வசமிருந்த  நிதிஅமைச்சர் பொறுப்பையும் திரு. முகர்ஜியே தற்காலிகமாக கவனிப்பாராம்.

தீவிரவாத வழக்குகள்: பார் கவுன்ஸிலுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்!

Published on: //
தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக வாதாடும் உரிமையைப் பாதுகாப்பதற்கான வழிமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முறையீட்டின் மேல் விளக்கம் கோரி பார் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராகக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா மாநில பார் அஸோஸியேசன்களுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பார் அஸோஸியேசன்களின் நடவடிக்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பொதுநல வழக்கின் மீது வாதம் கேட்கும் பொழுது, தலைமை நிதிபதி கெ.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலுள்ள நீதிபதிகள் குழு பார் கவுன்ஸிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. முஹம்மது ஷிஐப்(லக்னோ), ஸமால் அஹ்மது(ஃபைஸாபாத்), நூர் அஹமது(உஜ்ஜயினி), சுரேந்தர் ஸிகாட்லிங்(மாஹாராஷ்டிரா) ஆகிய வழக்கறிஞர்கள் இணைந்து இந்த பொது நலவழக்கு தொடுத்துள்ளனர்.

"பார் அஸோஸியேசன் சட்ட விரோத தீர்மானம் நிறைவேற்றியுள்ளது" எனவும் "இதன் மூலம் கடந்த ஆண்டு நடந்தத் தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராக இருந்ததிலிருந்து விலக வேண்டி வந்ததாகவும்" புகாரில் அவர்கள் கூறினர். "குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராக வந்த வேளையில் மற்ற வழக்கறிஞர்கள் தங்களைத் தக்கியதாகவும்" அவர்கள் அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!