Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இடைக்கால நிதிநிலை அறிக்கை: நாளை சமர்ப்பிக்கப்படும்

Published on: ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009 // , , , , ,
நடுவண் அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை (Interim Budget) நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வில் இருப்பதால், நிதியமைச்சக பொறுப்பை கூடுதலாகக் கவனிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை இந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறார். எதிர்வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து இந்த நிதிநிலை அறிக்கையில் சலுகைகள் பரவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இன்று ஓய்வில் இருக்கும் பிரதமர் மன்மோகனைச் சந்தித்த பிரணாப், அவரிடம் நிதிநிலை அறிக்கையை காண்பித்து ஒப்புதலும் ஒப்பங்களும் பெற்றார். பிரதமர் பார்வையிட்ட பின்னர், குடியரசுத்தலைவரின் பார்வைக்காக நிதிநிலை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

நிதிநிலைஅறிக்கை மீதான அரசின் உரையையும் மன்மோகன்சிங் மேற்பார்வையிட்டார்.

சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்துக்கு சற்றுமுன் வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பில் இரவு பத்துமணிக்கு வெடிகுண்டு வெடிக்கும்;முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இச்செய்தியை தினத்தந்தி தெரிவிக்கிறது.

ஜனாதிபதி மாளிகை அருகே வாலிபர் தீக்குளிப்பு

டெல்லியில் விஜய் செளக் என்ற இடத்தில் தான் இந்திய ஜனாதிபதி மாளிகையும் பிரதமர் அலுவலகமும் உள்ளன. நாட்டில் எப்போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் பகுதியாகும் இது.

அந்த பலத்த பாதுகாப்பையும் மீறி நேற்று பிற்பகல் 31/2 மணியளவில் ஒருவாலிபர் தன்னுடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் தீயணைப்புத்துறையினர் ஓடிவந்து தீயை அணைத்து அந்த வாலிபரை இராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தீக்குளித்த அந்த வாலிபர் பெயர் அபிசேக் குமார் (32 வயது) என்றும், ஜார்க்கண்டைச் சேர்ந்தவர் என்றும், குவைத்தில் பிளம்பராகப் பணிபுரிந்து வந்தவர், பணி இழந்து நாடு திரும்பியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

70 சத தீக்காயத்துடன் காணப்படும் அபிசேக் தீவிர மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாரைச் சந்திப்பதற்காக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப்பகுதி வந்தார் என்று தெரியவில்லை.

தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா: வேலையிழக்கும் 1 இலட்சம் இந்தியர்கள்

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒபாமா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அவற்றுள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஹெச்-1 பி விசாக்களை நிறுத்துவதும் ஒன்றாகும்.

அமெரிக்கா வருடமொன்றுக்கு விநியோகிக்கும் 65,000க்கும் மேற்பட்ட இவ்வகை விசாக்களில் 60% சதவீதத்துக்கும் மேலாக இந்தியர்களே பயனடைந்துவந்தனர். இதுவரை இந்த விசாவில் அமெரிக்கா சென்றுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்துக்கும் மேலிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஒருவருடத்தில் ஹெச்1-பி வகை விசாக்களில் 1,65000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவை இந்தியர்களுக்கானதாகும். அதனால், பணியிழந்த அந்த இந்தியர்கள் நாடு திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானலில் கடல்வாழ் உயிரின நிரந்தர காட்சியகம்

கடல்வாழ் உயிரினங்களின் நிரந்தர காட்சியகம் ஒன்று ரூ.2.50கோடி செலவில் கொடைக்கானலில் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே முதலாவதாக இது இருக்கும். கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இதில் ஆர்வங்காட்டி வருகிறது.

இதற்காக நகராட்சிக்குச் சொந்தமான ஏரியொன்றின் அருகிலுள்ள கலையரங்கம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ரூ.2.5கோடி செலவில் அமைக்கப்படவிருக்கும் இக்காட்சியகத்தில் 300க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்களும், தாவரங்களும் இடம்பெறும் என்று திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கெடாதவகையில் இது அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாட்டயா டென்னிஸ்: இறுதியாட்டத்தில் சானியா தோல்வி

பாட்டயா டென்னிஸ் இறுதியாட்டத்திற்கு மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா தகுதி பெற்றிருந்தது அறிந்ததே!

இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் அவர் இரஷ்யாவின் சுவனரேவாவிடம் 5-7, 1-6 என்ற நேர்கணக்கில் வீழ்ச்சி கண்டார்.

இதன்மூலம் நீண்ட நாள்களுக்குப்பின்னர் சானியா பட்டம் வெல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது.

காமராஜரின் அமைச்சர் அப்துல் மஜீத் சென்னையில் மரணம்

காமராஜரின் அமைச்சர் அப்துல் மஜீத் சென்னையில் மரணம்
ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 15, 2009, 14:36 [IST]

சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றிய அப்துல் மஜீத், சென்னையில் நேற்று இரவு மரணமடைந்தார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். 85 வயதாகும் இவர், காமராஜர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

பெரியவர் மஜீத், சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அயனாவரத்தில் உள்ள மகன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அதிகாலை உடல் நலம் மிகவும் பாதிக்கப்படவே உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சென்னையில் வைத்து காலமானார்.

மறைந்த அப்துல் மஜீத்துக்கு பசுலுதீன், சர்பூதீ்ன், ஜியாவுதீன், மைதீன் என்ற 4 மகன்களும், ஷகீனா, பஷீரா என்ற 2 மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

மஜீத்தின் மரணச் செய்தியை அறிந்ததும் மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன் விரைந்து சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று கடையநல்லூருக்கு அப்துல் மஜீத்தின் உடல் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை காலை 10 மணிக்கு கடையநல்லூர் செகன்னா வப்பா(கொத்துவா) பள்ளியில் வைத்து அடக்கம் நடைபெறுகிறது.

மஜீத் மறைவு குறித்து காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் கொடிக்குறிச்சி முத்தையா கூறுகையில்,

எங்கள் கட்சியில் காமராஜர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பெரியவர் மஜித் ஆலோசனைப்படி இம்மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிபணிகளை செய்து வந்தோம்.

இதுபோன்ற ஆலோசனைகளை கூற பெரியவர் இனி இல்லை. எங்கள் கட்சி சார்பில் தூக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது என்றார்.

முன்னாள் அமைச்சர் மஜீத் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர் என பெயரெடுத்தவர் என்று ஊர் மக்கள் மஜீத்துக்கு புகழாரம் சூட்டினர்.

முதல் சிறுபான்மை அமைச்சர்

அப்துல் மஜீத் 1965ம் ஆண்டு முதல் 67 வரை அமைச்சராக இருந்தார். அப்போது அவரது அமைச்சர் பதவியின் பெயர் ஸ்தலத்துறை. அதுதான் பின்னாளில் உள்ளாட்சித் துறை என மாற்றப்பட்டது.

அப்துல் மஜீத், சிறுபான்மைப் பிரிவிலிருந்து அமைச்சரான முதல் பிரமுகர் ஆவார். இதனால் அன்றைய காலகட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் பிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்துல் மஜீத், மஜீத் என இஸ்லாமியர்கள் பெயர் சூட்டியதாக ஊர்ப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் கோஷத்திற்கு எதிராய் பத்வா

பகுஜன் சமாஜ் கட்சியின் கோஷத்திற்கு எதிராக பத்வா வெளியிடப் பட்டுள்ளது உத்திரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் கோஷமான "ஜெய் பீம்" என்பதை முஸ்லீம்கள் சொல்லக் கூடாது என்று உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அராபிக் மத்ரசா ஒன்றில் இன்று பத்வா ஒன்று வெளியிடப்பட்டது. 

வாழ்த்து சொல்வதற்கு மதம் தடையில்லை என்றும் இந்த பத்வா தங்கள் கட்சி உறுப்பினர்களைப் பாதிக்காது என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து கூறினார்.

நடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமாஜ்வாதி கட்சிக்கு இந்த பத்வா உற்சாகமளித்துள்ளது. பகுஜன் கட்சியின் உறுப்பினர்கள் இந்த கோஷத்தைக் கூறுமாறு கட்டாயப் படுத்தப் படுகிறார்கள் என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி கூறினார்.

கொங்கு வேளாள கவுண்டர் பேரவையின் அரசியல் மாநாடு


கருத்தம்பட்டியில் கொங்கு வேளாள கவுண்டர் பேரவையின் அரசியல் மாநாடு தொடங்கியது. கொங்கு வேளாள கவுண்டர்கள் பல்வேறு வகையில் பின்னடைந்துள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்வதற்காகவும் கொங்கு வேளாளர் பேரவை அரசியில் நேரடியகாப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலையில் கொங்கு இன மக்களின் கடவுளாக தீரன் சின்னமலை அறிவிக்கப்பட்டார். குமாரலிங்கேஸ்வரர் குருக்கள் தலைமையில் தேவாரம், திருவாசம் போன்ற திருமறைகள் பாடப்பட்டு தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் நடந்தது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 11 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக இப்பேரவை முன்னர் அறிவித்திருந்தது.

கஷ்மீரில் பன்னாட்டு விமான நிலையம்


ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் பன்னாட்டு விமான நிலையம் நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்த முனையத்தில் விமான சேவையைத் துவக்கி வைத்தார். முதல் சேவையாக ஸ்ரீநகரிலிருந்து துபாய்க்கு ஏர் இந்திய விமானம் தனது பயணத்தைத் துவக்கியது.

துபாய்-ஸ்ரீநகர் வி்மானசேவை கஷ்மீர் மக்கள் வணிக மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும் என்று சோனியா காந்தி கூறினார்.

குறைந்த செலவு விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபாய்க்கு வாரம் ஒரு சேவையை வழங்கும் என்று இந்திய விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேல் கூறினார்.

1989க்கும் முன் கஷ்மீர் ஆசியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விங்கியது. தனி நாடு கேட்டு கஷ்மீரி இயக்கங்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. கடந்த ஆண்டு சுமார் 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் கஷ்மீர் பள்ளதாக்குக்கு வந்து சென்றதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறினர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!