காமராஜரின் அமைச்சர் அப்துல் மஜீத் சென்னையில் மரணம்
காமராஜரின் அமைச்சர் அப்துல் மஜீத் சென்னையில் மரணம்
ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 15, 2009, 14:36 [IST]
சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றிய அப்துல் மஜீத், சென்னையில் நேற்று இரவு மரணமடைந்தார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். 85 வயதாகும் இவர், காமராஜர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
பெரியவர் மஜீத், சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அயனாவரத்தில் உள்ள மகன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று அதிகாலை உடல் நலம் மிகவும் பாதிக்கப்படவே உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சென்னையில் வைத்து காலமானார்.
மறைந்த அப்துல் மஜீத்துக்கு பசுலுதீன், சர்பூதீ்ன், ஜியாவுதீன், மைதீன் என்ற 4 மகன்களும், ஷகீனா, பஷீரா என்ற 2 மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
மஜீத்தின் மரணச் செய்தியை அறிந்ததும் மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன் விரைந்து சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று கடையநல்லூருக்கு அப்துல் மஜீத்தின் உடல் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை காலை 10 மணிக்கு கடையநல்லூர் செகன்னா வப்பா(கொத்துவா) பள்ளியில் வைத்து அடக்கம் நடைபெறுகிறது.
மஜீத் மறைவு குறித்து காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் கொடிக்குறிச்சி முத்தையா கூறுகையில்,
எங்கள் கட்சியில் காமராஜர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பெரியவர் மஜித் ஆலோசனைப்படி இம்மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிபணிகளை செய்து வந்தோம்.
இதுபோன்ற ஆலோசனைகளை கூற பெரியவர் இனி இல்லை. எங்கள் கட்சி சார்பில் தூக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது என்றார்.
முன்னாள் அமைச்சர் மஜீத் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர் என பெயரெடுத்தவர் என்று ஊர் மக்கள் மஜீத்துக்கு புகழாரம் சூட்டினர்.
முதல் சிறுபான்மை அமைச்சர்
அப்துல் மஜீத் 1965ம் ஆண்டு முதல் 67 வரை அமைச்சராக இருந்தார். அப்போது அவரது அமைச்சர் பதவியின் பெயர் ஸ்தலத்துறை. அதுதான் பின்னாளில் உள்ளாட்சித் துறை என மாற்றப்பட்டது.
அப்துல் மஜீத், சிறுபான்மைப் பிரிவிலிருந்து அமைச்சரான முதல் பிரமுகர் ஆவார். இதனால் அன்றைய காலகட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் பிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்துல் மஜீத், மஜீத் என இஸ்லாமியர்கள் பெயர் சூட்டியதாக ஊர்ப் பெரியவர்கள் கூறுகின்றனர்.
0 comments