Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளாக பெண்கள்

Published on: வெள்ளி, 6 பிப்ரவரி, 2009 // , , ,
இரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப் படுவார்கள் என்று இன்று அறிவிக்கப் பட்டுள்ளது.

சுமார் 100 பெண்களை துணை ஆய்வாளர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளோம். நியமனப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நியமனம் முடிந்ததும் அவர்கள் பயிற்சிக்காக அனுப்பப் பட்டு பின்னர் பணியில் அமர்த்தப் படுவார்கள் என்று இரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.  மொத்தம் 1000 துணை ஆய்வாளர்களை நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர்களில் 10 சதவீதம் பெண்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சுமார் 70 ஆயிரம் பேரைக் கொண்ட இரயில்வே பாதுகாப்புப் படையில் 800 பெண்கள் தற்போது பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் காவலர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் போன்ற பொறுப்பிலேயே இருந்து வருகின்றனர். 

உ.பி. தேர்தல் கூட்டணி 11 ஆம் தேதி முடிவு: காங்கிரஸ்

வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது சமாஜ்வாதி ஜனதாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பதை வரும் 11ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கூறினார்.

மாநிலத்தின் 80 நாடாளு மன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தெரிவு செய்து காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பிவிட்டதாகக் கூறிய அவர், கூட்டணி அமைப்பது உறுதியானால் குறைந்தது 30 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் கூறனார்.

பாபரீ மசூதி இடிக்கப்பட்டதற்கு தார்மீகப் பொறுப்பை கல்யாண் சிங் தாமாகவே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அவர் குறித்த கட்சியின் நிலையை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.பி.எல். ஏலம் : பிளின்டாப், பீட்டர்சன் முதலிடம்

இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்துக்கான வீரர்களுக்கு நடந்த ஏலத்தில் இங்கிலாந்தின் முன்னணி வீரர்களான ஆன்ட்ரூ பிளின்டாப் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் மிக அதிக விலை கொடுத்து வாங்கப் பட்டனர்.

கடந்த ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. இதற்குத் தேவையான வீரர்களை ஒவ்வொரு அணியும் ஏலத்தில் வாங்க வேண்டும் என்ற நடைமுறை உருவாக்கப் பட்டு கடந்த ஆண்டு முதல் பின்பற்றப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் இந்திய அணியின் கேப்டன் டோனி அதிகபட்சமாக 6 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இவரை சென்னை சூப்பர் கிங் என்ற அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த ஆண்டுக்கான ஏலம் கோவா தலைநகர் பனாஜியில் இன்று நடைபெற்றது. இதில் பிளின்டாப் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் 1.55 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய ரூபாய் சுமார் 7 கோடியே 35 இலட்சம்) விலை போனார்கள். பீட்டர்சனை பெங்களூ ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், பிளின்டாபை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விலைக்கு வாங்கி உள்ளன.

ஆஸ்திரேலிய பவுலர் ஷான் டெய்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.8 கோடி ரூபாய்க்கும், தென் ஆப்ரிக்காவின் பால் டுமினி மும்பை இந்தியன்ஸ் அணியால் 4.7 கோடி ரூபாய்க்கும், இங்கிலாந்து வீரர் பால் கோலிங்வுட் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ரூ. 1.3 கோடிக்கும் வாங்கப்பட்டனர்.

வெஸ்ட் இண்டீசின் பிடல் எட்வர்ட்ஸ் (டெக்கான் சார்ஜர்ஸ்), ஜெரோம் டெய்லர் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இங்கிலாந்தின் ஓவைஸ் ஷா (டெல்லி டேர்டெவில்ஸ்), ரவி போபரா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இலங்கையின் திலன் துஷாரா (சென்னை சூப்பர் கிங்ஸ்), வங்கதேசத்தின் அஷ்ரபுல் (மும்பை இந்தியன்ஸ்), மோர்டசா (கோல்கட்டா நைட் ரைடர்ஸ்) உள்ளிட்ட வீரர்களும் ஏலம் போனார்கள்.

50 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தது

50 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் உபயோகித்த 9 படகுகளும் கைப்பற்றப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

நேற்று இந்த மீனவர்கள் பாகிஸ்தானின் கராச்சி கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாகவும் இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இரண்டு தினங்களுக்கு முன் இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பரப்பில் வந்து 20க்கும் அதிகமான பாகிஸ்தானிய மீனவர்களைக் கைது செய்து சென்றுவிட்டதாக பாகிஸ்தானிய மீனவர் சங்கம் தெரிவித்திருந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானிய மீனவர்கள் அவ்வப்போது இவ்வாறு கைது செய்யப்படுவது கடந்த ஆண்டின் தொடக்கம் வரை நடந்து வந்தது. பின்னர் இருநாடுகளுக்கும் ஏற்பட்டிருந்த நல்லுறவைத் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் நிறுத்தப் பட்டிருந்தன.

மியான்மரில் குடியரசுத்துணைத் தலைவர்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி மியான்மரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் மியான்மரின் இராணுவத் தலைவர் தான் ஷியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

விவசாயம் மற்று இரயில்வே போக்குவரத்தில் மியான்மர் இந்தியாவின் உதவியைக் கோரியது. இந்திய இரயில் என்ஜின்களை வாங்குவதற்கு மியான்மர் ஆர்வம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அன்சாரி நேற்று ஜெனரல் மெளங் ஆயேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக வெளியுறவுத் துறை அதிகாரி கூறினார்.

தா. பாண்டியன் கார் எரிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் காரை சிலர் தீவைத்து எரித்துள்ளனர். அவரது கார் பெருமளவு சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் நடந்தபோது தா.பாண்டியன் தர்மபுரியில் இருந்தார். இலங்கை பிரச்சனையில் இந்திய அரசையும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்தது மட்டுமின்றி இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக தா. பாண்டியன் கூறியிருந்தது நினைவு கூரத் தக்கது.

புலிகளின் கடற்படைத்தளம் கைப்பற்றப்பட்டது?

விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளத்தைக் கைப்பற்றி விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

சாலையில் நடைபெற்ற சன்டையில் 3 கமாண்டர்கள் உள்பட 15 புலிகள் கொல்லப் பட்டதாகவும் இராணுவம் அறிவித்தது. புலிகள் தரப்பில் இதுவரை உறுதிப் படுத்தப் படவில்லை. இந்த வழியாகவே புலிகளுக்கு ஆயுதங்கள் வந்தனவென்றும் இது இராணுவத்தின் பிடியில் சென்றது புலிகளுக்கு பேரிழப்பு என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இலங்கை கடற்படை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் தகுதி புலிகளுக்கு இன்னமும் இருப்பதாக இராணுவ செய்தியாளர் கூறியுள்ளார்.

"போரை நிறுத்துங்கள்" - இந்திய அரசு கோரிக்கை

நேற்று காலை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இந்திய அரசு கவலை கொண்டிருக்கிறது. இலங்கை அரசு வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது தாக்குதலை நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

இந்தியா தனது செல்வாக்கினால், 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்கும் படிச் செய்தும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. தற்போது மீண்டும் ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது. இன்னும் கூட புலிகளிடமிருந்து பதில் இல்லை. இலங்கை அரசு தனது தாக்குதலை நிறுத்த வேண்டும்.
இரு தரப்பும் போரை நிறுத்தி விட்டுப் பேச முன்வர வேண்டும். இரு கைகளும் சேர்ந்தே ஓசை எழுப்ப முடியும். உயிர்கள் அநியாயமாக பறிபோவது மனதுக்கு வேதனையாக உள்ளது. எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை இந்திய அரசு நிச்சயம் செய்யும்
என்று கூறியுள்ளார்.

"இலங்கை அரசு மீது வழக்கு" - தா. பாண்டியன்

பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசுக்கெதிராக இனப்படுகொலை வழக்கு தொடர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்து அறிவித்துள்ளது.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு நேரில் சென்று பார்வையிடவும் அங்கு உடனடியாக போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

"இலங்கையில் போ‌ர் நிறுத்த‌ம் செ‌ய்த பின்னரே அரசியல் தீர்வு குறித்து பேச வேண்டும்" என்றார் அவர்.

"இலங்கைப் பிரச்சனையில் த‌மிழக அரசு இதுவரை எடு‌த்த முடிவுகள் எதுவும் பலனளிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறிய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தற்போது பதவி விலக மறுக்கின்றார். பன்னாட்டு நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடரலாம் எ‌ன்று அறிவிக்கப்பட்டு‌ள்ளதா‌ல் மனித உரிமைக் கழக வழக்கறிஞர்கள் மூலம் இலங்கைப் பிரச்சினை குறித்து அங்கு வழக்கு தொடரப்படும் ".

ஆயினும், 'எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன் வைக்கமாட்டோம். இலங்கை பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல". என்றார் தா.பா
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!