Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பா.ஜ.க.வுக்கு தேர்தல் நிதி எங்கிருந்து வருகிறது?

Published on: ஞாயிறு, 15 மார்ச், 2009 // , , , , , ,
குஜராத்தின் சில்வசாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிரஸ்டு ஒன்றும், பிரச்சனைகளில் சிக்கிய குஜராத்தைச் சார்ந்த வணிக நிறுவனமும் பா.ஜ.க.வின் தேர்தல் நித பங்களிப்பில் முக்கியப் பங்கு வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை மட்டுமின்றி மேலும் சில மறைமுக உதவியுடன் 2003 முதல் 2007 வரை பா.ஜ.க. தேர்தல் நிதியாக 52.41 கோடி நிதி திரட்டியதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆவணங்கள்படி பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் நிதியில் சில்வசா பொது மற்றும் அரசியல் விழிப்புணர்வு டிரஸ்டு வழங்கும் நிதியே பெரும்பான்மை பங்கு வகிக்கிறது. இந்த டிரஸ்டு பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே நிதி வழங்கியுள்ளதாகவும், வழங்கிய நிதி 9.5 கோடி ரூபாய் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த டிரஸ்டு ஸ்டெரிலைட் குழுமத்துடன் இணைந்த ஒரு டிரஸ்டாகும்.

கடந்த 2000ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சியின் போது இந்தி அரசின் பொதுத்துறை நிறுவனமான பால்கோ நிறுவனம் அனில் அகர்வாலின் ஸ்டெரிலைட் குழுமத்திற்கு விற்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

குஜராத்தின் அத்வாணி குழும நிறுவனங்களும் பாரதீய ஜனதா கட்சிக்குப் பெருமளவில் நிதி அளித்துள்ளது. 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் 4 கோடி ரூபாய் இந்த குழுமம் நிதி அளித்துள்ளது. வீடியேகான் குழுமம் 3.5 கோடியும், டாடா மற்றும் பிர்லா குழுமங்கள் சுமார் 5.63 கோடியும் நிதி அளித்துள்ளன. இவையன்றி சிறிய அளவிலான உதவிகள் செய்ததாக அகீக் கல்வி நிலையம், பால்தேவ் பார்க், ஷாஹ்தரா போன்ற நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1.5 கோடி ரூபாய் நிதி அளித்ததாகக் கூறப்படும் அகீக் கல்வி நிலையத்தின் முகவரியில் கல்வி நிலையம் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.

பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் விமான நிலைய விரிவாக்க ஒப்பந்தங்கள் பெற்ற விஜய் மல்லையாவின் ஷாவாலஸ் குழுமம், GMR குழுமம் மற்றும் பஜாஜ் குழுமம் போன்றவை தலா ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளன.

நிதி வழங்கியவர்கள் என்று பாரதீய ஜனதா கட்சி சமர்ப்பித்த ஆவனங்களில் பெரும்பாலும் நிதி வழங்கியவர்களின் முகவரிகள் குறிப்பிடப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்நாடு: 59 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார் மாநில தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா. அவர் தெரிவித்த செய்திகள் சில:
வாக்காளர் சரிபார்ப்பு பணியை 100 சதவிகிதம் மேற்கொண்டதில் வாக்காளர் எண்ணிக்கை 2004ன் 4.72 கோடியிலிருந்து 4.13 கோடியாக 2009ல் குறைந்துள்ளது.அதாவது 59 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.(12.5%)


மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளை மாற்றவும் 2 அல்லது 3 நாள்களில் அந்தப் பணியை முடிக்கவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் சத்தியகோபால் 18ம்தேதி புதன்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.ஆந்திரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் சிறந்த முறையில் அமல்படுத்தப்படுவதாக மத்திய தேர்தல் ஆணையம் கருத்துத் தெரிவித்துள்ளது. எனவே ஆந்திரத்தில் உள்ளது போல, இங்கும் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படும்.


தேர்தலை அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்தி முடிப்பதில்தான் நான் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் முதல்வர் என் மீது கூறியுள்ள புகார்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
என்றும் நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

வீட்டுக் காவலில் நவாஸ் ஷரீப்!

பாகிஸ்தானின் எதிர்கட்சித் தலைவர் நவாஸ் இன்று வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளார். இது பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

நவாஸ் ஷரீப், அவரது சகோதரர் சபாஷ் ஷரீப் மற்றும் தங்களது கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நசீர் அகமது புட்டா லாஹூரில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கெதிரான பேரணி இன்று நடப்பதாக இருந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

ஆக்லந்தில் இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் மட்டைப்பந்தாட்டத்தில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றி கண்டுள்ளது.

முதலில் மட்டை பிடித்தாடிய இந்தியா 10 ஆட்டக்காரர்களையும் இழந்து 149 ஓட்டங்களே பெற்றது. 74 பந்துகளில் 43 ஓட்டங்கள் (ஆட்டம் இழக்காமல்) பெற்றார் ரோகித் சர்மா. வழக்கமான அதிரடியை வெளிப்படுத்திய சேவாக் 27 பந்துகளில் 40 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இத்துடன் யுவராஜ்(11) தவிர, ஏனைய இந்திய ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒற்றைஇலக்க ஓட்டங்கள் மட்டுமே பெற்று வீழ்ந்தனர். பந்துவீச்சில் நியுசிலாந்து தரப்பில் ரைடர் மூவரை ஆட்டமிழக்கச் செய்தார்.

36.3 சுற்று பந்துவீச்சில் 149 ஓட்டங்கள் பெற்று எளிதான இலக்கை இந்தியா அளிக்க, இந்திய இலக்கை பதட்டமின்றி எதிர்கொண்ட நியூசிலாந்து இருவரை மட்டுமே இழந்து வெற்றிகண்டது.
ஆட்டநாயகன் ரைடர் 49 பந்துகளில் 63 ஓட்டங்களும், குப்டில் 50 பந்துகளில் 57 ஓட்டங்களும் பெற்றனர்.

இதற்கு முன் நடைபெற்ற ஏனைய நான்கில், மூன்று ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது ஒருநாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

கத்தோலிக்க மதகுருக்களுக்கு எதிரான செக்ஸ் குற்றச்சாட்டு அதிகரிப்பு

அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க மத குருக்களுக்கு எதிராகக் கூறப்படும் செக்ஸ் குற்றச் சாட்டுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக கத்தோலிக்கத் திருச்சபையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

2008ஆம் ஆண்டு கூறப்பட்ட இத்தகைய குற்றச் சாட்டுகள் தொடர்பாக கத்தோலிக்கத் திருச்சபை 436 மில்லியன் அமெரிக்க டலார்கள் செலவு செய்யப்பட்டதாகவும், இந்தத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளில் பாதிக்கப் பட்டவர்களில் ஐந்தில் ஒருவர் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்று அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுமார் 200 தேவாலய நிர்வாகப் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின்போது தெரிய வந்துள்ளது.

2008ஆம் ஆண்டு சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் கடந்த ஆண்டைவிட அதிகரித்தாலும் நஷ்ட ஈடாக வழங்கப்பட்ட தொகை 2007ஆம் ஆண்டை விட 29 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 2007ஆம் ஆண்டு சுமார் 500 பேருக்கு 660 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக வழங்கப் பட்டதெனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மருமகளைக் கொன்று காவல்துறையிடம் சரணடைந்த மாமியார்!

ஒரு பெண் தன் மருமகளைக் கொன்றுவிட்டு காவல்துறையில் சரனடைந்தார். கொல்கத்தாவில் வெள்ளிக் கிழமையன்று இச்சம்பவம் நடந்தது.

ஒரிசாவின் ரூர்கேலாவைச் சார்ந்த தீபக் மென்பொருள் வல்லுநராக கொல்கத்தாவில் பணி புரிந்து வந்தார். அங்கு திப்யாஞ்சலி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து திருமணம் செய்தார். அவர்களுடன் தங்குவதற்காக தீபக்கின் தாயார் ஸ்நேகலதா மலிக் கடந்த சில தினங்களுக்கு முன் வந்தார். கொல்கத்தாவின் புறநகரான ராஜர்ஹத் பகுதியில் இவர்கள் தங்கியிருந்தனர்.

மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே சுமுகமான உறவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றி அடுக்களையில் இருந்த கத்தியால் தன்னுடைய மருமகளைக் குத்திக் கொலை செய்தார். திப்யாஞ்சலி அதே இடத்தில் மரணமடைந்தார். அதன் பிறகு ஸ்னேகலதா காவல்துறையிடம் சரனடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

வாக்காளர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. பணம்: விசாரணைக்கு உத்தரவு

உத்திரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ரா வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற காட்சி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானதை அடுத்து, மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாரணாசியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மக்களுக்கு பணம் கொடுப்பது தனக்குத் தெரிய வந்தவுடன், வாரணாசி மாவட்ட நீதிபதி இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தான் கேட்டுள்ளதாக உத்திரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி பிஷ்னோய் செய்தியாளர்களிடம் கூறினார். மாவட்ட நீதிபதி அளிக்கும் அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வியாழக் கிழமை ஒளிபரப்பப்பட்ட மற்றொரு தொலைக்காட்சி காட்சியில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் தலைமையேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சித் தொண்டர் வாக்களர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. சனிக் கிழமைக்குள் இதற்கு விளக்கம் அளிக்கக் கோரி அக்கட்சிக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

டில்லியில் சாமியாரைத் தாக்கவிட்டு கோயிலில் கொள்ளை

டில்லியில் உள்ள மெஹ்ராலி பகுதியில் வியாழக் கிழமை இரவு சாமியாரைத் தாக்கிவிட்டு, கோயிலில் இருந்த சாமி சிலைகளின் தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப் பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.

வெள்ளிக் கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மெஹ்ராலி பகுதியில் உள்ள மண்டி கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

தங்களுடைய நண்பனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கோயிலைத் திறக்குமாறு கொள்ளைக் கும்பல் சுபாஷ் கிரி மஹராஜ் என்ற சாமியாரிடம் கோரினர். அவர் கோயிலைத் திறந்ததும் அவரைக் கத்தியால் தாக்கிவிட்டு, சிலைகளுக்கு அணிவிக்கப் பட்டிருந்த ஆபரணங்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.

கையில் காயத்துடன் இருந்த சாமியாரை அந்தக் கிராமத்தவர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புஷ் மீது ஷூ வீசியவருக்கு மூன்று வருட சிறை

முந்தஸர் அல் ஜைதி. தொலைக்காட்சி நிருபரான இவர், தன்ஆட்சியின் கடைசி காலத்தில் பாக்தாத் வருகை தந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மீது ஷு வீசியதால் ஒரே நாளில் புகழடைந்தவர்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் புஷ் பேசிக்கொண்டிருக்கையில் முந்தசர் திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி, நாயே இதுதான் ஈராக் மக்கள் உனக்குத் தரும் கடைசி முத்தம் என்று கூறி அடுத்தடுத்து எறிந்தார். ஷூ தன் மீது படாமல் குனிந்து தப்பினார் புஷ்.

உலகையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது இந்த சம்பவத்திற்குப் பிறகு ஜைதி கைது செய்யப்பட்டாலும் அரபு நாடுகளி்ல் அவர் நாயகனாகி விட்டார். இச்சம்பவத்தை விசாரித்த இராக் நீதிமன்றம் முந்தஸருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

முலாயம் சிங்குக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அறிவிக்கை!

லக்னோவில் நடைபெற்ற ஹோலி பண்டிகை விழாவொன்றில் சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் தன் கட்சித் தொண்டர்களுக்கு ஆளுக்கொரு நூறு ரூபாய் கொடுத்த விவகாரம் பிரசினையாகி உள்ளது.

இந்தக் காட்சிகள் தொ.கா ஒன்றில் வெளியானது. இதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு எதிர்கட்சிகள் எடுத்துச் சென்றன. இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கமளிக்குமாறு முலாயம்சிங் யாதவ்வுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் - திரினாமுல் காங்கிரஸ் தொகுதி உடன்பாடு

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் திரினாமுல் காங்கிரஸ் காட்சிக்கும் இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்யப் பட்டுள்ளது. மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்களும் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளது.

மம்தா பானர்ஜிக்கும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் கேசவ் ராவுக்கும் இடையே நடைபெற்ற இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின் போது மூவர் கொலை!

பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது நடந்த பல்வேறு வன்முறைகளில் மூவர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமுற்றுள்ளனர்.

சப்ரா மாவட்டத்தில் இரு சாதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கோவிந்து யாதவ் மற்றும் நாராயன் யாதவ் என்ற இரு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். ஆறுபேர் காயமுற்றனர்.

ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மற்றொரு நிகழ்வில் ஒரு குழந்தைக்கு குண்டு பாய்ந்து காயமுற்றுள்ளது. மேலும் 16 பேர் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் காயமுற்றனர்.

நவடா மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக ஒரு இளைஞரது வீட்டில் இருந்த மரத்தை வெட்ட அந்த இளைஞர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜெர்மனியில் 17 வயது மாணவன் சுட்டு 15 பேர் பலி

ஜெர்மனியில் 17 வயது மாணவன் ஒருவன் தன்னுடைய பழைய பள்ளி வளாகத்திற்கு துப்பாக்கியுடன் சென்று 15 பேரைச் சுட்டுக் கொன்றான். இச்சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டிம் க்ரெட்ஸ்மர் என்ற அந்த மாணவன் தான் முன்பு பயின்ற ஆல்பர்வில்லே மேல்நிலைப் பள்ளிக்கு புதன் கிழமை காலை 9.30 மணிக்குச் சென்றான். பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்களை அவர்களின் தலையைக் குறிவைத்துச் சுட்டான். இதில் எட்டுச் சிறுமிகள், ஒரு சிறுவன் மற்றும் மூன்று ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மாணவன் காவல்துறைக்குத் தகவல் தந்ததை ஒட்டி காவலர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளியிலிருந்து தப்பிச் சென்ற அவன் வழியில் ஒருவரைக் கொன்று விட்டு, வழியிலிருந்த ஒரு காரைக் கடத்திச் சென்றான். அந்த காரின் டிரைவரை பணயக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டான்.

பள்ளியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வென்டிங்கன் என்னும் ஊருக்கு வந்தான். அங்கு தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியில் இருந்த கார் விற்பனை நிலையத்தில் இருவரைக் கொலை செய்தான். காவலர்கள் அவனைச் சுற்றி வளைத்து அவனது காலை நோக்கிச் சுட்டனர். கீழே விழுந்த அவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மரணமடைந்ததாகக் காவல்துறை கூறுகிறது.

அந்த மாணவனின் வீட்டைச் சோதனையிட்டதில் அவனது வீட்டில் சமார் 16 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியில் மாணவர்கள் பள்ளிகளில் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு மாணவன் 11 பேரை சுட்டுக் கொன்றான். 2002ஆம் ஆண்டில் பள்ளி ஒன்றில் ஒரு மாணவன் 17பேரைச் சுட்டுக் கொன்றான்.

சாம்பியன்ஸ் டிராபி, இலங்கையிலிருந்து தென்.ஆப்ரிக்காவிற்கு மாற்றம்?

Published on: புதன், 11 மார்ச், 2009 // ,
வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற இருக்கும் இ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி பருவநிலை காரணமாக தென் ஆப்ரிக்கா மாற கூடிய வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.எனினும் இது குறித்து இறுதி முடிவு எடுக்க இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அச்செய்தி குறிப்பு தெரிவிக்கிறது

ம.தி.மு.கவிலிருந்து மு.கண்ணப்பன் விலகல்

மதிமுகவிலிருந்து கட்சியின் மூத்த தலைவரும், சட்ட சபை மதிமுக தலைவருமான மு. கண்ணப்பன் விலகிவிட்டார். மேலும், தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்து கட்சியின் பொது செயலாளர் வைகோவிற்கு அனுப்பிவிட்டார். சில மாதங்களாக வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி நிகழ்ச்சியில் விலகியிருந்த அவர், சென்ற மாதம் முதல்வர் கருனாநிதியை உடல்நலம் விசாரிக்க சென்ற பொழுது, வைகோவின் அனுமதி பெறாமல் சென்றதாகவும், இதனை தொடர்ந்து வைகோவுடனான கருத்து வேற்பாடு உச்சக்கட்டத்தை அடைந்ததாகவும், இதனையடுத்து அவர் விலகல் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே மதிமுகவிலிருந்து மூத்த தலைவர்கள், எல்.ஜி மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் போன்றோர் விலகிய நிலையில், கண்ணப்பன் விலகல் அக்கட்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கிரிக்கெட்: நியூசிலாந்தில் இந்தியா தொடர் வெற்றி

ஹாமில்டன் நகரில் இன்று நடைபெற்ற நான்காவது ஒருதினப் போட்டியிலும் அபாரமாக வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது.
முதலில் மட்டைப்பிடித்தாடிய நியூசிலாந்து 47 பந்துவீச்சு சுற்றுகளில் ஐந்து ஆட்டக்காரர்கள் இழப்புக்கு 270 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் மெக்கல்லம் அதிகபட்சமாக 77 ஓட்டங்களும் மெக்கிலஷான் 56 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜாஹிர்கான் ஒரு ஆட்டக்காரரையும் இஷாந்த் சர்மா இருவரையும், யுவராஜ் சிங், யூசுஃப் பதான் தலா ஒருவரையும் ஆட்டமிழக்கச் செய்தனர்.

அதன்பின் ஆடிய இந்தியா டக்வெர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட 201 ஓட்டங்களை 24 சுற்றுகளிலேயே எந்த இழப்புமின்றி பெற்று எளிதாக வென்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் கம்பீர் (67 பந்துகளில் 63 ஓட்டங்கள் - ஆறு நான்குகள்) சேவாக் - 74 பந்துகளிலேயே 125 ஓட்டங்கள் அதில் 14 நான்குகள் 6 ஆறுகள் பெற்று அசத்தினர். சேவாக்குக்கு இது 11வது ஒருநாள் சதமாகும். கம்பீர் தன் 15ஆவது அரைச்சதத்தைப் பெற்றார். 60 பந்துகளில் சதம் கடந்த சேவாக், இதே நியூசிலாந்துக்கெதிராக 1998ல் 62 பந்துகளில் அதிவேக சதமடித்திருந்த அஸ்ஹருத்தீனின் சாதனையை தகர்த்து ஒருதினப் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

இலங்கை: மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல்

Published on: செவ்வாய், 10 மார்ச், 2009 // , , , , ,
இலங்கையில் மட்டாரா என்னுமிடத்தில் மசூதி அருகே மிலாடி நபி விழா கொண்டாடப்பட்ட போது தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தபால் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் மஹிந்தா விஜயசேகராவுடன் 3 அமைச்சர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்,15 பேர் பலியாகியுள்ளனர்.தாக்குதலில் தெற்கு பிராந்திய முதல்வர் ஸ்ரீசேனாவும் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தும் அமைச்சர்களை குறிவைத்தே இத்தாக்குதலை விடுதலைப்புலிகள் நிகழ்த்தியுள்ளதாக இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்

'பார்பி'க்கு வயது 50!

சிறு குழந்தைகள் முதல் பதின்ம வயதினர்ர் வரை பெண்குழந்தைகளின் கனவுப் பொம்மையாக இருந்து வரும் பார்பி, 50 ஆண்டுகளைக் கடந்துள்ளது. 50 ஆண்டுகளைக் கடந்தாலும் அதன் செல்வாக்கு உலகின் பல நாடுகளின் குழந்தைகளிடையே மேன்மேலும் பெருகி வருவதாக இந்தப் பொம்மையை உருவாக்கிய மேட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்விடுதலையை வலியுறுத்தும் ஒரு சின்னமாக இந்தப் பொம்மையை இதன் ஆதரவாளர் சிலர் வர்ணித்தாலும் பாலியல் சின்னமாக பெண்களை நிலை நிறுத்தும் கருவியாக இந்தப் பொம்மை இருப்பதாகவும் சாத்தியமில்லாத உடலியல் அம்சங்களைக் கொண்டு தவறான ஓர் எண்ணத்தைக் குழந்தைகளிடம் இது விதைப்பதாகவும் இதன் எதிர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்துள்ளனர்.

எதிர்ப்புகள் பல இருப்பினும், போட்டிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பல பொம்மைகள் இருந்தாலும் 50 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ள பார்பி, மேட்டல் நிறுவனத்தைப் பொறுத்தவரை நல்ல லாபம் ஈட்டித் தந்துள்ளது. இப்பொம்மையின் சராசரி விலை கிட்டத்தட்ட 30 அமெரிக்க டாலராக இருக்கிறது. மிக உயர்ந்த விலையாக 8000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொம்மையும் சந்தையில் விற்பனையில் உள்ளது.

'அமெரிக்கக் கடற்படைக் கப்பலைச் சீனா அச்சுறுத்தியது' - அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படைக் கப்பல் 'தி இம்பெக்கபிள்' சீனாவின் ஹைனன் தீவுக்கருகே பன்னாட்டுக் கடற்பரப்பில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சீனாவைச் சேர்ந்த ஐந்து கப்பல்கள் அமெரிக்கக் கப்பலுக்கு மிக அருகே சூழ்ந்து கொண்டு அச்சுறுத்தியதாக அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது.

இது புதிதில்லை என்றும் இதே போல் சீனாவைச் சேர்ந்த கப்பல்கள் அமெரிக்கக் கப்பலை அச்சுறுத்துவது தொடர்கிறது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து சீனா அதிகாரப்பூர்வ பதில் ஏதும் அளிக்காத நிலையில் பெண்டகனில் இருக்கும் சீன ராணுவத் தொடர்பு மையத்திடம் கடும் கண்டனம் கையளித்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பன்னாட்டுக் கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபடும் கடற்படைக் கப்பல்களை இதுபோல் இன்னொரு நாட்டுக் கப்பல்கள் அச்சுறுத்துவது கவலைக்குரிய நடவடிக்கையில்லை என்றாலும், அமெரிக்காவின் பொறுமையைச் சோதித்து தாக்குதலுக்குச் சீண்டும் வகையில் சீனக் கப்பல்கள் நடந்து கொண்டன என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜப்பான் கரையருகே சரக்குக் கப்பல்கள் மோதல்!

ஜப்பானின் பல தீவுகளில் ஒன்றான இசு ஒஷிமோ தீவின் கரையருகே இரு சரக்குக் கப்ப்பல்கள் மோதிக் கொண்டன. இவற்றில் ஒன்று தென்கொரியாவைச் சேர்ந்தது என்றும் இன்னொன்று பனாமாவைச் சேர்ந்தது என்றும் தெரிய வந்துள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் 16 ஊழியர்கள் இருந்ததாகவும், கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பானிய கரையோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

மோதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் காணாமல் போன தென்கொரியக் கப்பலைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. பனாமாவைச் சேர்ந்த கப்பல் பலத்த சேதத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அக்கப்பலில் இருந்தோர் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!