Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"ஒன்றுபடாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்" - கருணாநிதி

Published on: திங்கள், 23 பிப்ரவரி, 2009 // , , , , , ,
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று மாலை வெளியிட்ட உருக்கமான அறிக்கையில் வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் இணக்கமாகச் செல்லும்படி உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் துவங்கிய அறவழிக்கிளர்ச்சியில் தாங்களும் ஓரணியில் வந்து நிற்பதாகக் கூறிவிட்டு ஆரம்பத்திலேயே அந்த அணியைச் சிதைக்க, இலங்கைத் தமிழர் பிரச்னையை தங்கள் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள இரண்டு, மூன்று நண்பர்கள் ஈடுபட்டதை தமிழ்நாடு நன்கறியும். திமுக காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகளுக்கு அதில் தொடர்பு இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு தங்களுக்கென தனிவழி வகுத்துக் கொண்டவர்கள்.


அந்த நண்பர்களுக்கு இப்போது இலங்கையில் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல. அந்த கோஷத்தை வைத்து தமிழகத்தில் தங்கள் அரசியலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்.அதனால் தான், தி.மு.க., - காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டணியை உடைப்பதற்கு மக்களிடத்தில் தவறான பிரசாரங்களைச் செய்தும், யார் தமிழகத்தில் எந்தவொரு காரியத்திற்காக அமைதியாக கிளர்ச்சி நடத்தினாலும், அங்கே போய் புகுந்துகொண்டு அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, அதை பூதாகாரமாக ஆக்கி, திமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று கனவு காணுகின்றனர்.
எதிர்பாராத விதமாக திடீரென துருதிர்ஷ்டவசமாக வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் அவர்களுக்குப் பிரதான ஆயுதமாகக் கிடைத்திருக்கிறது.


அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு, இன்னும் தையல் பிரிக்காத நிலையில், தினசரி உடல்நலிவோடு மருத்துவமனையில் இருக்கிற என் மனம் நோகும்படி, என்னென்ன காரியங்களை இந்த ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடப்படுகின்றன என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். இதற்கு வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் பலியாகிவிடக்கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள். அவர்கள் தங்களுக்கிடையே இடையே ஏற்பட்டுள்ள கசப்பை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நான் தொடர்ந்து வேண்டிக் கொண்டுவருகிறேன். இந்த அரசு அடித்தட்டிலே உள்ள ஏழை எளிய மக்களுக்கு எல்லா வகையான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்பது தான்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் செய்யும் முயற்சிகளுக்கு அறிந்தோ, அறியாமலோ பலியாகிவிடக்கூடாது. இரு தரப்பும் இந்த அரசில் சகோதரர்கள் போல ஒன்றுபட்டு நற்பணி புரிய வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், பல நீதிபதிகளும் ஒரு சுமுகமான சூழ்நிலை இந்த இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்களை மீண்டும் போராட தூண்டிக் கொண்டிருக்கும் சிலர் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.


இந்தக் கும்பலைப் பற்றி கவலைப்படாமல் ஒன்றுபடுங்கள்; ஜனநாயக நெறிகளை உயர்வடையச் செய்ய ஒத்துழையுங்கள்; நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்க ஆர அமர அமர்ந்து பேசி நல்ல முடிவுகளை எடுப்போம்.அப்படி ஒன்றுபட முடியாவிட்டால், நீங்கள் ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில், மருத்துவமனையில் இருக்கிற நான் உண்ணாநோன்பு இருப்பதாக முடிவு செய்திருக்கிறேன்.அந்த முடிவை நான் மேற்கொள்வதா, இல்லையா என்பதை நீங்கள் அளிக்க இருக்கிற விடையின் மூலம் தெளிவு பிறந்து, அதற்கான தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.


முதலமைச்சர் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு வரன் தேடித்தரும் மகளிர் கல்லூரி

ஜம்செட்பூர் மகளிர் கல்லூரி அந்நகரின் புகழ் பெற்ற கல்லூரிகளுள் ஒன்றாகும். கடந்த ஆண்டு அக்கல்லூரி தன்னாட்சி அதிகாரம் பெற்றது. படிப்பை முடித்த மகளிருக்கு திருமணத்திற்காக வரன் தேடித்தரும் பொறுப்பை தானே ஏற்க அக்கல்லூரி முன்வந்துள்ளது. அதற்காக சுயம்பார் என்ற அமைப்பை அது தொடங்க உள்ளதாக கல்லூரி முதல்வர் சுக்லா மொஹந்தி தெரிவித்துள்ளார். இது அக்கல்லூரியின் சமூகவியல் துறையின் யோசனையாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வரதட்சணை கோராத மாப்பிள்ளைகளின் விண்ணப்பங்களே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற கல்லூரி முதல்வர், தன் பெண்பிள்ளைகள் படிப்பில் சிறக்க பெற்றோர் ஆர்வங்காட்டுவதற்காகவே 'படிப்பை முடித்திருக்கவேண்டும்' என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டதாகக் கூறினார்

பெண்பிள்ளைகளின் படிப்புக்கு பொறுப்பேற்கும் நாமே அவர்களின் பிற்கால நல்வாழ்வுக்கும் ஏன் உதவக்கூடாது என்று தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்த யோசனை என்றார் கல்லூரி முதல்வர்

'போர் நிறுத்தத்துக்குத் தயார்'- புலிகள் அறிவிப்பு

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தற்போது நடந்துவரும் கடும் சண்டையால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போர் நிறுத்தத்துக்குத் தாங்கள் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இவ்வறிவிப்பை புலிகளின் அரசியல் தொடர்பாளர் நடேசன் ஐநாவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தயாராக இருந்தாலும் ஆயுதங்களைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் போர் நிறுத்தத்தை இலங்கை இராணுவம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் புலிகள் ஆயுதங்களைக் கைவிடாமல் போர் நிறுத்தத்துக்கோ சமாதானப் பேச்சுகளுக்கோ இடமில்லை என்று இலங்கை இராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

மாபெரும் இன அழிப்பைச் செய்துவரும் இலங்கை இராணுவத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் அமைதி காப்பது வியப்பளிப்பதாக நடேசன் கூறியுள்ள போதும், புலிகள் அப்பாவிப் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாலேயே உயிரிழப்புகள் நேரிடுவதாக உதய நாணயக்காரா பதிலளித்துள்ளார்.

ஏ.ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் விருது!

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை அமைப்பாளர் ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டுள்ளது. ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஆங்கிலப் படத்திற்கு ரகுமான் அமைத்த இசையினால் இவ்விருது இவருக்கு வழங்கப்படுகிறது.

இதற்கு முன் இதே படத்திற்கு இவர் அமைத்த இசைக்காக கோல்டன் குளோப், பாஃப்டா போன்ற விருதுகளை இவர் வென்றெடுத்திருந்தார். இந்தியர் ஒருவர் ஆஸ்கர் விருதினைத் தட்டிச் செல்வது இதுவே முதன்முறையாகும்.

மும்பை சேரிப் பகுதியில் பிறந்த ஒரு சாதாரண சிறுவன் அதிர்ஷ்ட விளையாட்டு மூலம் கோடீஸ்வரனாக மாறுவதும் அதன் பின் உள்ள அவனது சோகமான வாழ்க்கைப் பின்னணியும் ஸ்லம்டாக் மில்லினியர் படத்தின் கதையாகும்.

இந்தியா கோல்டன் 50: 50 பைசாவில் தொலைபேசலாம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3 ஜி' சேவை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது. இதன்படி இந்தியாவின் எந்த பகுதிக்கும் 50 காசுகளில் பேசும் 'இந்தியா கோல்டன் 50' எனும் திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் துவக்கப்படுகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் இச்சேவையை அறிமுகப்படுத்தினார். 3 ஜி சேவையில் உள்ள 'வீடியோ கால்' மூலம் முதல்வரும், தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவும் பேசிக் கொண்டனர்.

இந்தியாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒன் இண்டியா' திட்டம் போல், மற்றொரு திட்டம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 'இண்டியா கோல்டன் 50' என்ற பெயரில் அறிமுகமாகிறது. இந்தியாவில் எங்கிருந்தும் 50 பைசாவில் பேச வாய்ப்பளிக்கும் இந்த திட்டம் மக்கள் பயன் பாட்டிற்கும், பி.எஸ்.என்.எல். வளர்ச்சிக்கும் உதவிடும். கருணாநிதி என்றைக்கும் ஏழை எளியோரின் அன்பனாக, பாட்டாளி மக்களின் தோழனாக இருப்பான். இந்த அரசை நீடிக்க விடுங்கள், மத்திய அரசை வாழ விடுங்கள், மத்திய, மாநில அரசுகளை ஒன்றுபடுத்தியிருக்கும் ஒருமைப்பாட்டை காப்பாற்றுங் கள், இறையாண்மையை காப்பாற்ற முன்வாருங்கள், வன் முறைகளால் நாட்டில் உள்ள நன்முறைகளை கெடுக்காதீர்கள்.
என்று முதலமைச்சர் பேசினார்

கடந்த 19 மாதங்களில் இத்துறையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2006-07ல் 13 சதவீதமாக இருந்த தொலை அடர்த்தி தற்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் 70 லட்சம் இணைப்புகள் வழங் கப்பட்டன. ஆனால், கடந்த ஜனவரி மாதத் தில் அதிகபட்சமாக 1.5 கோடி தொலைபேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல் மூலம் வழங் கப்பட்டுள்ளன. இந்த '3 ஜி' சேவை ஏற்கனவே பி.எஸ்.என்.எல் - எம்.டி.என்.எல் மூலம் துவக்கப்பட்டு, வர்த்தக ரீதியிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள '3 ஜி' சேவை வரும் ஏப்ரல் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துவிடும். மற்ற மாநிலங்களிலும் விரைவில் இச்சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அமைச்சர் ராஜா பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பி.எஸ்.என்.எல்., நிறுவன தலைவர் குல்தீப் கோயல் பேசுகையில்
சென்னையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த '3 ஜி' சேவை விரைவில் மற்ற நகரங்களிலும் அறிவழங்க நோக்கியா, சாம்சங், சோனி மொபைல் நிறுவனங்கள் மற்றும் டேட்டா கார்டுகள் வழங் கும் நிறுவனங்களுடனும் ஒப் பந்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 50 லட்சம் '3 ஜி' இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


'3 ஜி' சேவைக்கு தனி 'சிம் கார்டு' என்றும் அவர் தெரிவித்தார்

நெருக்கடியில் டிராவல்ஸ் நிறுவனங்கள்!

நெருக்கடியில் டிராவல்ஸ் நிறுவனங்கள்!


கோவை, பிப். 21: சர்வதேச நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தகவல் தொழில் நுட்ப (ஐடி) நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு வழங்கி வந்த இலவச வாகன போக்குவரத்து வசதியை ரத்து செய்ய துவங்கியுள்ளது. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு கார்களை இயக்கி வந்த டிராவல்ஸ் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா வங்கிகளில் ஏற்பட்ட சரிவு, பொருளாதார மந்த நிலைக்கு காரணமாக அமைந்தது. இதனால் அமெரிக்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டன. அமெரிக்கா ஐடி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் பணிகளை குறைத்து வருகின்றன. இதனால் கோவையில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான பணி வரத்து கடுமையாகப் பாதித்துள்ளன. இப் பிரச்னையில் இருந்து பெரிய நிறுவனங்களும் தப்பவில்லை.

ஆள்குறைப்பு, அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஐடி நிறுவனங்கள் மேற்கொள்ளத் துவங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஊழியர்களுக்கு வழங்கி வந்த இலவச வாகனப் போக்குவரத்து வசதியை பல நிறுவனங்கள் ரத்து செய்துள்ளது.

கோவை சரவணம்பட்டி, ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை வீட்டில் இருந்து அழைத்து வரவும், பணி முடிந்தவுடன் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடும் வேலையில் ஏராளமான டிராவல்ஸ் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஐடி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இப் பணியை டிராவல்ஸ் நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தன.

இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்த சில ஐடி நிறுவனங்கள், தங்களுக்கு வாகன போக்குவரத்து வசதி தேவையில்லை என அதிரடியாக அறிவித்துள்ளன. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் டிராவல்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள்.

"கடந்த ஒரு மாதமாகவே கார்களை வாடகைக்கு எடுப்பதை ஐடி நிறுவனங்கள் வெகுவாகக் குறைத்துவிட்டன. ஐடி நிறுவனங்களுக்கு ஓட்டுவதற்காக வாங்கப்பட்ட சொகுசு கார்களையும், வேன்களையும் வெளி வாடகைக்கு இயக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்' என்கிறார் சரவணம்பட்டி உள்ள தனியார் ஐடி நிறுவனங்களுக்கு கார்களை இயக்கும் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன்.

"ஐடி நிறுவனங்களுக்காக கார்களை ஓட்டும்போது நல்ல லாபம் கிடைத்தது. தற்போது கார்களை வாடகைக்கு எடுப்பதை ஐடி நிறுவனங்கள் குறைத்துக் கொண்டிருப்பதால் கிடைக்கும் லாபம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

ஐடி நிறுவனங்களுக்காக இயக்கலாம் என்ற எண்ணத்தில் வங்கிகளில் கடன் பெற்று, கார்களை வாங்கிய டிராவல்ஸ் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

ஓராண்டுக்குள் ஐடி நிறுவனங்களின் நிலையை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னரே ஐடி நிறுவனங்களை நம்பி இருக்கும் டிராவல்ஸ் தொழிலும் உயிர் பெறும்' என்றார் மற்றொரு தனியார் டிராவல்ஸ் நிறுவன அலுவலர் கண்ணன்.

சீனா: நிலக்கரிச் சுரங்கம் வெடித்து 74 பேர் பலி

Published on: ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009 // , , , , ,
சீனாவின் சான்க்ஸி மாகாணத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட பெருவெடிப்பில் சிக்கி 74 பேர் பலியாகியுள்ளனர். 114 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலக்கரிச் சுரங்கத்தில் சுமார் 400க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ, பிரதமர் வென் ஜிபாவோ மீட்புப்பணிகளை முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஒரு வருட காலத்தில் இது பெருவிபத்தாகக் கருதப்படுகிறது.

இந்தியா: வாகனம் ஓட்டும்போது தொலைபேசினால் ரூ.5000 அபராதம்

வாகனம் ஓட்டும் போதும் கைபேசியில் பேசுவது அதிகரித்து வருவதால ஏராளமான விபத்துகள் நடக்கின்றன; உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வண்டி ஓட்டும் போது தொலை பேசினால், முதல் முறையாக 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை அதே குற்றத்தைச் செய்தால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை இதே குற்றம் தொடர்ந்தால் 5,000 ரூபாய் அபராதத்தோடு, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்ற சட்டத்தை மத்திய அரசு யோசித்து வருகிறது.


இதற்கு வகை செய்யும் விதமாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குழு ஏற்கனவே இதற்கு பரிந்துரை அளித்துள்ள நிலையில், சட்டத்தைக் கடுமையாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கார் ஓட்டும் போது தொலைபேசினால், சில மாநிலங்களில் 100ல் இருந்து 300 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகை சிறிதாக இருப்பதால், அதை யாரும் பொருட்படுத்துவது இல்லை. இதன் காரணமாகவே, சட்டத்தைக் கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஒரிசாவில் வேன் மீது இரயில் மோதி 13 பேர் பலி

ஒரிசாவில் கல்யாண நிகழ்விற்குச் சென்று கொண்டிருந்த வேன் மீது இரயில் மோதி 13 பேர் பலியானார்கள்.

ஒரிசா மாநிலம் பார்கர் நகருக்கு அருகில் ஆளில்லா கிராசிங்கில் இன்று மாலை 4 மணி அளவில் இச்சம்பவம் நடந்தது. மஹிந்திரா பொலிரோ வாகனத்தில் கல்யாண நிகழ்விற்குச் சென்ற மணப்பெண் உள்பட 13 பேர் பலியானார்கள். மேலும் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட அருகில் இருந்த கிராம மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், அந்த இரயிலை அங்கிருந்து விட மறுத்து நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரிசாவில் அடுத்தடுத்து 10 நாட்களுக்குள் நடக்கும் இரண்டாவது இரயில் விபத்து இது என்பது குறிப்பிடத் தக்கது.

ராஜ் தாக்கரேவை கைது செய்ய நீதிமன்ற ஆணை

வட இந்தியாவில் கொண்டாடப்படும் 'சாட்' என்னும் திருவிழாவைப் பற்றி தவறான கருத்து கூறியதாக, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தக்கரே மீது, முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராஜ் தாக்கரே இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிந்திர குமார் சின்கா, வழக்கை முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றினார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்சூரத், கடந்த டிசம்பர் மாதம் தாக்கரேவுக்கு அறிவிக்கை அனுப்பியிருந்தார். ஆனால், தாக்கரே முன்னிலையாகவில்லை. அதனால் அவருக்கு நீதிபதி கைது ஆணை பிறப்பித்துள்ளார்.

திருச்சியில் புதிய விமானநிலைய முனையம் திறப்பு

திருச்சியில் புதியதாகக் கட்டப்பட்ட விமானநிலைய முனையத்தை நடுவண் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு மத்திய தகவல்-தொழிற்நுட்பத்துறை அமைச்சர் ராஜா தலைமை வகித்தார். ஒருஇலட்சத்து எட்டாயிரம் சதுர அடி பரப்பளவில் இப்புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எட்டாயிரம் சதுர அடி ஓடுபாதையாக உள்ளது. விரைவில் ஓடுதள அளவு பத்தாயிரமாகவும், பின்னர் படிப்படியாக பன்னிரண்டாயிரம் சதுர அடியாகவும் விஸ்தரிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
வளர்ந்துவரும் பெருநகரான திருச்சியில் பிரம்மாண்டமான விமானநிலையம் அமைய அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.

மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் ரகுபதி, தமிழக அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், திருச்சி மக்களவை உறுப்பினர் கணேசன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ்ஸின் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

கோவை சிறையில் கைதிகள் சிறைக்காவலர் இடையே மோதல்

கோவை சிறையில் கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதில் 8 சிறைக்காவலர்கள் உள்பட15 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலசுப்ரமணி, சுப்ரமணியன், செந்தில் குமார் ஆகிய மூன்று சிறைக்காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு இலேசான காயம் என்பதால் புற நோயாளியாகவே சிகிச்சப் பெற்று திரும்பியதாகவும் சிறைக் கண்கானிப்பாளர் கோவிந்தராஜ் கூறினார்.

சிறையில் உள்ள சுமார் 1500 பேருக்கும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் போட்டுக் காட்டியதாகவும், படம் முடிவடைந்தவுடன், அவரவர் செல்லுக்கு உடனே திரும்ப வேண்டும் என்று கூறியதால் ஆத்திரமடைந்த கைதிகள் அவர்களுடை சன்டையில் ஈடுபட்டதாக அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

கைதிகள் சிறையிலிருந்த கம்பு மற்றும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு சிறைக் காவலர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 8 சிறைக்காவர்களும் 7 கைதிகளும் காயமுற்றதாக சிறை தகவல்கள் கூறுகின்றன.

திருப்பூர் மாவட்டம் உதயம்!

தமிழகத்தின் 32ஆவது மாவட்டமாக திருப்பூர் இன்று துவக்கி வைக்கப் பட்டது. இதன் துவக்கவிழா இடுவம்பாளையம் அரசு பள்ளியில் இன்று மாலை 4.00 மணிக்கு நடந்தது. இவ்விழாவிற்கு வருவாய்த்துறை அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்தார். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தைத் துவக்கி வைத்தார்.

முன்னதாக திருப்பூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டார். இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார். திருப்பூர் உருவாக்கத்திற்கு இவர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

அத்வானி பிரதமராக தெலுங்கு தேசம் ஆதரவளிக்காது!

அத்வானி பிரதமராவதற்கு தெலுங்கு தேசம் ஆதரவளிகாது என்று தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்தால் தெலுங்கு தேசம் ஆதரிக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், தமது கட்சி ஒருபோதும் ஆதரிக்காது என்றும், இந்தக் கேள்வியே எழாதும் என்றும் கூறினார். தங்களுடைய கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்குப் பின்போ பாரதீய ஜனதா கட்சியுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு, குஜராத் கலவத்திற்குப் பிறகு பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தங்கள் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்றும் அதனாலேயே ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த முறை வாஜ்பாய் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிமையத்த போது தெலுங்கு தேசக் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்தது குறிப்பிடத் தக்கது.

தமிழகம்: போக்கிரிகளை கண்டதும் சுட உத்தரவு

Published on: சனி, 21 பிப்ரவரி, 2009 // , , , ,
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கும் யாரையும் கண்டதும் சுட தமிழக காவல்துறைத் தலைவர் ஆணையிட்டுள்ளார்.

கடந்த வியாழனன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்-காவலர்களிடையே நடைபெற்ற கலவரத்தை காரணங்காட்டியும், ஈழத்தமிழர் பிரசினை என்ற உணர்ச்சிப் போர்வையிலும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கும் போக்கிரிகள் யாரையும் கண்டதும் சுடும்படி தமிழக காவல்துறைத் தலைவர் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த இருநாள்களாக, நான்கு பேருந்துகள், நான்கு தீயணைப்பு வாகனங்கள், பதினான்கு இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

அலிகர்: நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் சுட்டுக்கொலை

அலிகர் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகளை கூலிப்படையைச் சேர்ந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இதையடுத்து பணியிலிருந்த காவலர்கள் திருப்பிச் சுட்டதில் அந்த மூன்று கொலையாளிகளும் செத்து வீழ்ந்தனர்.

நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டால், கொலைகளால், நகரில் பதற்றம் நிலவுகிறது.

போலி என்கவுண்டர்: ஆதாரங்களுடன் ஜாமியா மில்லியா ஆசிரியர்கள்!

ஜாமியா மில்லியா மாணவர்களை டில்லி பாட்லா ஹவுஸில் வைத்து காவல்துறை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஜாமியா மில்லியா கல்லுரியின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இவை, டில்லி என்கவுன்டர் குறித்து காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு எதிரானவைகளாகும்.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையினை காவல்துறை இதுவரை வெளியிடாததற்கானா காரணம் என்ன என்றும் ஏதாவது உண்மைகளை மறைத்து வைப்பதற்காகவே காவல்துறை அதனை வெளியிடவில்லையா? என்றும் அவர்கள் வெளியிட்ட அறிக்கை கேட்கிறது.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் குறித்த காவல்துறையின் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள், வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாக்குமூலங்கள், இஐயல்லாத சம்பவ இடத்தைப் பார்வையிட்டு சேகரித்த ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தயாராக்கிய 58 பக்கங்கள் அடங்கிய, "பாட்லா ஹவுஸ் என்கவுண்டர்: விடையிலா கேள்விகள்" என்ற தலைபில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இக்கேள்விகள் உள்ளடங்கியுள்ளன.

"போலி என்கவுண்டரில் தீவிரவாதிகள் என்று கூறப்படுபவர்கள் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரியின் உடலில் துப்பாக்கி ரவைகள் எப்பக்கமிருந்து துளைத்தன என்ற விஷயத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் உடலை முதலில் கொண்டு சென்ற ஹோலி ஃபேமிலி மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள், அவ்வுடலில் ஆதாரங்கலை அழித்துள்ளதாக, பிரேத பரிசோதனை செய்த ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளதாக" அறிக்கை கூறுகிறது.

என்கவுண்டர் தொடர்பாக நீதிபதி தலைமையிலான விசாரணை வேண்டும் என்ற தேசிய மனித உரிமை கழகத்தின் கட்டளைக்கு எதிரான நிலைபாட்டை டில்லி லெப்டினன்ட் கவர்னர் எடுத்ததாகவும் அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளது.

விடுதலைப்புலிகள் வான் தாக்குதல்

விடுதலைப்புலிகள் இரண்டு விமானங்கள் கொழும்பில் உள்ள அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 48 பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையின் விமானப்படைத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள உள்நாட்டு வருவாய் அலுவலகம் மீது ஒரு விமானம் மோதியதாகவும் மற்றொரு விமானம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே சுட்டு வீழ்த்தப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு 9.30 மணிக்கு நடத்தப்பட்ட இத்தாக்குதலையடுத்து கொழும்பு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விமான எதிர்ப்பு குண்டுகள் வீசப்பட்டன.

இந்திய தபால் துறை ஆண்டுக்கு ரூ.500 கோடி நஷ்டத்தில்!

இந்திய தபால் தந்தி துறை ரூ.500 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மக்களுக்கு 26 விதமான சேவைகளை வழங்கிவரும் இத்துறையில் 20 சேவைகள் அரசின் மானிய உதவியாலே வழங்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2005-06ம் ஆண்டு 1,200 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம், 2007-08ம் ஆண்டு 1,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.தனியார் கூரியர் நிறுவனங்கள் பற்றியும் அவைகளின் வருமானம் பற்றிய தகவல்கள் தன்னிடம் இல்லையென்றும், தபால் துறையின் வருவாயை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஒசாமா வாழ்விடம்: அமெரிக்கப் பேராசிரியர்கள் தகவல்

ஒசாமா பின் லாதன் எங்கு மறைந்திருக்கக் கூடும் என்பதை அமெரிக்க புவியியல் துறை பேராசிரியர்கள் தாமஸ் கில்லெஸ்பி மற்றும் ஜான் அக்னியு ஆகியோர் செயற்கைக் கோள் புகைப்படங்கள், புவியியல் முறைகள் மூலம், தர்க்க ரீதியாக கண்டுபிடித்துள்ளனர்.


இவர்கள் ஆய்வின் படி, பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்பகுதியில் உள்ள பராசினார் நகரில் உள்ள மலைகளில், ஒசாமா ஒளிந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில், 19 கி.மீ., தொலைவில் பராசினார் நகரம் இருக்கிறது. இந்நகரில் மூன்று சுற்றுச்சுவர்கள் கொண்ட வளாகத்தில் ஒசாமா பின் லாடன் தங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இந்த கண்டுபிடிப்பு அறிவியல் பூர்வமானது. ஒசாமா இடம் மாறினால், அமெரிக்க உளவுத்துறையின் புதிய தகவல்களின் அடிப்படையில், மறைவிடத்தை துல்லியமாக கண்டுபிடித்துவிடலாம், என்று இப்பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.தனது மறைவிடத்தில் மின்சார வசதி, பாதுகாப்பு, தனிப்பட்ட வாழ்வுக்குப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் மிகக் குறைந்த மெய்க்காவலர்களுடன் ஒசாமா இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!