Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரிக்கை - உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு!

வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வாக்களிக்கும் தகுதியுள்ள அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரனைக்கு வந்தது. மகாராஷ்டிரா மாநிலம் சத்வா மாவட்டத்தைச் சார்ந்த அதுல் சரோட் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.

மனுதாரர் சார்பில் வாதடிய பிரசன்னா குட்டி, பெரும்பாலானோர் வாக்களிக்காத காரணத்தால் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே பெறக்கூடிய வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர். அந்தத் தொகுதியின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு ஆதரவளிக்காமலேயே அவர் அந்தத் தொகுதியின் பிரதிநிதியாகிவிடுகிறார் என்று கூறினார்.

வேட்பாளர்களில் எவர் 51 சதவீத வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். எவருமே 51 சதவீத வாக்குகளைப் பெறவில்லை எனில் அங்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இணைய தளம் மூலம் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், வாக்கு இயந்திரத்தை உருவாக்கிய தேர்தல் ஆணையம், இணையத்தில் வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்வது குறித்து திட்டமிட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சைப்ரஸ், கிரீஸ், அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் எகிப்து உள்ளிட்ட 20 நாடுகளில் கட்டாய வாக்குப் பதிவு நடைமுறையில் உள்ளதையும் அவர் கூட்டிக் காட்டினார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சட்டமியற்றி மக்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரமுடியாது என்று கூறினர். வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே வாக்களிப்பு விகிதத்தை அதிகரிக்க முடியும் என்று கூறினர்.

கேரளா மற்றும் சில மாநிலங்களில் மக்களிடையே வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு உள்ளதாலேயே வாக்கு வீதம் அதிகமாக உள்ளது, சட்டம் கடுமையாக இருப்பதால் அல்ல என்றும் அவர்கள் கூறினர்.

இந்தியாவில் பல்வேறு தேர்தல்களிலும் 60 சதவீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்படுவதைக் கூறிய அவர்கள் இந்த சதவீதம் திருப்திகரமானது என்றும் கருத்து கூறினர்.

இலங்கையை ஐ.நா. சபை கண்கானிக்க வேண்டும் : மனித உரிமை அமைப்பு

இலங்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் கண்கானிப்பில் கொண்டு வர வேண்டும் என்று மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

போர் நடக்கும் பகுதிகளில் தமிழ் மக்களின் நிலை மிகுந்த இழிநிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவை இது விசயத்தில் அவசரமாக ஈடுபட வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர்களின் அமைப்பு (UTHR) கோரி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் கொழும்பு மட்டுமின்றி, முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள போர் நிறுத்தப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பொதுமக்களின் நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த அமைப்பு கோரி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் அந்தப் பகுதிகளில் இருந்தால் அந்தப் பகுதி மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமையை கேள்விக்குட்படுத்தும் சக்தியைப் பெறுவார்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் - 40 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் குறைந்தது 40 பேர் பலியானார்கள். நூற்றுக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் எல்லைப் புறத்தில் உள்ள நங்கர்கர் மாகாணத்தில் கோக்யானி மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.5 பதிவானது. இதன் பிறகு 2 மணி நேரம் கழித்து 5.1 அளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.

முதலில் கிடைத்த தகவல்கள்படி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் காயமுற்றுள்ளனர்.

கறுப்புப் பணம் 100 நாட்களில் இந்தியா கொண்டு வரப்படும் - அத்வானி!

தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை 100 நாட்களில் மீட்டு இந்தியாவிற்குக் கொண்டுவரப்படும் என்று அத்வானி கூறினார்.

இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அத்வாணி, சுவிஸ் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் எவ்வளவு உள்ளது, அதை எவ்வாறு இந்தியா கொண்டு வருவது என்பதை ஆய்வு செய்வதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் சிறப்பு அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று கூறினார்.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட அந்த அமைப்பு தன்னுடைய இடைக்கால அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், சுவிஸ் வங்கி மட்டுமின்றி சுமார் 70 நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் உள்ளதாகவும் அவர் கூறினார். இவ்வாறு முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் பணம் சுமார் 6.88 இலட்சம் கோடி ரூபாய் என்றும் அவர் கூறினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!