வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரிக்கை - உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு!
வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வாக்களிக்கும் தகுதியுள்ள அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரனைக்கு வந்தது. மகாராஷ்டிரா மாநிலம் சத்வா மாவட்டத்தைச் சார்ந்த அதுல் சரோட் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
மனுதாரர் சார்பில் வாதடிய பிரசன்னா குட்டி, பெரும்பாலானோர் வாக்களிக்காத காரணத்தால் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே பெறக்கூடிய வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர். அந்தத் தொகுதியின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு ஆதரவளிக்காமலேயே அவர் அந்தத் தொகுதியின் பிரதிநிதியாகிவிடுகிறார் என்று கூறினார்.
வேட்பாளர்களில் எவர் 51 சதவீத வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். எவருமே 51 சதவீத வாக்குகளைப் பெறவில்லை எனில் அங்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இணைய தளம் மூலம் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், வாக்கு இயந்திரத்தை உருவாக்கிய தேர்தல் ஆணையம், இணையத்தில் வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்வது குறித்து திட்டமிட வேண்டும் என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சைப்ரஸ், கிரீஸ், அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் எகிப்து உள்ளிட்ட 20 நாடுகளில் கட்டாய வாக்குப் பதிவு நடைமுறையில் உள்ளதையும் அவர் கூட்டிக் காட்டினார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சட்டமியற்றி மக்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரமுடியாது என்று கூறினர். வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே வாக்களிப்பு விகிதத்தை அதிகரிக்க முடியும் என்று கூறினர்.
கேரளா மற்றும் சில மாநிலங்களில் மக்களிடையே வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு உள்ளதாலேயே வாக்கு வீதம் அதிகமாக உள்ளது, சட்டம் கடுமையாக இருப்பதால் அல்ல என்றும் அவர்கள் கூறினர்.
இந்தியாவில் பல்வேறு தேர்தல்களிலும் 60 சதவீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்படுவதைக் கூறிய அவர்கள் இந்த சதவீதம் திருப்திகரமானது என்றும் கருத்து கூறினர்.
0 comments