Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கஷ்மீரில் 3 இராணுவத்தினர் கொலைக் குற்றவாளியாக அறிவிப்பு!

ஜம்மு கஷ்மீரில் கடந்த மாதம் பொதுமக்களை இராணுவத்தினர் கொலை செய்தனர் என்ற குற்றச் சாட்டை விசாரிக்க அமைக்கப் பட்ட விசாரணை நீதி மன்றம் மூன்று இராணுவத்தினர் குற்றம் செய்தததாக அறிவித்தது. அவர்கள் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

ஸ்ரீநகரில் 15ஆம் கம்பெணியின் பிரிகேடியர் தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.

ஒரு துணை கமிஷனர் மற்றும் இரு இராணுவ வீரர்கள், தங்களுடைய ஆயுதங்களை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. நீதிமன்ற விசாரணை விரைவில் துவங்கும். குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் சிறைத் தண்டனை இருக்கக் கூடும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.

இராணுவம் மனித உரிமைகளில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை இவர்களுக்கு வழங்கும் தண்டனை மூலம் அறியலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பிப்ரவரி 21ஆம் நாள் கஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டு இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதை அடுத்து கஷ்மீர் முழுவதும் இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்ங்கள் நடத்தப்பட்டதை அடுத்து, மத்திய அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது.

சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டி!

ஐ.நா. துணைச் செயலாளராக பதவி வகித்த சசி தரூர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளார்.
சசி தரூர், ஐ.நா சபை பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது


கேரளாவில் இருந்து போட்டியிடும் 16 வேட்பாளர்களையும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து 8 வேட்பாளர்களையும், சட்டீஸ்கரில் இருந்து 2 வேட்பாளர்களையும், அசாம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒரு வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி இந்தப் பட்டியலில் அறிவித்துள்ளது.

கஷ்மீரில் மூன்று கொரில்லாக்கள் கொல்லப் பட்டனர்

கஷ்மீரில் தனி நாடு கேட்டுப் போராடும் இயக்கங்களைச் சேர்ந்த மூன்று கொரில்லாக்கள் இன்று கொல்லப் பட்டனர். கஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள செளகிபல் அருகே உள்ள ரங்வர் என்னும் வனப் பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் இவர்கள் கொல்லப் பட்டனர்.

இன்று நடந்த தேடுதலின்போது வனத்தைச் சுற்றியிருந்த இராணுவத்தினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் நடந்த துப்பாக்கிச் சன்டையில் மூன்று தீவிரவாதிகள் பலியானதாகவும் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரார் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பறக்கும் விமானத்தில் குழந்தையைப் பெற்று குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்ற பெண்.

நியூசிலாந்து (AFP) பறந்துகொண்டிருந்த விமானத்தின் கழிவறையில் குழந்தையைப் பெற்ற பெண் அங்கிருந்த குப்பை தொட்டியில் குழந்தையை போட்டு விட்டு சென்று விட்டார்.

போலீசாரும் பசுபிக் ப்ளூ விமான நிறுவன அதிகாரிகளும் தெரிவித்தாக நியூசிலாந்து தொலைக்காட்சி ஒன்றில் இச்செய்தி நேற்று ஒளிபரப்பானது.

விமானம் சுத்தம் செய்யும் பணியாளரால் விமானம் தரை இறங்கிய பின் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அக்குழந்தை கழிவறைத் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

150 பயணிகளுடன் சென்ற அவ்விமானத்தில் யாரும் குழந்தை பெற்றதாக யாதொரு சாத்தியக்கூறும் காணப்படவில்லை.

ஆனால் அப்பெண் தன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விட்டதாக வந்து கேட்டபோது அப்பெண்ணின் பலவீனத்தாலும் ரத்தக் கறையுடன் காணப்பட்டதாலும் சந்தேகமுற்ற அதிகாரிகள் விசாரித்தபோது மேற்கண்ட விஷயம் தெரிய வந்தது.

தற்போது தாயும் குழந்தையும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவிகளை வன்புணர்ந்ததாக தலைமையாசிரியர் உள்பட மூவர் கைது!

ஷிம்லாவில் உள்ள காது கேளாதோர் மற்றும் ஊமைகளுக்கான பள்ளியில் 14 முதல் 16 வயதுடைய ஆறு மாணவிகளை கடந்த ஒரு ஆண்டு காலத்தில் வன்புணர்ந்ததாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பள்ளியின் தற்காலிக தலைமையாசிரியரான விஜய் மற்றும் ஆசிரியர்கள் தினேஷ் மற்றும் வினோத் ஆகியோதை வியாழக் கிழமையன்று கைது செய்ததாக காவல்துறையினர் அறிவித்தனர். மேலும் அமர்ஜித் என்ற மற்றொரு குற்றவாளியையும் தேடி வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பள்ளியின் விடுதியில் 22 பேர் படித்து வருவதாகவும், விடுதியில் சமையல் பணி செய்யும் பெண் இரவில் வீடு திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக விடுதி கண்கானிப்பாளர் இல்லாத நிலையில் விடுதியில் தங்கியிருப்போர் மீது செக்ஸ் கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

4 மத்திய ரிசர்வ் படை காவலர்கள் இடை நீக்கம்!

கஷ்மீரில் போலி என்கவுண்டர் மூலம் தச்சர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய ரிசர்வ் படையைச் சார்ந்த ஒரு துணை கமாண்டோ மற்றும் மூன்று காவலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது புல்வாமா மாவட்டத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமையன்று 35 வயதுடைய குலாம் முகைதீன் என்பவரை அவரது வீட்டில் மத்திய ரிசர்வ் படையின் 181 படைப்பிரிவினர் சுட்டுக் கொன்றனர். கடந்த ஒரு மாதத்தில் பொதுமக்கள் படையினரால் கொல்லப்படுவது இது மூன்றாவது நிகழ்வாகும்.

பிகாரில் காங்கிரஸ் தனித்துப் போட்டி?

காங்கிரஸ் கட்சி, பிகாரில் 26 தொகுதிகளி்ல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சீட் மறுக்கப்பட்ட அவரது மச்சான் பப்பு யாதவ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளார். இதனால் லாலு-காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ளது. பிகாரில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன. இதில் 25 தொகுதிகளில் லாலுவின் கட்சியும் 12 இடங்களில் மத்திய அமைச்சர் ராம் விவாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தியும் போட்டியிடுகின்றன. காங்கிரசுக்கு 3 இடங்களை மட்டும் இவர்கள் ஒதுக்கினர்.இதையடுத்து லாலுவுக்கு பதிலடி கொடுக்க அவரது கட்சியி்ன் அதிருப்தியாளர்களுக்கு காங்கிரஸ் வலைவீசி வருகிறது.

இதில் லாலு கட்சியின் எம்பியான கிரிதாரி யாதவ், ரமணி ராம் ஆகியோர் ஆர்ஜேயிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளனர். இதனால் லாலுவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான மோதல் தீவிரமாகியுள்ளது.

வருணுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்!

உத்தரப்பிரதேசத்தில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வருணுக்கு, பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.தேர்தல் பிரசாரத்தின் போது மதவாதத்தை பரப்பும் வகையில் வருண் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு வரும் வரை அவரை காவல்துறையினர் கைது செய்வதற்கு தடைவிதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்ஜாமீன் கோரி வருண் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நீதிபதி கேத்ரபால் இந்த உத்தரவை வழங்கினார். வருணுக்கு எதிரான புகார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதிவாகியிருப்பதால், டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க அதிகார எல்லை இல்லை என்று காவல்துறை தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார்.

வருண் மீது தேர்தல் கமிசன் பிடி இறுகுகிறது!

தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிமுறைகளையும் சட்டத்தையும் மீறி முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய வருணின் மீதான பிடியைத் தேர்தல் கமிசன் இறுக்குகிறது. தேர்தல் கமிசன் அனுப்பிய விளக்க நோட்டீஸிற்கு, தனது பேச்சைத் திரித்துள்ளனர் எனவும் தான் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் பேசவில்லை எனவும் வருண் விளக்கமளித்திருந்தார். ஊடகங்களில் வெளியான வருண் பேச்சு அடங்கிய வீடியோ டேப்பில் குளறுபடி நடந்துள்ளது என்று வருண் கூறுவாரேயானால் அதனை அவர் தான் நிரூபிக்க வேண்டும் என தேர்தல் கமிசன் கமிசனர் திரு. என். கோபாலசாமி கூறினார். மேலும், அதனை நிரூபிப்பதற்கு வருணுக்கு 24 மணி நேர கால அவகாசம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



தேர்தல் கமிசனின் உறுதியான இந்நிலைபாடு, வருணுக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் நடவடிக்கை வரும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!