Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை

Published on: புதன், 25 பிப்ரவரி, 2009 // , , , , ,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2 இலட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி மகேஷ்வரி இந்த தீர்ப்பை அளித்தார். பின்னர் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை அளித்ததைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப் பட்டார்.

150 பக்கங்கள் கொண்டிருந்த இந்த வழக்கின் தீரப்பை வாசித்த நீதிபதி மகேஷ்வரி, ஊழல் என்னும் புற்று நோய் இந்திய சமூகத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஊழல் புரிந்தால் மொத்த சமூக அமைப்பும் கோபமுற்று அரசு திட்டங்கள் பாதிக்கப்படும். எனவே ஊழல் அரசு ஊழியர் சமூகத்திற்கு பெரிதும் அச்சுறுத்தல் என்று கூறினார்.

அரசியல் சமூக அமைப்பில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று என்றும் அதில் ஊழல் கலப்பது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், மாதிரியாகக் கருதப்படும் தலைவர்களே ஊழலில் ஈடுபடும்போது பொதுமக்களிடம் நேர்மையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

1991 முதல் 1996 வரை மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வருமானத்திற்கு அதிகமாக 42.5 மில்லியன் சொத்து சேர்த்தது உறுதிப்படுத்தப்பட்டு அந்த தொகையை பறிமுதல் செய்யவும் நீதி மன்றம் உத்தரவிட்டது.

1996ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் சுக்ராமின மகன் உள்பட மொத்தம் 79 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் பிரதமர்களான தேவகவுடாவுக்கும் நரசிம்மராவுக்கும் இடையில் நடைபெற்ற அரசியல் சன்டையில் அப்பாவியான தனது கட்சிக்காரர் சுக்ராம் பாதிக்கப்பட்டதாக அரவது வழக்கறிஞர் மினோச்சா கூறினார்.

விண்ணில் வெடித்துச் சிதறியது அமெரிக்க விண்கலம்

தாரஸ் எக்ஸ் - எல் என்ற அமெரிக்க விண்கலமொன்று கலிபோர்னிய விண்தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறி அட்லாண்டிக் கடலில் விழுந்தது.

விண்ணில் கார்பன் டை ஆக்சைடின் சதவீதத்தை அறிவதற்காகவும், பூமியில் தட்ப வெப்ப மாற்றங்களை அறிவதற்காகவும் இவ்விண்கோள் செலுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

விண்கலம் ஏந்திச்சென்ற செயற்கைக்கோள் அதிலிருந்து பிரிவடையும் நேரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து நேரிட்டதாக நாசா கூறி உள்ளது. ரூ.1300 கோடி செலவில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாக போய்விடும்-நீதிபதி வேதனை

பார் கவுன்சிலுக்கு தரமான இளம் வக்கீல்கள் வராவிட்டால் வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாகப் போய்விடும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன் வேதனையுடன் கூறினார்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தேசிய வழக்காடு போட்டி சென்னையில் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்தும் 16 சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ப.சதாசிவம், உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிராஜபாண்டியன் ஆகியோர் பரிசளித்துப் பாராட்டினர்

நீதிபதி சதாசிவம், இன்றைய சூழ்நிலையில் நீதித்துறைக்கு திறமையான வக்கீல்கள் தேவைப்படுகிறார்கள். வக்கீல்கள் சட்டத்துறையில் ஏற்படும் மாற்றங்களை விரல்நுனியில் வைத்திருக்க வேண்டும். வழக்குகளில் சாதுர்யமாக வாதாடினால் வக்கீல் தொழிலில் புகழ் பெறலாம் என்று கூறினார்.

நீதிபதி ரவிராஜபாண்டியன் பேசும்போது, சட்டக் கல்வியின் வளர்ச்சி குறித்தும், வக்கீல் தொழிலில் ஒழுக்கம் மற்றும் அறநெறி பற்றியும் குறிப்பிட்டார். பார் கவுன்சிலுக்கு இதுபோன்ற சீர்மிகு சட்டக் கல்லூரிகளில் இருந்து தரமான இளம் வக்கீல்கள் வராவிட்டால் வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாகப் போய்விடும் என்று வேதனையுடன் கூறினார்.

ஏ. ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம்

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை புரிந்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் இன்று அறிவித்துள்ளது.

ரஹ்மானின் ஆஸ்கர் வெற்றியை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகச் செய்தியாளர் ராகத் அப்ரார் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 25 தேதி நடைபெறும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இது ரஹ்மானுக்கு வழங்கப்படும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

டாடா குழுமங்களின் தலைவர் ரட்டன் டாட்டா, பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் உருது மொழி எழுத்தாளர் பேராசிரியர் கோபிசந்த் நாரங் ஆகியோருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க இப்பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளதாக பல்கலைக் கழக வட்டாரம் தெரிவிக்கிறது.

பட்ஜெட் ப்ளஸ்: 29,000 கோடிக்கு வரிச்சலுகைகள்

இந்தியாவின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சில நாள்களுக்கு முன் சமர்ப்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வரிச்சலுகை ஏதும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், நிதிஅறிக்கை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்தபோது 29,000 கோடிக்கு புதிய வரிச்சலுகைகளை அமைச்சர் அறிவித்தார்.

அமைச்சர் பிரணாப் முகர்ஜி தன் பேச்சில் உற்பத்தி வரி மற்றும் சேவை வரிகள் தலா 2 சதவீதம் குறைக்கப்படுவதாகத் தெரிவித்தார். கட்டுமானத் துறையை ஊக்குவிக்கும் பொருட்டு சிமென்ட் மீதான உற்பத்தி வரி 2 சதவீதம் குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சிறிய ரக கார்களுக்கு 8 சதவீதமும், பெரிய கார்களுக்கு 20 சதிவீதமும் இப்போது எக்ஸைஸ் வரி விதிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்படும் வரிகளிலும், சிகரெட் போன்ற ஆடம்பரப் பிரிவில் வரும் பொருள்களுக்கு விதிக்கப்படும் மருந்துகளின் விலைகளிலும் மாற்றமில்லை.

மாநில அரசுகளின் பற்றாக்குறை 3 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதம் வரை இருக்க் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மாநில அரசுகளுக்கு இதனால் ரூ.91,000 கோடி கூடுதல் நிதி கிடைக்கும், இந்த கூடுதல் நிதி ஆதாரத்தை அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்கப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஏற்கெனவே உற்பத்தி வரி 14 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது மேலும் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் உற்பத்தி வரி 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பதவி விலகல்

நடுவண் மின்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இன்று அமைச்சரவையிலிருந்து விலகினார். தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ள ஜெய்ராம் ரமேஷ், நிருபர்களிடம் 'தேர்தல், கட்சிப்பணிகளில் ஈடுபடுவதற்காக' அமைச்சர் பதவியை விட்டு நீங்குவதாகத் தெரிவித்தார்

மாநிலங்களவை உறுப்பினராக ஆந்திராவிலிருந்து ஜெய்ராம் ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இந்தியா: டீசல் விலை மேலும் ரூ.2 குறைகிறது?

டீசல் விலையை இரண்டு கட்டமாக ரூ.4/= குறைக்க மத்திய அரசு கடந்த டிசம்பரில் முடிவு செய்திருந்தது. அதன்படி மத்திய அமைச்சரவை கூடி முதற்கட்டமாக ரூ.2/= குறைக்க முடிவெட்டியுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாளையே மத்திய அமைச்சரவை கூட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டீசல் விலையை குறைத்தால் பணவீக்கம் குறையும். வாகன போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களின் விலை குறையும் என்பதாக அரசு எதிர்பார்க்கிறது.

ஆயினும், பெட்ரோல் விலை இப்போதைக்கு குறைக்கப்பட மாட்டாது என்றும் ரூ.10 விலை, இரண்டு கட்டமாக குறைக்கப்பட்டு விட்டது என்றும் அரசுத்தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

துருக்கி விமானம் நொறுங்கி விழுந்தது!

ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 20 பேர் காயமுற்றனர்.


134 பயணிகளுடன் இருந்த அந்த விமானம் ஓடுதளத்திற்கு சற்று உயரத்தில் மூன்று துண்டுகளாக நொறுங்கி விழுந்தது என்றும் ஆனால் தீப்பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


இந்த விமானத்தில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 134 பேர் பயணம் செய்ததாக விமான நிறுவனமும், 143 பேர் பயணம் செய்ததாக துருக்கி போக்குவரத்து அமைச்சரும் கூறியுள்ளனர்.


ஒருவர் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாயின. ஆனால் உயிரிழப்புகள் குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை என விமான நிறுவன அதிகாரி கூறினார். உயிர் பலி எதுவும் இல்லை என துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் கூறினார். ஆனால் ஆறுபேர் இச்சம்பவத்தில் பலியானதாக டச்சு வானொலி தெரிவித்தது. விமானத்தின் சிதறிய பாகங்களிலிருந்து சுமார் 20 பேர் எழுந்து சென்றதாக விபத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

இவ்விபத்து குறித்த அவசரத் தகவல்களுக்காகத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +90 800 219 8035

நவாஸ் ஷரீஃபுக்கு விதித்த தடை உறுதி!

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃபுக்கும் அவரது சகோதரர் ஷாபாசுக்க்கும் பாகிஸ்தான் அரசில் பங்கு வகிக்க நடத்தப்படும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட லாகூர் உயர் நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

நவாஸ் ஷரீஃபின் கட்சியான PML-N மேற்கு பஞ்சாபில் மிகவும் பலம் வாய்ந்ததாகும். நவாஸ் ஷரிஃபின் சகோதரர் ஷாபாஸ் தான் அங்கு முதல்வராக இருக்கிறார். பாகிஸ்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஷாபாசும் பதவி விலக வேண்டி வரும்.

இந்தத் தீர்ப்பை மேல் முறையீடு செய்யவும் இயலாதவாறு மேலும் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இது பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் சதி என்று கருதுவதாக நவாஸ் ஷரீஃப் தரப்பினர் கூறியுள்ளனர்.

முந்தைய அதிபர் முஷரஃபை பதவி விலக நெருக்கடி கொடுக்க ஜர்தாரியுடன் ஒன்று சேர்ந்த நவாஸ் ஷரீஃப், முஷரஃப் பதவி விலகியவுடன் ஜர்தாரி அதிபராக உதவி செய்தார். பின்னர் அவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு இருவரும் எதிரெதிராகச் செயல்பட்டு வருகின்றனர். நவாஸ் ஷரீஃப் அரசியலில் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்ற முனைப்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை மிரட்டி தடை உத்தரவு தீர்ப்பைத் திணித்துள்ளதாக நம்புவதற்குப் பெரிதும் இடம் இருப்பதாக நவாஸ் ஷரீஃபின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஸ்லம் டாக் படத்தில் நடித்த குழந்தைகளுக்கு பிளாட்

ஸ்லம் டாக் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களான அசாருதீன் இஸ்மாயில் மற்றும் ருபினா ரபீக் ஆகிய குழந்தைகளுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

ஸ்லம் டாக் திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை வாங்கியதை அடுத்து பல்வேறு இடங்களிலிருந்தும் அதில் நடித்த கலைஞர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இத்திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களான அசாருத்தீன் இஸ்மாயில் சேக் உஸ்மான் மற்றும் ருபினா ரபீக் அஸ்கர் அலி குரேசி ஆகிய இருவருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவான் நேற்று இரவு அறிவித்தார். மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சி மாநில முதல்வரிடம் வைத்த கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்குழந்தை நட்சத்திரங்கள் தற்போது மும்பையின் பந்த்ரா கிழக்குப் பகுதியில் உள்ள சேரிப் பகுதியான கரீப் நகர் பகுதியில் வசித்து வருகின்றன. ருபினாவின் தந்தை ரபீக் தச்சராகப் பணியாற்றி வருகிறார். அசாருதீனின் தந்தை இஸ்மாயில் பழைய மரச்சாமான்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

காஷ்மீரில் வேலை நிறுத்தம்

கடந்த நான்கு தினங்களுக்கு முன் இரு இளைஞர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்கும் முகமாய் அரசு கடுமையான நிபந்தனைகளை விதித்திருப்பதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போன்ற சூழ்நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிவினைவாத இயக்கங்கள் இந்தக் கொலைகளைக் கண்டித்து இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதை அடுத்து ஸ்ரீநகர் மற்றம் கஷ்மீரின் முக்கிய நகரங்களில் காவல் துறை மற்றும் இராணுவம் ஆயிரக் கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.

முகம்மது அமீன் தன்தாரி மற்றம் ஜாவித் அகமது என்ற இளைஞர்கள் சோபூரில் கடந்த 4 நாட்களுக்கு முன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். பிர்தோஸ் என்ற மற்றொரு இளைஞர் காயமுற்றார். இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிறன்னு சோபூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்நதது.

பங்களாதேஷில் எல்லைப் பாதுகாப்பு படையினர் கிளர்ச்சி

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களது தலைமை அலுவலகத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இன்று காலை முதல் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்தினருக்கம் துப்பாக்கிச் சன்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு மேல் இராணுவ ஹெலிகாப்டர் மூலம் கண்கானிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டாக்கா முழுவதும் இராணுவம் குவிக்கப் பட்டுள்ளது. கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.

இதுவரை இந்த சன்டையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இராணுவத்தை எந்த வகையிலும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களுடைய ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாததையடுத்து இந்த கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு அதன் தலைமையகத்தில் வங்கதேசப் பிரதமர் சேக் ஹசீனா நேற்றைய தினம் விருதுகளை வழங்கிச் சிறப்பித்திருந்த நிலையில் இக்கிளர்ச்சி நடைபெற்றுள்ளது.

இரு தரப்பும் ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாகவும் வங்க தேச அரசு அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அகற்றுக- உச்ச நீதிமன்றம்.


சென்னை வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.


இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் முன்பு தெரிவித்திருந்தது. தற்போது முக்கியத்துவம் கருதி இம்மனு 25-ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கறிஞர் - காவல்துரை மோதல் தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நடுவர் ஸ்டீவ் பக்னர் ஓய்வு

மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஸ்டீவ் பக்னர் வரும் மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். 62 வயதாகும் பக்னர், 126 டெஸ்ட் மற்றும் 179 ஒரு நாள் போட்டிகளில் நடுவராக பணியாற்றி சாதனை படைத்துள்ளார். தொடர்ச்சியாக 5 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்றதும் அவரது சாதனைகளில் ஒன்று.

62 வயதாகும் தனக்கு மேலும் ஒன்றிரண்டு வருடங்கள் நடுவராக செயல்பட இயலும் என்றாலும் ஓய்வு பெறுவதற்க்கு இதுவே சரியான தருனம் என்றும் தெரிவித்தார்.


வரும் மார்ச் மாதம் தென்னாப்பிரிக்க-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற உள்ள 3-வது டெஸ்ட் போட்டிக்குப்பின் தான் ஓய்வு பெரும் முடிவை ஐ.சி.சி. யிடம் தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார்.

தனது ஒய்விற்குப்பிறகு மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற விரும்புவதாகவும் ஸ்டீவ் பக்னர் தெரிவித்தார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!