பட்ஜெட் ப்ளஸ்: 29,000 கோடிக்கு வரிச்சலுகைகள்
இந்தியாவின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சில நாள்களுக்கு முன் சமர்ப்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வரிச்சலுகை ஏதும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், நிதிஅறிக்கை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்தபோது 29,000 கோடிக்கு புதிய வரிச்சலுகைகளை அமைச்சர் அறிவித்தார்.
அமைச்சர் பிரணாப் முகர்ஜி தன் பேச்சில் உற்பத்தி வரி மற்றும் சேவை வரிகள் தலா 2 சதவீதம் குறைக்கப்படுவதாகத் தெரிவித்தார். கட்டுமானத் துறையை ஊக்குவிக்கும் பொருட்டு சிமென்ட் மீதான உற்பத்தி வரி 2 சதவீதம் குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சிறிய ரக கார்களுக்கு 8 சதவீதமும், பெரிய கார்களுக்கு 20 சதிவீதமும் இப்போது எக்ஸைஸ் வரி விதிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்படும் வரிகளிலும், சிகரெட் போன்ற ஆடம்பரப் பிரிவில் வரும் பொருள்களுக்கு விதிக்கப்படும் மருந்துகளின் விலைகளிலும் மாற்றமில்லை.
மாநில அரசுகளின் பற்றாக்குறை 3 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதம் வரை இருக்க் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மாநில அரசுகளுக்கு இதனால் ரூ.91,000 கோடி கூடுதல் நிதி கிடைக்கும், இந்த கூடுதல் நிதி ஆதாரத்தை அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்கப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஏற்கெனவே உற்பத்தி வரி 14 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது மேலும் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் உற்பத்தி வரி 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments