வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாக போய்விடும்-நீதிபதி வேதனை
பார் கவுன்சிலுக்கு தரமான இளம் வக்கீல்கள் வராவிட்டால் வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாகப் போய்விடும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன் வேதனையுடன் கூறினார்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தேசிய வழக்காடு போட்டி சென்னையில் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்தும் 16 சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ப.சதாசிவம், உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிராஜபாண்டியன் ஆகியோர் பரிசளித்துப் பாராட்டினர்
நீதிபதி சதாசிவம், இன்றைய சூழ்நிலையில் நீதித்துறைக்கு திறமையான வக்கீல்கள் தேவைப்படுகிறார்கள். வக்கீல்கள் சட்டத்துறையில் ஏற்படும் மாற்றங்களை விரல்நுனியில் வைத்திருக்க வேண்டும். வழக்குகளில் சாதுர்யமாக வாதாடினால் வக்கீல் தொழிலில் புகழ் பெறலாம் என்று கூறினார்.
நீதிபதி ரவிராஜபாண்டியன் பேசும்போது, சட்டக் கல்வியின் வளர்ச்சி குறித்தும், வக்கீல் தொழிலில் ஒழுக்கம் மற்றும் அறநெறி பற்றியும் குறிப்பிட்டார். பார் கவுன்சிலுக்கு இதுபோன்ற சீர்மிகு சட்டக் கல்லூரிகளில் இருந்து தரமான இளம் வக்கீல்கள் வராவிட்டால் வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாகப் போய்விடும் என்று வேதனையுடன் கூறினார்.
0 comments