Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

டென்னிஸ் தரவரிசை: சானியா முன்னேற்றம்

Published on: செவ்வாய், 17 பிப்ரவரி, 2009 // , , , , ,
பாட்டயா டென்னிஸ் போட்டி இறுதியாட்டம் வரை வந்த இந்தியாவின் சானியா மிர்ஸா மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இப்போட்டிக்கு முன் தரவரிசையில் 126 ஆவது இடத்தில் இருந்த சானியா, இப்போட்டியில் இறுதியாட்டம் வரை வந்ததால் 39 இடங்கள் முன்னேற்றம் கண்டு, 87 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அதேபோல் இரட்டையர் பிரிவில் இறுதியாட்டம் வரை சென்ற இந்தியாவின் போபண்ணா இரட்டையர் தரவரிசையில் 78ம் இடத்தைப் பெற்றுள்ளார். இரட்டையர் தரவரிசையில் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி முறையே 7 மற்றும் 5 இடங்களில் உள்ளனர்.

இலங்கை: கருணா இயக்கத்தில் பிளவு

இலங்கையில் விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்தக் கட்சியின் பிள்ளையான் முதல் அமைச்சராக இருந்து ஆட்சி நடத்தி வருகிறார். கருணா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கருணாவிடம் விளக்கம் கேட்கப்பட்டு கட்சித்தலைமையிலிருந்து அறிவிக்கை அனுப்பிவைக்கப்பட்டதாம். கருணா விளக்கம் தராததால் அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த கருணா தனது ஆதரவாளர்களுடன் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கைக் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதிபர் இராஜ பக்சேயின் சுதந்திரா கட்சியில் சேர இருப்பதாக கருணாவும் அவர்ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளனர்

காங்கிரஸ்ஸுடன் பாஜக, கம்யூனிஸ்ட் கூட்டணி: சிக்கிம் விசித்திரம்

சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற மாநிலக் கட்சியை எதிர்த்து தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள்கின்றன.

சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற கட்சி சிக்கிம் மாநிலத்தில் வலுவாக உள்ளது. இதன் தலைவர் பவன்குமார் சாம்சிங் நான்கு முறையாக முதல்வர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் வரும் மேமாதம் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு கடும்போட்டி ஏற்படுத்த நினைத்த தேசிய கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்கிற விசித்திரக் கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன.மாநில காங்கிரஸ்ஸின் மூத்த தலைவர் உப்ரதி இக்கூட்டணி அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சட்டக்கல்லூரி மோதல்: இது பாண்டிச்சேரி சம்பவம்

புதுவை மாநிலத்தில் காலாப்பட்டில் அரசு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, ஈழப்பிரச்னையை முன்னிட்டு இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த வலியுறுத்தி நகரின் மையப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். கடந்த 11ம் தேதியிலிருந்து மூன்று நாள்களாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் கலந்துகொள்ளாமல் வகுப்புகளுக்குச் சென்று வந்தனர்.

இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டு முதலாம் ஆண்டு படிக்கும் வில்லியனூரைச் சேர்ந்த மாணவர் அன்புமணி, பெரம்பலூரைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர் சுரேஷ் வயிற்றில் திடீரென கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டாராம்.
சம்பவம் குறித்து காலாப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை யடுத்து, மாணவர்கள் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேறினர். கல்லூரியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

பாண்டிச்சேரி: விமானநிலையம் செயற்பட தாமதமாகலாம்

பாண்டிச்சேரியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையம் எதிர்பார்த்தபடி வரும் மார்ச் மாதம் செயற்படாமல் போகலாம் என்றும் அது செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்றும் தெரிகிறது. இத்தகவலை துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஓடுபாதையையொட்டி கட்டப்பட்டிருக்கும் பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு, அது வெளியில் வருவதால் அதனை சரி செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கிங்ஃபிசர் உள்ளிட்ட நிறுவனங்கள் பாண்டிச்சேரியில் சேவை தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரியவ்ருகிறது.

ராஜ்தாக்கரே தலைமறைவு என நீதிமன்றம் அறிவிக்கை

மகராஷ்டிரா நிர்மான் சேனா தலைவர் தலைமறைவு என ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே பீகார் மக்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருந்ததை அடுத்து சுதீர் குமார் பப்பு என்ற வழக்கறிஞர் தாக்கரே மீது 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் வருமாறு நீதிமன்றம் பலமுறை அறிவிக்கை அனுப்பியும் ராஜ் தாக்கரே வரவில்லை.

இதனை அடுத்து ஜாம்ஷெட்பூர் 2வது அமர்வு நீதிமன்ற நீதிபதி அனில்குமார் ராஜ்தாக்கரே தலைமறைவாக இருப்பதாக இந்திய குற்றவியல் சட்டத்தின் 82 பிரிவின்படி அறிவித்து அறிவிக்கை அனுப்பினார். இந்த அறிவிக்கைக்கு ராஜ்தாக்கரே பதில் அளிக்காவிட்டால் அவரது சொத்துகள் பிரிவு 83ன் படி பறிமுதல் செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும்.

முன்னதாக ராஜ் தாக்கரையை பிணையில் வரமுடியாத அளவில் கைது ஆணையை நீதிமன்றம் டிசம்பர் 16ஆம் தேதி பிறப்பித்து, மும்பை காவல்துறை ஆணையர் இந்த ஆணையை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது.

சுப்ரமணிய சுவாமி மீது முட்டை வீசித் தாக்குதல்

சென்னை உயர்நீதிமன்றம் வந்த ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சுவாமி மீது அழுகிய முட்டைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீதிபதி முன்னிலையிலேயே இச்சம்பவம் நடந்தேறியது.

சிதம்பரம் கோயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு சுப்ரமணியம் சுவாமி நீதிமன்றம் வந்திருக்கையில் திடீரென நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர் ஈழத்தமிழருக்கு எதிராகப் பேசுவதால் சுப்பிரமணிய சுவாமி‌யை தாக்குவதாகக் கூறி அவருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பின்னர் உத்தரவிடப்பட்டது.

தமிழக நிதிநிலை அறிக்கையில் ரூ.100கோடிக்கு வரிச்சலுகை

தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபையில் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அரசின் மொத்த வருவாய்: 58,270 கோடிகள்.
நிதிபற்றாக்குறை: 3%
மொத்த விற்பனை அடிப்படையில் மதிப்பு கூட்டு வரி
இரும்பு பெட்டி - முழு வரி விலக்கு
மிளகு சீரகத்திற்கு வரி விலக்கு பருப்பு, பயிறு, பட்டணிக்கு கொள்முதல் வரி ரத்து
நெய், ஊறுகாய் வரி குறைப்பு
உலர்ந்த திராட்சை, ஜவ்வரிசி, ஸ்டார்ச், கிளிப், ரப்பர் பேண்ட் மீதான வரி குறைப்பு
ஐ-பாட், எம்.பி.3, எம்.பி.4 பிளேயர் மீதான வரி குறைப்பு
உற்பத்தி கணக்கின் அடிப்படையில் செங்கல் சூளை மீது வரி
இந்த வரிவிதிப்பு மாற்றங்கள் வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த வரிச்சலுகைகளால் அரசுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய சட்டமன்ற வளாகம் கட்ட ரூ.200கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு 4110 கோடியிலிருந்து 9142 கோடியாக அதிகரிப்பு

சுகாதாரச் செலவினங்களுக்கு 3300 கோடி ரூபாயும், ஆதிதிராவிடர் நலனுக்கு 2615 கோடி ரூபாயும், இரெயில்வே மேம்பாலங்களுக்கு ரூ.400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.

கங்குலி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா?

மேற்கு வங்க மாநில ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியை தங்கள் கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் அவர் போட்டியிட வேண்டுமென அரசியல் கட்சி ஒன்று கேட்டுக் கொண்டதாக கங்குலியின் மனைவி டோனா இன்று கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "கங்குலி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மேற்கு வங்க அரசு விரும்புகிறது. ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நான் லக்னோ சென்றிருக்கும்போது யாரோ ஒரு அமைச்சர் கங்குலி உத்திரப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட வேண்டும் என்று சொன்னார்" என்று கூறினார். எந்தக் கட்சி அவரை அழைத்தது என்று கேட்டதற்கு தான் அரசியில் இல்லாததால் அரசியல்வாதிகள் பெயர் தனக்கு நினைவில்லை என்றும் அநேகமாக சமாஜ்வாதி கட்சியாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அமர்சிங்கிடம் இதுபற்றிக் கேட்டபோது, எங்கள் கட்சியிலிருந்து இதுவரை எவரும் அதிகாரப்பூர்வமான அனுகவில்லை என்றும், கங்குலி சமாஜ்வாதியில் இணைய விரும்பினால் அதை உடனே பரிசீலிப்போம் என்றும் அவர் கூறினார்.

பஸ் கவிழ்ந்து சபரிமலை பக்தர்கள் 11 பேர் பலி

சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலியானார்கள். 40 பேர் காயமுற்றுள்ளனர். அவர்களில் 20 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவிலிருந்து 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு வரும்போது கோட்டயம் அருகே எருமேலி என்னும் இடத்தில் 50 அடி பள்ளத்தில் கவிழந்து விழுந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமுற்றவர்களை கோட்டயம் மருத்துவக் கல்லூ மருத்துவமனை மற்றும் காஞ்சிராப்பள்ளி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!