Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பங்காரப்பா மீண்டும் காங்கிரசில் இணைகிறார்?

Published on: வெள்ளி, 9 ஜனவரி, 2009 //
கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் பங்காரப்பா காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. சோனியா வெளிநாட்டில் பிறந்தவர் என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்று பங்காரப்பா கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று கூறி காங்கிரசில் இருந்து வெளியேறிய பங்காரப்பா, "சோனியா காந்தி பிரதமர் பதவியை தியாகம் செய்தவர். காங்கிரஸ் கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். இந்திய அரசியலை நன்கறிந்தவர்" என்று செய்தியாளர்களிடம் கூறினார். கர்நாடக மாநிலம் ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதியில் கட்சி அனுமதியளித்தால் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் கர்நாடக மாநில செயலாளராக இருக்கும் இவரை மீண்டும் காங்கிரஸில் சேர்த்துக் கொள்ள, காங்கிரசின் தற்போதைய கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பங்காரப்பா ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் பா.ஜ.க.விலிருந்தும் வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து 2005 ஆம் ஆண்டு ஷிமோகாவில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஷிகாரிபுரா எனும் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

நந்திகிராம் இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி

Published on: //
மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு பெரும் கலவரம் நடைபெற்ற நந்திகிராம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெரோஸா பீவி கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பரமானந்தா பாரதியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கம்யூனிஸ்டு கட்சியின் முஹம்மது இல்யாஸ் மீது ஊழல் புகார் கூறப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.

வெற்றி பெற்ற பெரோஸா பீவி நந்திகிராமில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக முன்னின்று போராட்டம் நடத்தியவர். தன்னுடைய வெற்றியை இப்போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்று இவர் கூறியுள்ளார்.

சரக்குந்து உரிமையாளர் சம்மேளன செயலாளர் கைது

Published on: //
கடந்த ஐந்து நாட்களாக இந்தியா முழுவதும் சரக்குந்து உரிமையாளர்கள் டீசல் விலை குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் மற்றும் சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்கள் அண்மித்து வரும் நிலையில் இந்த வேலை நிறுத்தம் நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. வேலை நிறுத்தத்தைக் கைவிடாவிட்டால் சரக்குந்து உரிமையாளர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் மேலாண்மைச் சட்டத்தின் (ESMA)படியும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படியும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது.

மத்திய அரசின் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சரக்குந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் ரமேஷ் குலாட்டி டில்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது அத்தியாவசியப் பொருட்கள் மேலாண்மை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

டில்லி, உத்திரப் பிரதேசம்,  ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் எஸ்மா சட்டத்தின்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மற்ற மாநிலங்களும் விரைவில் இச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் சுமார் 60 இலட்சம் சரக்குந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக ஓடாமல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் நடத்திய வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

மூன்றாவது அணி குறித்து ஆலோசிக்கும் சிபிஐ!

Published on: //
சிபிஎம் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் கொச்சியில் ஆரம்பித்தது. இக்கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாள் இறுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றாக மூன்றாம் அரசியல் முன்னணி குறித்து எவ்வித முடிவும் பெறப்படாமல் கூட்டம் முடிவு பெற்றது.

"காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றான மூன்றாம் முன்னணி, அரசியல் சூழல்களை அவதானித்து முடிவு செய்வோம்" என சிபிஎம் மத்திய கமிட்டி உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறினார்.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாகவும் கூட்டணியில் பல கட்சிகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அதற்கான சலனங்கள் கிடைக்கத்துவங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

பணவீக்கம் மீண்டும் குறைந்தது!

Published on: //
இந்தியாவின் பணவீக்க மதிப்பு மீண்டும் குறைந்தது. ஒரு நேரத்தில் 12 மேல் சென்ற பணவீக்க மதிப்பு கடந்தச் சில வாரங்களாக வெகுவாக குறைந்து வருகிறது.

கடந்த டிசம்பர் 27 அன்றைய கணக்குபடி அதற்கு முந்தைய வாரக்கணக்கான 6.38 லிருந்து மீண்டும் குறைந்து 5.91 ஆனது. 10 மாதங்களுக்கு இடைப்பட்ட காலயளவில் உள்ள மிகவும் முறைந்த மதிப்பாகும் இது.

உலக அளவில் பொருளாதார மந்தநிலை தொடரும் வேளையில், இந்திய பணவீக்க மதிப்பு குறைந்து வருவது இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஸா : 14ஆவது நாளாகத் தொடரும் தாக்குதல்கள்

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது "ஆபரேஷன் கேஸ்ட் லீட்" என்ற பெயரில் இஸ்ரேல் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதுவரை 781 பேர் பலியானதாகவும், 3100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் உடனடியான சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற நடைபெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்கா வாக்களிக்கவில்லை. மீதம் உள்ள 14 உறுப்பு நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இந்நிலையி்ல் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் தன்னுடைய தாக்குதலை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இன்றிரவு நடைபெற்ற தாக்குதலில் பாலஸ்தீன ஜனநாயக விடுதலை முன்னணி என்ற இடதுசாரி அமைப்பின் தலைவர் காயமுற்றதாகவும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பலியானதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வியாழன் அன்று ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் நிறைவேற்றிய பின் நடைபெற்ற தாக்குதலில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

5வது நாளாகத் தொடரும் சரக்குந்து வேலை நிறுத்தம்

Published on: //
கடந்த திங்கள் கிழமை அதிகாலை முதல் நாடு முழுவதும் சரக்குந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. டீசல் விலையில் 10 ரூபாய் வரை குறைப்பு, சேவை வரி விலக்கு, நாடு முழுவதும் ஒரே பெர்மிட் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசுடன் நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவுற்றதால் வேலை நிறுத்தம் தொடரும் என்று இந்திய சரக்குந்து வாகன உரிமையாளர்கள் பேராயம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பொங்கல், சங்கராந்தி போன்ற பண்டிகைகள் அண்மித்து வரும் நிலையில் நாடு முழுவதும் இந்த வேலை நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பொருள்களின் விலைகள் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது அத்தியாவசிய பணிகள் மேலாண்மை சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

குஜராத், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநில அரசுகள் இந்த சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே கூறியுள்ளன.

சினிமா விமர்சனம்: அபியும் நானும்

Published on: //

அபியும் நானும்


ரஸ்ஸல்


தமிழ் சினிமா என்றால் இப்போதெல்லாம் குடும்பத்துடன் பார்க்கும்படியாக அமைவதில்லை.
வெட்டு, குத்து, அரிவாள், ரத்தம் எனக் "கவிச்சி நெடி" அல்லது குளோஸப்பில் தொப்புழ், பெரிதுபெரிதாகக் குலுங்கும் மார்பகம் எனக் "கவர்ச்சி நெடி".
இதிலிருந்து வித்தியாசமாக, அருவருத்து முகம் சுளிக்காமல் பார்க்கும்படி அமைந்த ஒரு திரைப்படம் "அபியும்நானும்".
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் ப்ரகாஷ்ராஜ் , தமிழில் பல்வேறு கதாபாத்திரங்களில் கலக்கினாலும் ஒரு தயாரிப்பாளராக நல்ல படங்களையே தருவதாகக் கூறுகிறார். அவ்வகையில் 'மொழி'க்கு அடுத்து அவர் தந்துள்ளது "அபியும்நானும்" திரைப்படம்.
அபியாக த்ரிஷா, அப்பாவாகப் ப்ரகாஷ்ராஜ், அம்மாவாக ஐஸ்வர்யா (ராய் இல்லை)
காலையில் நடப்பதற்கு வந்த ப்ரகாஷ்ராஜ் வழியில் தம் மகளுடன் இருக்கும் ப்ருத்விராஜிடம் உரையாடுவதாகத் தொடங்கும் கதை.
ஒரே பெண் குழந்தையான அபி ப்ரீகேஜி வகுப்பில் சேர்வது முதல்,திருமணமாகிக் கணவனுடன் போவது வரை ஒரு பாசக்காரத் தந்தையின் எதிர்பார்ப்புகளையும் எதிரொலிகளையும் விவரிக்கிறது படம்.
எனினும் சில காட்சிகள் ரொம்ப ஓவர் - பூ சுற்றும் ரகம்.
ப்ரீகேஜிக்கு மகளைச் சேர்க்க இண்டர்வ்யூவுக்குத் தயாராகும் காட்சிகள், அவளை முதன்முதலாகப் பள்ளிக்கு அனுப்பும்போது காட்டும் உணர்ச்சிகள் போன்றவை மிகை ரகம்.
அதுபோல திட்டக்கமிஷனில் ஒரு உறுப்பினராக மட்டுமே இருக்கும் அபியின் காதலனை, அவளது வீட்டு லேண்ட் லைனில் பிரதமரே அழைத்துப் பேசும் காட்சி "பூ"ரகம்.
காலில் வெந்நீர் கொட்டியதாக அலறும் மகளைக் கண்டவுடன் என்ன ஏது என விசாரிக்காமல் மனைவியின் கன்னத்தில் அறைந்துவிட்டு மகளைத் தூக்கிக் கொண்டு ஓரும் பிரகாஷ்ராஜ், உண்மையில் வெந்நீர் கொட்டியது மனைவியின் காலில் என்று அறிந்த பின் காட்டும் பாவமும் ஐஸ்வர்யா கூறும் அறிவுரையும் யதார்த்தம் ரகம்.
"குழந்தைகளுக்கு நாம் எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறோம்; ஆனால் குழந்தைகள் ஈஸியாக நமக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்" என்பன போன்ற சிறப்பான வசனங்கள் சில இடங்களில் மின்னி மறைகின்றன.
மகளின் ஆசைக்காக ஒரு பிச்சைக்காரனை வீட்டில் தங்க வைப்பதில் என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் எனத் தோன்றும் கேள்விக்கு, மகள் ஒரு சீக்கியனைத் தன் வருங்கால வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்ததை ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் ப்ரகாஷ்ராஜிடம் அதே பிச்சைக்காரன் கூறும் விளக்கத்தில் விடைசொல்கிறார்.
நகைச்சுவைக்கெனத் தனியாகக் காமெடி ட்ராக் வைத்து, கோடுபோட்ட அண்டர்வியர் தெரியும்படி வேட்டியை மடித்துக் கட்டி, அடியும் உதையும் வாங்கும் சீப்பான காட்சிகளை வைக்காததற்குஇயக்குநர்க்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலாம்.
ப்ரகாஷ்ராஜிடம் இயக்குநர் மனோபாலா குறுக்கிட்டுக் கேட்கும் கேள்விகளும் ப்ரகாஷ்ராஜின் பதில்களும்தான் நகைச்சுவை. ப்ருத்வியிடம் ப்ரகாஷ்ராஜ் பேசிக்கொண்டிருக்கும்போது, "என்னசார் ஃப்ரெண்டா?" என மனோபாலா கேட்க, " இல்ல; என்னெ கொல பண்ண வந்திருக்கார் ரேட் பேசிட்டிருக்கேன்" என்று ப்ரகாஷ் ராஜ் அளிக்கும் பதில் இயல்பான நகைச்சுவை.
காதல் பறவையாக டூயட் பாடிப் படங்களில் உலாவரும் த்ரிஷா இப்படத்தில் அதிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார். ஐஸ்வர்யாவின் நடிப்பு கச்சிதம்.
பாடல்கள் எளிமையான ராகத்தில்..
"வா வா தேவதையே"," ஒரே ஒரு ஊரிலே" போன்ற பாடல்கள் ம்யூஸிக் சானல்களில் பிரபலமாகின்றன.
சீக்கியக் கதாபாத்திரங்கள் ஹிந்தியிலேயே உரையாடுவது ப்ள்ஸ்பாய்ண்ட்.
படம் பார்த்து முடிந்தபின்தான் தெரிகிறது இப்படம் சொல்லும் சேதி என்னவென்று.
" அன்பை விதையுங்கள்; அன்பால் வெல்லுங்கள்"
இதையே காட்சிகளாகவும் வசனங்களாகவும் காட்டியுளார் இயக்குநர் ராதாமோகன்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!