5வது நாளாகத் தொடரும் சரக்குந்து வேலை நிறுத்தம்
Published on வெள்ளி, 9 ஜனவரி, 2009
1/09/2009 11:11:00 AM //
இந்தியா
கடந்த திங்கள் கிழமை அதிகாலை முதல் நாடு முழுவதும் சரக்குந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. டீசல் விலையில் 10 ரூபாய் வரை குறைப்பு, சேவை வரி விலக்கு, நாடு முழுவதும் ஒரே பெர்மிட் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசுடன் நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவுற்றதால் வேலை நிறுத்தம் தொடரும் என்று இந்திய சரக்குந்து வாகன உரிமையாளர்கள் பேராயம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பொங்கல், சங்கராந்தி போன்ற பண்டிகைகள் அண்மித்து வரும் நிலையில் நாடு முழுவதும் இந்த வேலை நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பொருள்களின் விலைகள் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது அத்தியாவசிய பணிகள் மேலாண்மை சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
குஜராத், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநில அரசுகள் இந்த சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே கூறியுள்ளன.
0 comments