சினிமா விமர்சனம்: அபியும் நானும்
Published on வெள்ளி, 9 ஜனவரி, 2009
1/09/2009 07:08:00 AM //
சினிமா
அபியும் நானும்
ரஸ்ஸல்
தமிழ் சினிமா என்றால் இப்போதெல்லாம் குடும்பத்துடன் பார்க்கும்படியாக அமைவதில்லை.
வெட்டு, குத்து, அரிவாள், ரத்தம் எனக் "கவிச்சி நெடி" அல்லது குளோஸப்பில் தொப்புழ், பெரிதுபெரிதாகக் குலுங்கும் மார்பகம் எனக் "கவர்ச்சி நெடி".
இதிலிருந்து வித்தியாசமாக, அருவருத்து முகம் சுளிக்காமல் பார்க்கும்படி அமைந்த ஒரு திரைப்படம் "அபியும்நானும்".
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் ப்ரகாஷ்ராஜ் , தமிழில் பல்வேறு கதாபாத்திரங்களில் கலக்கினாலும் ஒரு தயாரிப்பாளராக நல்ல படங்களையே தருவதாகக் கூறுகிறார். அவ்வகையில் 'மொழி'க்கு அடுத்து அவர் தந்துள்ளது "அபியும்நானும்" திரைப்படம்.
அபியாக த்ரிஷா, அப்பாவாகப் ப்ரகாஷ்ராஜ், அம்மாவாக ஐஸ்வர்யா (ராய் இல்லை)
காலையில் நடப்பதற்கு வந்த ப்ரகாஷ்ராஜ் வழியில் தம் மகளுடன் இருக்கும் ப்ருத்விராஜிடம் உரையாடுவதாகத் தொடங்கும் கதை.
ஒரே பெண் குழந்தையான அபி ப்ரீகேஜி வகுப்பில் சேர்வது முதல்,திருமணமாகிக் கணவனுடன் போவது வரை ஒரு பாசக்காரத் தந்தையின் எதிர்பார்ப்புகளையும் எதிரொலிகளையும் விவரிக்கிறது படம்.
எனினும் சில காட்சிகள் ரொம்ப ஓவர் - பூ சுற்றும் ரகம்.
ப்ரீகேஜிக்கு மகளைச் சேர்க்க இண்டர்வ்யூவுக்குத் தயாராகும் காட்சிகள், அவளை முதன்முதலாகப் பள்ளிக்கு அனுப்பும்போது காட்டும் உணர்ச்சிகள் போன்றவை மிகை ரகம்.
அதுபோல திட்டக்கமிஷனில் ஒரு உறுப்பினராக மட்டுமே இருக்கும் அபியின் காதலனை, அவளது வீட்டு லேண்ட் லைனில் பிரதமரே அழைத்துப் பேசும் காட்சி "பூ"ரகம்.
காலில் வெந்நீர் கொட்டியதாக அலறும் மகளைக் கண்டவுடன் என்ன ஏது என விசாரிக்காமல் மனைவியின் கன்னத்தில் அறைந்துவிட்டு மகளைத் தூக்கிக் கொண்டு ஓரும் பிரகாஷ்ராஜ், உண்மையில் வெந்நீர் கொட்டியது மனைவியின் காலில் என்று அறிந்த பின் காட்டும் பாவமும் ஐஸ்வர்யா கூறும் அறிவுரையும் யதார்த்தம் ரகம்.
"குழந்தைகளுக்கு நாம் எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறோம்; ஆனால் குழந்தைகள் ஈஸியாக நமக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்" என்பன போன்ற சிறப்பான வசனங்கள் சில இடங்களில் மின்னி மறைகின்றன.
மகளின் ஆசைக்காக ஒரு பிச்சைக்காரனை வீட்டில் தங்க வைப்பதில் என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் எனத் தோன்றும் கேள்விக்கு, மகள் ஒரு சீக்கியனைத் தன் வருங்கால வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்ததை ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் ப்ரகாஷ்ராஜிடம் அதே பிச்சைக்காரன் கூறும் விளக்கத்தில் விடைசொல்கிறார்.
நகைச்சுவைக்கெனத் தனியாகக் காமெடி ட்ராக் வைத்து, கோடுபோட்ட அண்டர்வியர் தெரியும்படி வேட்டியை மடித்துக் கட்டி, அடியும் உதையும் வாங்கும் சீப்பான காட்சிகளை வைக்காததற்குஇயக்குநர்க்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலாம்.
ப்ரகாஷ்ராஜிடம் இயக்குநர் மனோபாலா குறுக்கிட்டுக் கேட்கும் கேள்விகளும் ப்ரகாஷ்ராஜின் பதில்களும்தான் நகைச்சுவை. ப்ருத்வியிடம் ப்ரகாஷ்ராஜ் பேசிக்கொண்டிருக்கும்போது, "என்னசார் ஃப்ரெண்டா?" என மனோபாலா கேட்க, " இல்ல; என்னெ கொல பண்ண வந்திருக்கார் ரேட் பேசிட்டிருக்கேன்" என்று ப்ரகாஷ் ராஜ் அளிக்கும் பதில் இயல்பான நகைச்சுவை.
காதல் பறவையாக டூயட் பாடிப் படங்களில் உலாவரும் த்ரிஷா இப்படத்தில் அதிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார். ஐஸ்வர்யாவின் நடிப்பு கச்சிதம்.
பாடல்கள் எளிமையான ராகத்தில்..
"வா வா தேவதையே"," ஒரே ஒரு ஊரிலே" போன்ற பாடல்கள் ம்யூஸிக் சானல்களில் பிரபலமாகின்றன.
சீக்கியக் கதாபாத்திரங்கள் ஹிந்தியிலேயே உரையாடுவது ப்ள்ஸ்பாய்ண்ட்.
படம் பார்த்து முடிந்தபின்தான் தெரிகிறது இப்படம் சொல்லும் சேதி என்னவென்று.
" அன்பை விதையுங்கள்; அன்பால் வெல்லுங்கள்"
இதையே காட்சிகளாகவும் வசனங்களாகவும் காட்டியுளார் இயக்குநர் ராதாமோகன்.
0 comments