சரக்குந்து உரிமையாளர் சம்மேளன செயலாளர் கைது
Published on வெள்ளி, 9 ஜனவரி, 2009
1/09/2009 09:21:00 PM //
இந்தியா
கடந்த ஐந்து நாட்களாக இந்தியா முழுவதும் சரக்குந்து உரிமையாளர்கள் டீசல் விலை குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் மற்றும் சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்கள் அண்மித்து வரும் நிலையில் இந்த வேலை நிறுத்தம் நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. வேலை நிறுத்தத்தைக் கைவிடாவிட்டால் சரக்குந்து உரிமையாளர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் மேலாண்மைச் சட்டத்தின் (ESMA)படியும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படியும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது.
மத்திய அரசின் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சரக்குந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் ரமேஷ் குலாட்டி டில்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது அத்தியாவசியப் பொருட்கள் மேலாண்மை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
டில்லி, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் எஸ்மா சட்டத்தின்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மற்ற மாநிலங்களும் விரைவில் இச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
நாடு முழுவதும் சுமார் 60 இலட்சம் சரக்குந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக ஓடாமல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் நடத்திய வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
0 comments