ஆந்திராவில் வாக்காளர்களைக் கவர கோழி பரிசு!
மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் கரீம் நகர் மாவட்டத்தின் நர்சிங்பூர் கிராமத்தில் கோழி பாக்கெட்டுகளை காவல்துறை கைப்பற்றி உள்ளது. 1 கிலோ கோழிகளைக் கொண்ட இப்பாக்கெட்டுகளை ஆளும் கட்சியான காங்கிரஸ் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு வழங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த இரு வாரங்களில் மட்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட வாகன சோதனைகளின் போது 25 கோடி ரூபாய்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. செவ்வாய் கிழமையன்று மட்டும் 1.26 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் சாராயம் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டமாகவும் தங்களின் தீவிரக் கண்கானிப்பினால் அவை தவிர்க்கப் பட்டு வருவதாகவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுப்பா ராவ் கூறினார்.
முதல்கட்டத் தேர்தல் நடைபெற இருக்கும் பகுதிகளில் காவல்துறை, வருமான வரித்துறை மற்றும் கலால் வரித்துறையினர் சுமார் 752 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்கானித்து வருகின்றனர்.
முதல் கட்ட வாக்குப் பதிவு: பீகாரில் கண்டதும் சுட உத்தரவு!
மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பா.ஜ.க.வின் ராஜீவ் பிரதாப் ரூடி, மத்திய அமைச்சார் மீரா குமார் போன்ற முக்கியப் பிரமுகர்களின் தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்க இருக்கிறது. சுமார் 1.75 கோடி வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதிகளில் 21 பெண்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கலவர சூழல் ஏற்பட்ட அதனைக் காவலர்களால் கட்டுப்படுத்த இயலாது என்ற நிலை உருவானால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது என்று பீகார் மாநில உள்துறைச் செயலாளர் அப்சல் அமானுல்லா கூறினார்.
அத்வானி ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிமை - சோனியா
பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி, பிரதமர் மன்மோகன்சிங்கை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்துவருகிறார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பிதாரில் தேர்தல் பிரச்சாரம் செய்த காங்., தலைவர் சோனியாஆர்.எஸ்.எஸ்., க்கு கட்டுப்பட்டுதான் மதவாத தலைவரான அத்வானி எந்த ஒரு முடிவையும் எடுப்பார். மன்மோகன் பலவீனமானவர் என்றும் சொந்தமாக முடிவெடுக்கும் திறன் இல்லாதவர் என்றும் கூறி வரும் அத்வானி என்றைக்காவது ஆர்.எஸ்.எஸ்., தலையீடு இல்லாமல் முடிவு எடுத்திருக்காரா என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமர் என்பவர் கட்சி எல்லைகளை கடந்தவர் என்பதையும் அவர் இந்தியாவின் அடையாளம் என்பதையும் அத்வானி புரிந்து கொள்ள வேண்டும். பிரதமரை இழிவு படுத்துவது ஒட்டு மொத்த இந்தியாவையும் இழிவு படுத்துவது என்பதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிய கூட்டணி : சமூக ஜனநாயக முன்னணி
மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் சையத்இனாயத்துல்லா ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக சமூக ஜனநாயக முன்னணி என்ற புதிய கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம். கடந்த 1 மாதமாக பேசி இன்று இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது. எங்களுடன் சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை மற்றும் சில அமைப்புகள் பேசி வருகின்றன.
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி 4 தொகுதியில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறையில் ஜவாஹிருல்லா, மத்திய சென்னையில் ஹைதர்அலி, பொள்ளாச்சியில் உமர், ராமநாதபுரத்தில் சலீமுல்லா கான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இன்னும் சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி பின்னர் அறிவிப்போம்.
புதிய தமிழகம் கட்சி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்திய தேசிய லீக் 3 தொகுதியில் போட்டியிடுகிறது. திருச்சி, தஞ்சை, கோவை அல்லது தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இந்த அணியில் விரைவில் இன்னும் பலர் சேருவார்கள் என்றனர்.
மேலும் பேசிய அவர்கள், 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். நாளையே தேர்தல் பிரசாத்தை தொடங்க உள்ளோம் என்றனர். அப்போது பேசிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி,
இலங்கை தமிழர் பிரச்சினையை தி.மு.க., அ.தி.மு.க. கைவிட்டு விட்டது. இலங்கைப் பிரச்சினையை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது போல தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. கடந்த 40 வருடத்தில் தென் மாவட்டங்களில் கல்வி, மருத்துவம், தொழிற்சாலை போன்றவை உருவாக்கப்படவி்ல்லை என்றார்.
எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம் என்றார்.
இலங்கையில் சிறைக் கைதிகள் ஆறுபேர் சுட்டுக் கொலை
கொழும்பு அருகே உள்ள கலுதாரா சிறையிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிறைக்கம்பிகளை அறுத்து சிறையிலிருந்து தப்பிக்க 11 சிறைவாசிகள் முயன்றனர். சிறைக் காலவர்கள் அவர்களை நோக்கிச் சுட்டதில் 6 கைதிகள் கொல்லப் பட்டனர். மேலும் 4 பேர் காயமுற்றனர். ஒருவர் தனது இருப்பிடத்துக்குத் திரும்பிவிட்டார் என இலங்கை சிறைத்துறைத் தலைவர் கூறினார். தப்பிக்க முயன்ற ஒவ்வொருவர் மீதும் 4 அல்லது 5 கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வு குறித்து விசாரிக்க சிறப்பு புலணாய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரித்வி II வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை தரையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.