Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தங்கம் விலை குறையுமா?

Published on: புதன், 4 மார்ச், 2009 // , , , , ,

வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்துவரும் தங்கத்தின் விலை இவ்வாரத் தொடக்கம் முதல் குறைய ஆரம்பிக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதமே ஒரு பவுன் 10,000 ரூபாய் என்ற அளவீட்டைத் தாண்டியிருந்த தங்கம் தினமும் 200, 300 என்று விலை ஏறி உச்சபட்சமாக நேற்றைக்கு முன்பு 11,464 என்ற அளவுக்கு உயர்ந்தது. ஆயினும் ஆறுதல் அளிக்கும் விதமாக, நேற்று பவுனுக்கு ரூ.232 குறைந்து ரூ. 11,232 என்ற விலையில் இருந்தது. இன்று மேலும் ரூ.72 குறைந்து பவுன் ரூ.11,160 ஆக சந்தை நிலவரம் இருந்தது. இரண்டுநாட்களில் ரூ.300 என்ற அளவுக்கு குறைவது நல்ல அறிகுறி என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.1395/= என்பதாக உள்ளது.

மேலும், உலக அளவில் தங்கத்தின் இருப்பு அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் மேலும் விலை இறங்கி ஒரு பவுன் ரூ.10,000 என்ற அளவுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் பால் குடித்த 61 குழந்தைகள் உடல் நலக்கேடு!

குஜராத்தில் பள்ளி ஒன்றில் பால் குடித்த 61 பள்ளிக் குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

குஜராத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு மாநில அரசு 200 மில்லி பால் பாக்கெட்டுகளை வழங்கி வருகிறது. செவ்வாய் கிழமை பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள பட்காவாடா என்ற கிராமத்தில் உள்ள பகுதியில் செவ்வாய் கிழமை பள்ளி தொடங்கிய பின் 97 குழந்தைகளுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

பாலைக் குடித்து சில நேரம் கழித்து குழந்தைகள் பள்ளி வளாகத்திலேயே வாந்தி எடுத்தனர். இதனால் அந்தப் பள்ளியில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து அந்தக் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு வெளியில் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர் மருத்துவமனைப் பகுதியில் பெரும் திரளாகக் கூடினர்.

பள்ளிக்குழந்தைகளுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கு முன் உற்பத்தி தேதிதியை சரிபார்த்த பின்னரே கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதாக மாவட்ட கல்வி அதிகாரி கூறினார்.

தரமற்ற பால் எங்களுக்குத் தேவையில்லை. நாளை முதல் இத்தகைய பால் பாக்கெட்டுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மாநில அரசின் பால் வழங்கும் திட்டத்தின் படி இனி எங்கள் குழந்தைகள் பள்ளியில் பால் குடிக்காது என்று அந்தப் பகுதியிலுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் பா.ஜ.க தனித்துப்போட்டி- இல.கணேசன்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க தனித்து போட்டியிடும் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பா.ஜனதாவை பொருத்தவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அமைப்பு ரீதியாக தேர்தல் பணியை துவங்கிவிட்டோம்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் ஆய்வு செய்துவிட்டோம்.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் போட்டியிடுவதா அல்லது ஓரிரு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதா என்பதை 12ஆம் தேதி நடக்கும் மாநில தேர்தல் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

இம்மாதம் 15ஆம் தேதி வேட்பாளர் விபரங்களை முறைப்படி அறிவிப்போம். தமிழகத்தில் பா.ஜ.க. தனித்து போட்டியிடவே முடிவு செய்துள்ளோம். மேலும் தேர்தலுக்காக இணைதள தொலைக்காட்சியை பா.ஜ.க. தொடங்க உள்ளது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுப்போம் என்றும் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் நாடு திரும்பினர்!

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் வீரர்களைக் குடும்பத்தினர் விமான நிலையம் சென்று அழைத்துவந்தனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த திலான் சமரவீர கொழும்பிவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே வரும் 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிகள் பற்றி முடிவு எடுப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் குழு (ஐ.சி.சி) விரைவில் கூட இருக்கிறது.

கேரளா: தொகுதிப் பங்கீட்டில் இடதுசாரிகளிடையே பிளவு?

கேராளாவில் மக்களவைத் தொகுதிப் பங்கீட்டில் இடது சாரிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2004ஆம் ஆண்டு தேர்தலில் 14 இடங்களில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும், 4 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், ஜனதா தளம் (எஸ்), கேரளா காங்கிரஸ் (ஜோசப்) ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன.

செவ்வாய் கிழமை நடைபெற்ற இடது முன்னணி கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இடது முன்னணி தலைவர் வைக்கம் விஸ்வம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் (ஜோசப்) ஒரு தொகுதியிலும் போட்டியிடும் என்று கூறினார்.

கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகள் குறித்து வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று கூறிய அவர், பொன்னானி தொகுதியில் இடது சாரிகள் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் கூறினார்.

நீண்ட காலமாக பொன்னானி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டு வருகிறது. "பொன்னானி தொகுதியை நாங்கள் விட்டுக் கொடுத்துவிட்டதாக எவர் சொன்னது? 2004ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் இந்த முறையும் போட்டியிடும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் வெலியம் பார்கவன் கூறியுள்ளார்.

இடது முன்னணியில் உள்ள புரட்சிகர சோசலிஸ்டு கட்சி தங்களுக்கு இடம் ஒதுக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்கள் கட்சியின் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற இருப்பதாகவும் மாநில அமைச்சரவையிலிருந்து விலகுவது உள்பட அனைத்துவகை வழிமுறைகளும் ஆராயப்படும் என்றும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ண பிள்ளை செய்தியாளர்களிடம் கூறினார்.

குஜராத்தின் அனைத்து தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் போட்டி

குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சி கூறியுள்ளது.

பகுஜன் சமாஜ்வாதி கட்சி குஜராத்தை முக்கியமான மாநிலமாகக் கருதுவதால், குஜராத்தின் 26 தொகுதிகளிலுதம் தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆர். பி. சிங் கூறினார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 182 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

திரிபுரா மக்களவைத் தேர்தல் இடதுசாரி வேட்பாளர்கள் அறிவிப்பு

திரிபுரா மாநிலத்தின் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் ஆளும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தற்போதைய மக்களவை உறுப்பினர்களே மீண்டும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திரிபுரா தொகுதியில் காகென் தாஸ் என்பவரும் கிழக்கு திரிபுரா (தனி) தொகுதியில் பஜுபன் ரீங் ஆகியோர் போட்டியிடுவார்கள். இதுவரும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள்.

பஜுபன் ரீங் கிழக்கு திரிபுரா தொகுதியில் 1980 முதல் 9 முறை போட்டியிட்டு 7 முறை வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு முடியவில்லை. மேற்கு திரிபுரா தொகுதியில் போட்டியிட அக்கட்சியினர் 7 பேரும், கிழக்கு திரிபுரா தொகுதியில் போட்டியிட 4 பேரும் விண்ணப்பித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பாரதீய ஜனதா கட்சி இம்மாநிலத்தின் இரு தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிக்கபட்டுள்ளது. எனினும் வேட்பாளர் தேர்வு முழுமையடையவில்லை.

பஞ்சாப், சண்டிகர் மாநில கல்லூரி ஆசிரியர்கள் 72 மணி நேர வேலை நிறுத்தம்

பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலத்தைச் சார்ந்த அரசு மற்றம் தனியார் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி செவ்வாய் கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக் கழக மாணியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி பஞ்சாப் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த பந்திற்கு அழைப்பு விடுத்தது. 5 பல்கலைக்க கழகங்கள், 54 அரசுக் கல்லூரிகள மற்றும் 170 தனியார் கல்லூரிகள் ஆகியவற்றில் பணி புரியும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளனர்.

நடத்தைவிதிகள் நடைமுறைப்படுத்தப் பட்டதால் செவ்வாய் கிழமையன்று சில ஆசிரியர்கள் குழப்பமடைந்து பணிக்குச் சென்றனர் எனவும், சுமார் 7000 பேர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதாகவும் இன்று முதல் அனைத்து ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் இக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜகவத் சிங் கூறினார்.

உத்திரப் பிரதேம், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பல்கலைக் கழக மாணியக் குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப் பட்டுவிட்டதாகவும், பொருளாதார வசதியுடைய பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் நடைமுறைப் படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் அகாலிதள கட்சியைப் புறக்கணிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தி.மு.க. வேட்பாளர் தேர்வு நேர்காணல் மார்ச் 25ஆ‌ம் தேதி நடைபெறும் - க.அன்பழகன்

பாராளுமன்ற தேர்தலுக்கான விண்ணப்பம் 5ஆ‌ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கும். தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மார்ச் 15ஆ‌ம் தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் 25ஆ‌ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி, பொது செயலர் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

பாராளுமன்ற வேட்பாளர் பொது தொகுதிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.10 ஆயிரம், தனித்தொகுதி விண்ணப்ப கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆகும். விண்ணப்ப படிவங்களை தி.மு.க. தலைமைக்கழகத்தில் ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவர் ஒரு தொகுதிக்கு மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் எ‌ன்றும், தோழமைக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்படுமானால் அந்த தொகுதிகளுக்கு செலுத்திய விண்ணப்ப கட்டணத்தை விண்ணப்பதாரர்களுக்கு வரைவு காசோலை மூலம் திருப்பி வழங்கப்படும் எ‌ன்றும் தி.மு.க. பொது செயலர் க.அன்பழகன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!