கேரளா: தொகுதிப் பங்கீட்டில் இடதுசாரிகளிடையே பிளவு?
கேராளாவில் மக்களவைத் தொகுதிப் பங்கீட்டில் இடது சாரிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2004ஆம் ஆண்டு தேர்தலில் 14 இடங்களில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும், 4 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், ஜனதா தளம் (எஸ்), கேரளா காங்கிரஸ் (ஜோசப்) ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
செவ்வாய் கிழமை நடைபெற்ற இடது முன்னணி கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இடது முன்னணி தலைவர் வைக்கம் விஸ்வம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் (ஜோசப்) ஒரு தொகுதியிலும் போட்டியிடும் என்று கூறினார்.
கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகள் குறித்து வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று கூறிய அவர், பொன்னானி தொகுதியில் இடது சாரிகள் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் கூறினார்.
நீண்ட காலமாக பொன்னானி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டு வருகிறது. "பொன்னானி தொகுதியை நாங்கள் விட்டுக் கொடுத்துவிட்டதாக எவர் சொன்னது? 2004ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் இந்த முறையும் போட்டியிடும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் வெலியம் பார்கவன் கூறியுள்ளார்.
இடது முன்னணியில் உள்ள புரட்சிகர சோசலிஸ்டு கட்சி தங்களுக்கு இடம் ஒதுக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்கள் கட்சியின் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற இருப்பதாகவும் மாநில அமைச்சரவையிலிருந்து விலகுவது உள்பட அனைத்துவகை வழிமுறைகளும் ஆராயப்படும் என்றும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ண பிள்ளை செய்தியாளர்களிடம் கூறினார்.
0 comments