Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் கூட்டணி இல்லை - காங்கிரஸ்

Published on: வியாழன், 29 ஜனவரி, 2009 // , , , , ,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் நாடாளு மன்றத் தேர்தல் முயற்சிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் இறங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று அதன் தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியளார்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவேதி, காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் கூட்டணி அமைக்காது என்றும் மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகளுடனும் தொகுதி உடன்பாடு மற்றும் கூட்டணி அமைக்கும் என்றும் கூறினார்.

கூட்டணி என்பது எண்ணிக்கையைப் பொறுத்தது என்றும், தேர்தலில் பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை படி தேர்தலுக்குப் பிறகே தெரியவரும் வரும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருக்கிறது உண்மைதான.. ஆனால் அது தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலத் தலைவர்களுடன் கலந்து மாநில அளவில் உடன்பாடுகள் எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் துணை முதல்வரின் மனைவி தற்கொலை முயற்சி

ஹரியாணா மாநில முன்னாள் துணை முதல் சாந்து முகம்மதுவின் மனைவி பிஜா (வயது 37) இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மொஹாலியில் உள்ள அவரது வீட்டில் விஷ மாத்திரை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. இப்போது மருத்தவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவர்கள் அனுமதிக்குப் பின் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக தன்னுடைய கணவனும் முன்னாள் முதல்வருமான சந்தர் மோகன் என்ற சாந்து முகம்மதுவைக் காணவில்லை என்று நேற்று புகார் அளித்திருந்தார். ஆனால் அந்தப் புகாரை சாந்து முகம்மது மறுத்துள்ளார். காணாமல் போவதற்கு தான் குழந்தை இல்லை என்றும் தானாகவே சென்றதாகவும் அவர் கூறினார்.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை - உ.பி. முதலிடம்

நாட்டிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உத்திரப் பிரதேசத்தில்தான் அதிகம் நிகழ்வதாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார். உத்திரப் பிரதேசத்தை அடுத்து ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் நிகழ்வதாகவும் அவர் கூறினார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் குறித்து விவாதிப்பதற்காக 5 மாநிலப் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற அமர்வுக்குப் பின் அவர் இதைத் தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலமும் தந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமைந்த வரிசையே இது என்றும் அவர் கூறினார்.

வன்கொடுமைக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படாமல் இருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் வன்கொடுமைக்கு எதிரான புகார்களில் 39 சதவீதம் அளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. 71 சதவீத புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

நேற்று நடைபெற்ற இந்த அமர்வில் மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், உத்திரப் பிரதேசம், உத்தர்காண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலப் பிரதிநிதகள் கலந்து கொண்டனர்.

பிரான்சில் இன்று முழு அடைப்பு

பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர் சங்கங்கள் விடுத்த வேண்டுகோளின்படி இன்று பிரான்சில் முழு அடைப்பு நடைபெறுகிறது. சுமார் 75 சதவீத மக்களும் அனைத்து முக்கிய தொழிற் சங்கங்களும் இந்த முழு அடைப்பிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

உலகப் பொருளாதார சீர் குலைவால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். அடுத்த ஆண்டு பிரான்சில் வேலையற்றோர் விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் வேலைக்கும் தாங்கள் பெறும் ஊதியத்திற்கும் உத்தரவாதம் தரக் கோரி பிரான்சில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் முயற்சியாக பல பில்லியன் யூரோ உதவிகளை வங்கிகளுக்கு வழங்கும் பிரெஞ்சு அரசு, தொழிற் கூடங்களுக்கும் மற்ற வணிக நிறுவனங்களுக்கும் மிகக் குறைந்த அளவு உதவி செய்கிறது என்று பிரெஞ்சு அரசு மீது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இன்றைய வேலை நிறுத்தத்தால் போக்குவரத்து, கல்விக் கூடங்கள் மற்றும் சுகாதாரப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஹரியாணா முன்னாள் துணை முதல்வர் கடத்தப்பட்டதாக 2வது மனைவி புகார்

ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரான சந்தர் மோகன் (தற்போது சாந்து முகம்மது) நேற்று கடத்தப்பட்டதாக அவரது இரண்டாவது மனைவி கூறினார்.

சாந்து முகம்மதுவை அவரது வீட்டிற்கு சந்திக்கச் சென்ற சிலர் வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றிச் சென்றுவிட்டனர் எனவும் தன்னால் அவரை அதன்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், சாந்து முகம்மதுவை கடத்தியவர்கள் கொலை செய்யக் கூடும் என்று அஞ்சுவதாகவும் கூறிய பிஜா, இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளதாகக் கூறினார்.

சாந்து முகம்மதுவின் இளைய சகோதரரும் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குல்தீப் பிஷ்னோய் என்பவர்தான் இதற்குக் காரணம் என்று அவர் குற்றம் சுமத்தினார்.

ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகனான சந்தர் மோகன் கடந்த டிசம்பர் மாதம் பிஜா என்ற இப்பெண்ணை மணம் புரிவதற்காகவே அவரும் இப்பெண்ணும் முஸ்லிமாக மாறினர். இது ஹரியானா அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனால் அவர் துணை முதல்வர் பதவியையும் இழக்க நேரிட்டது.

தற்போது கல்கா சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இவர் இருந்து வருகிறார். நான்காவது முறையாக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்நதெடுக்கப் பட்டவர் என்பது குறி்ப்பிடத் தக்கது.

பெட்ரோல், டீசல் விலை குறைந்தது!

Published on: //
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததையடுத்து இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டுவந்தது. கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது மீண்டும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாயும் டிசல் விலையில் இரண்டு ரூபாயும் சமையல் வாயுவின் விலையில் 25 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்விலை குறைவும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வந்தது.

ஜெர்மனி பெண்ணை கடத்திக் கற்பழித்த ஐவருக்கு வாழ்நாள் சிறை

ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு மாவட்ட நீதி மன்றம் வழ்நாள் சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த செப்டம்பர் மாதம் ஜெர்மனியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை ஐந்து நட்சத்திர விடுதியிலிருந்து கடத்திச் சென்று கற்பழித்தனர் என்று இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அம்பாலா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்குள் விசாரித்து வழக்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ராஜ் சேகர் அட்ரி குற்றம் சாட்டப்பட்ட ஐந்துபேரும் குற்றவாளிகள் என்றும் ஐந்து பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை அளிப்பதாகவும் தனது தீர்ப்பை அறிவித்தார்.

பங்கஜ் புனியா, மன்வீர் சிங் ஜோலி, ஹர்பீத் சிங் டல்லி, சுக்வீந்தர் சிங் சுகி மற்றும் சோம்பால் என்று அறியப்படும் ஐந்து குற்றவாளிகளும் அம்பாலா மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்றும் 20 வயதினர் என்றும் தெரிய வருகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!