Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மாதா, பிதா, குருவை மதிக்க வேண்டும்: விஞ்ஞானி அண்ணாதுரை

Published on: புதன், 11 பிப்ரவரி, 2009 // ,
மாதா, பிதா, குருவை மதிக்க வேண்டும்: விஞ்ஞானி அண்ணாதுரை

கோவை, பிப். 10: மாதா, பிதா, குருவை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று "சந்திரயான்-1' திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையத்தில் தான் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் பேசியது:

மாதா, பிதா, குரு மூவரையும் மதிக்க மாணவ சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டும். இதை மனதில் நிறுத்தி செயல்பட்டால் 2020-ல் இந்தியா வளமாக மாறும் என்றார். மயில்சாமி அண்ணாதுரை தந்தை மயில்சாமி, கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் என்.போஸ், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சி.செல்லம்மாள், எஸ்.கோவிந்தசாமி, கல்விக்குழுத் தலைவர் தாமரைதுரை, ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இளைஞர் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த மரக்கன்றுகளை மயில்சாமி அண்ணாதுரை நட்டார். செங்குட்டாம்பாளையம் பள்ளித் தலைமை ஆசிரியர் மா.அங்குசாமி நன்றி கூறினார்.

கஸபிற்கு எதிராக பாகிஸ்தான் வழக்கு பதிவு செய்தது!

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையில் அகப்பட்ட முகம்மது அஜ்மல் அமிர் கஸபிற்கு எதிராக பாகிஸ்தான் காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை தாக்குதல் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஏஜன்ஸி வழங்கிய அறிக்கையினை அடிப்படையாக வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

தீவிரவாத எதிர்ப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜியோ நியூஸ் தொலைகாட்சி கூறியது.

ஒரே குடும்பத்தில் 8 பேர் படுகொலை!

பீகார் மாநிலம் பகல்பூரில் ஒரே குடும்பத்தில் 8 நபர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பணக்கார குடும்பத்திலுள்ள பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளைஞனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர்.

21 வயது ரத்தன் சிங், 18 வயது காஞ்சன் குமாரியைக் காதலித்து வந்தார். இரு குடும்பங்களிலும் ஆண்டுகணக்கில் பரம்பரை பகை இருந்து வந்துள்ளது. குடும்பத்தாரின் சம்மதம் கிடைக்காது என்பதை உணர்ந்த இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர்.

சமாதானம் பேசலாம் என ரத்தன் சிங்கின் குடும்பத்தினரை அழைத்துக் கொடூரமாக கொலை செய்தனர் காஞ்சன் குமாரியின் வீட்டினர். இது தொடர்பாக 15 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர் கைது!

கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி ஸ்டேட்ஸ்மேன் (The Statesman) நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் இன்று கைது செய்யப் பட்டனர்.

குறிப்பிட்ட ஒரு மதத்தினர் நம்பிக்கைகளைத் தாக்கும் விதமாக எழுதியதாக ஆங்காங்கே நடந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து இந்த நாளிதழின் ஆசிரியர் ரவீந்திர குமார் மற்றும் வெளியீட்டாளர் ஆனந்த் சின்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை இணை ஆய்வாளர் பிரதீப் சட்டர்ஜி கூறினார்.

முகமது சகீது என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், இந்திய குற்றவியல் சட்டம் 295A மற்றும் 34 ஆகியவற்றின் அடிப்படையில் புகார் அளிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் கொல்கத்தா மாநகர தலைமை மாஜிஸ்ட்ரேட் ஆனந்து முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரூ. 5000 பிணைத் தொகையின் பேரில் அவர்கள் இருவரும் பிணையில் விடப்பட்டனர்.

ஜம்மு கஷ்மீர் அரசு ஊழியர் 2 நாள் வேலை நிறுத்தம்

6வது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், ஓய்வு வயதை 58 லிருந்து 60ஆக மாற்றக் கோரியும் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கையைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்கிறது. உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில நிதியமைச்சர் அப்துல் ரகீம் ரேத்தரின் வேண்டுகோளைப் புறக்கணித்து அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கூடுதல் நிதிச்சுமையைக் களைய வழிவகைகளை அரசு ஆராய்ந்து வருவதாக் கூறிய நிதியமைச்சர், இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளிடம் மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 24ஆம் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜம்மு கஷ்மீர் அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அருணாச்சல பிரதேசத்தில் எஸ்மா சட்டம் அமுல்

அருணாச்சலப் பிரதேச மாநில அரசு அத்தியாவசியப் பணிகள் மேலாண்மை சட்டத்தை (ESMA) இன்று நடைமுறைப் படுத்தியுள்ளது.

6ஆவது சம்பளக் கமிஷன் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்த ஊதியங்களைப் போன்று தங்களுக்கும் முன் தேதியிட்டு நடைமுறைப் படுத்தி வழங்கக் கோரி இம்மாநில அரசு அலுவலர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒடுக்கும் முகமாக இன்றுமுதல் எஸ்மா சட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிகிறது.

எஸ்மா சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதே வேளை அலுவலர்களுக்கு ஜனவரி 2009 முதல் ஊதிய உயர்வையும் அறிவித்துள்ளது. ஆனால் அரசு அலுவலர்கள் ஊதிய உயர்வை ஜனவரி 2006 தேதியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாரதீய ஜனதா கட்சி அரசு அலுவலர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்

நடப்பு நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கிறது. இதில் பத்து அமர்வுகள் இருக்கும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் இத்தொடரில் தீவிரப் பங்காற்றும் என்று தெரிகிறது.

பொதுவாக, ரயில்வே மற்றும் பொது நிதிநிலை அறிக்கைகளுக்கான சிறப்பு கூட்டத்தொடராகக் கருதப்பட்டாலும், இவ்வாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கும் என்று தெரிகிறது.

தீவிரவாதம், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் குறித்த பிரசினைகளை எதிர்கட்சிகள் எழுப்ப இருக்கின்றன. மேலும் ஒரு தேர்தல் ஆணையருக்கு எதிராக தலைமை ஆணையர் விடுத்த பதவிநீக்க கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும்
மும்பை 26/11 குறித்த நீதிவிசாரணைக்கு பா ஜ க கோரிக்கை விடுக்க இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரயில்வே யின் இடைக்கால நிதிநிலை அறிக்கை வெள்ளியன்றும் பொது நிதிநிலை அறிக்கை திங்களன்றும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

கொலை வழக்கில் மத்திய அமைச்சர்

நடுவண் அரசின் சிறுதொழிற் துறை அமைச்சராக உள்ளவர் மஹாவீர் பிரசாத்.
கோரக்பூரில் சொத்து பிரசினை ஒன்றில் இவரது ஆதரவாளர்கள் இருவர் மற்றொருவரைக் கொன்று விட, அவர்களை காப்பாற்றும் பொருட்டு, கொலையை விபத்து என்று காவல்துறையில் மாற்றி பதிவு செய்ய தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினாராம்.

இது பற்றி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட, நீதிமன்ற உத்தரவின் பேரில் கோரக்பூர் காவல்துறை அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

பொருளாதார நெருக்கடி: அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசு உதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவியாக அரசின் பொருளாதார உதவி செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருந்தது தெரிந்ததே

முதற்கட்டமாக 829 மில்லியன் டாலர்கள் நிதியுதவிக்கு செனட் ஒப்புதல் பெற முடிவு செய்து விவாதத்திற்குட்படுத்தப்பட்டது. அதில் இத்திட்டத்திற்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 37 வாக்குகளும் கிடைத்துள்ளன.

முதலமைச்சருக்கு அறுவைசிகிச்சை வெற்றி

முதலமைச்சர் கருணாநிதிக்கு முதுகு தண்டுவடத்தில் இன்று காலை 6மணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 14 மருத்துவர்கள் நான்கு மணிநேரத்துக்கும் மேலாக இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர்.

சிகிச்சைக்குப் பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலியத் தூதுவர் மீது காலணி வீசி தாக்குதல்

சுவீடனுக்கான இஸ்ரேலிய தூதுவர் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுவீடனிலுள்ள ஸ்டொக்ஹொல்ம் பல்கலைக்கழகத்தில் தூதுவர் பென்னி டகன் விரிவுரையாற்றுகையில், அவரை நோக்கி காலணிகளும் புத்தகங்களும் வீசப்பட்டன.

சுமார் 50 பேர் வரை கூடியிருந்த கூட்டத்தில் அவர், நடைபெறவுள்ள இஸ்ரேலிய தேர்தல் குறித்து விபரிக்கையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்தையடுத்து இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலஸ்தீன காஸா பகுதி தொடர்பான இஸ்ரேலிய கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என நம்பப்படுகிறது.

இதற்கு முன் கடந்த டிசம்பரில் ஈராக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மீது ஊடகவியலாளர் ஒருவரால் காலணி வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து சீன பிரதமர் வென் ஜியாபாவோவின் பிரித்தானிய விஜயத்தின் போது, அவர் மீது காலணி வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: எம்.ரிஷான் ஷெரீப்

ஈழத்தில் காயமுற்ற தமிழர்கள் படகு மூலம் மீட்பு

முல்லைத் தீவு பகுதியில் காயமுற்றுள்ள நோயாளிகளுக்கு மருத்துவ வசதிகள் அந்தப் பகுதிகளில் போதுமானதாக இல்லாத நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நோயாளிகளைப் படகுகள் மூலம் திரிகோணமலையில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறது. இதுவரை 240 பேர் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாத நிலையில் இருக்கும் வசதிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக மருத்துவமனையைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப் படுகிறது. திங்கள் கிழமை புதுமாத்தளன் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் கொல்லப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பவுல் காஸ்டெல்லா கூறினார். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்கள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக இலங்கை இராணுவ செய்தியாளர் உதய நானயக்கரா கூறினார். 1000 பேர் கொண்ட குழு இப்படி வரும்போது புலிகள் அவர்களைத் தாக்கியதாகவும் அதில் 17 பேர் கொல்லப் பட்டதாகவும், 69 பேர் காயமுற்றிருந்தாகவும் கூறினார்.

ஆனால் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக தமிழ்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் பகுதி என்றறிவிக்கப் பட்ட பகுதிகள் மீதும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதால் தமிழர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்தாக அந்த தளம் கூறுகிறது.

இஸ்ரேலியத் தேர்தல் முடிவுகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் 120 தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் காடிமா கட்சிக்கு 28 தொகுதிகளும், லிகுட் கட்சிக்கு 27 தொகுதிகளும் கிடைத்துள்ளன. இரு கட்சிகளுமே தங்களுக்கே வெற்றி என்றும் தங்கள் கட்சியின் தலைமையில்தான் ஆட்சியமைப்போம் என்றும் கூறியிருக்கின்றன.

தேர்தல் நாளான நேற்று பகல் 12 மணிவரை, வாக்குச்சீட்டுகள் போதுமானவையாக இல்லை, வாக்குச் சீட்டுகள் கிழிக்கப் பட்டன என்பன போன்ற 68 குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப் பட்டிருந்தன.

இஸ்ரேலில் உள்ள அரபுகள் மற்றும் ஜியோனிச எதிர்ப்பாளர்கள் இந்த தேர்தலைப் புறக்கணித்தனர். குதிரைப் பேரத்திற்கு வழி வகுத்துள்ள இத்தேர்தலில் கட்சிகள் பெற்றுள்ள இடங்கள் வருமாறு : (அடைப்புக்குறிக்குள் 2006ஆம் ஆண்டின் நிலை)

காடிமா 28 (29)
லிகுட் 27 (12)
இஸ்ரேல் பைடீனு 15 (11)
தொழிலாளர் 13 (19)
ஷாஸ் 11 (12)
ஐக்கிய அரபு கட்சி 11 (10)
தேசிய ஒன்றியம் 7 (6)
மெரிட்ஜ் 3 (5)

20-20 கிரிக்கெட்: இந்தியா இலங்கையை வென்றது

Published on: செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
இன்று கொழும்புவில் நடைபெற்ற 20-20 சுற்றுகள் மட்டைப்பந்தாட்டத்தில் இந்தியா 3 ஆட்டக்காரர்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

முன்னதாக களம் இறங்கிய இலங்கை அபாரமாக ஆடி 20 சுற்று பந்துவீச்சில் 171 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் தில்ஷான் 47 பந்துகளில் 61ஓட்டங்களும், ஜெயசூர்யா 17 பந்துகளில் 33 ஓட்டங்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் யூசுஃப் பதான் இருவரை வீழ்த்த, இர்ஃபான்பதான் ஒருவரையும், இஷாந்த் சர்மா ஒருவரையும் வீழ்த்தினர்.

பிறகு களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் முக்கிய ஆட்டக்காரர்களான ஷேவாக், கம்பீரை இழந்தாலும், யுவராஜ் சிங் , ரெய்னா ஆகியோர் பொறுப்பாக ஆடி முறையே 32, 35 ஓட்டங்கள் பெற்றனர். அதன்பிறகு இந்திய ஆட்டக்காரர்கள் விரைவாக ஆட்டமிழக்க, இந்தியா தோற்றுவிடுமோ என்ற நிலையை மாற்றி பதான் சகோதரர்கள் இந்தியாவுக்கு வெற்றித் தேடி தந்தனர்.

யூசுஃப் பதான் 10 பந்துகளில் 22 ஓட்டங்களும், இர்ஃபான் பதான் 16 பந்துகளில் பெற்ற 33 ஓட்டங்களும் இந்திய அணி வெற்றி பெற உதவியது.

புலிகள் 19 பேரைச் சுட்டுக் கொன்றனர்!

பாதுகாப்பான இடம் நோக்கி நகரும் பொதுமக்களுக்கு எதிராக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 76 பேர் படுகாயமுற்றனர்.
புலிகளின் கட்டுப்பாடுகளில் உள்ள பகுதிகளிலிருந்து இதுவரை 25000 பேரை இராணுவம் வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்தும் கொடூர தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச சமுதாயத்தில் வலுத்து வரும் வேளையில், பாதுகாப்பான இடம் தேடி நகரும் தமிழர்களுக்கு எதிராக புலிகள் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கப்பல்கள் மோதி தீப்பிடித்தது!

Published on: // , , , ,
இரானிலிருந்து 9 மில்லியன் விலையுள்ள 30,000 டன் எண்ணெயுடன் துபை நோக்கி வந்துக் கொண்டிருந்த காஷ்மீர் என்ற பெயர் கொண்ட எண்ணெய் கப்பலும் துபையிலிருந்து சென்று கொண்டிருந்த சீமாபாய் என்ற சரக்கு கப்பலும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக மோதிக் கொண்டதில் வெடித்து தீ பற்றி எரிகிறது.

துபையிலுள்ள ஜபல் அலி தீவிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டருக்கு அப்பால் வைத்து இச்சம்பவம் நடைபெற்றது.

உயிர் அபாயங்கள் எதுவும் நிகழ்ந்ததாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இரு கப்பல் பணியாளர்கள் இதுவரை கடலிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் 12.30 மணியளவில் பயங்கர ஓசையுடன் வெடி சப்தம் கேட்டதாக சாட்சிகள் கூறுகின்ரனர். இரானின் காஷ்மீர் என்ற எண்ணெய் கப்பல் 1998 ல் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

ஆஸ்திரேலிய காட்டுத்தீ - மரணம் 200 கடந்தது!

ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக படர்ந்த காட்டுத்தீயில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 கடந்துள்ளது. தீ படர்ந்த பகுதிகளிலிருந்து மேலும் பல உடல்களைத் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்..

சில இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ படர்ந்த மாரிஸ் வில்லி, கிங்லேக் பட்டணங்களில் பொதுமக்கள் நுழைவதற்குக் காவல்துறை தடை விதித்துள்ளது. இங்கு இதுவரை 700 வீடுகள் தீக்கு இரையாகியுள்ளதாகக் கணக்குகள் தெரிவிக்கின்றன. விக்டோரியா மாகாணத்தில் 3000 சதுர கிலோமீட்டருக்குக் காட்டுத்தீ படர்ந்துள்ளது.

அவசர உதவிக்கு 70 லட்சம் டாலர்கலை பிரதமர் கெவின்ரட் அனுமதித்துள்ளார். 400 ரெட்க்ராஸ் சேவகர்கள் நிவாரண உதவியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தைக் குறித்து விசாரிப்பதற்காக ராயல் கமிசன் நியமிக்கப்பட்டுள்ளது.

20/20 போராட்டம்!

இலங்கை சுற்றுபயணத்தில் உள்ள இந்திய அணி, இன்று பிரேமதாசா விளையாட்டு அரங்கில் இலங்கையுடன் 20௨0 ஆட்டம் ஆடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

172 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 16 ஓவர்களின் இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களில் தள்ளாடி கொண்டிருக்கின்றது.

தற்பொழுது யூசுப் பத்தான் மற்றும் இர்பான் பத்தான் இருவரும் களத்தில் உள்ளனர்.

கைவசம் 3 விக்கட்டுகள் உள்ள நிலையில், இந்தியா வெற்றிபெற 4 ஓவர்களில் இன்னும் 40 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு

சிவகங்கை பிப்.9
தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் ஏரிவயல் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செபஸ்தியம்மாள். இந்த ஊராட்சியில் காஞ்சிரம் முதல் முத்துப்பட்டிணம் வரை தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்தின் மூலம் சாலைப்பணி நடைபெற்று வந்தது. இந்தப்பணியில் 138 பேர் ஈடுபட்டுவருவதாக ரிக்கார்டில் குறிக்கப்பட்டிருந்தது. இப் பணியை கூடுதல் ஊராட்சி இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். அப்போது 101 பேர் மட்டுமே பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் ஜான் செல்வராஜ் காளையார்கோவில் போலிசில் புகார் செய்ததை தொடர்ந்து போலிசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் செபஸ்தியம்மாள், ஊராட்சி எழுத்தர் குருசாமி, மக்கள் நலப்பணியாளர் தமிழ்செல்வன், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கர்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலாடி அருகே பசுமை புரட்சி செயதுவரும் ஆசிரியர் குடிநீர் வசதி செய்துதரகோரிக்கை

கடலாடி அருகே பசுமை புரட்சி செயதுவரும் ஆசிரியர் குடிநீர் வசதி செய்துதரகோரிக்கை

கடலாடி பிப்.10
கடலாடி அருகே பசுமை புரட்சி செய்து வரும் ஆசிரியருக்கு உதவிய மாணவர்கள் குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலாடி அருகே உள்ள பிடாரியேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.இங்கு 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.இரண்டு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதோடு பள்ளியின் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்க ளை வளர்த்து வருகின்றனர்.வறட்சியான குடிஞிர் பிரச்சனை நிறைந்த இப்பகுதியில் அரிய வகை மரங்களை வளர்த்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இங்கு புங்கை,வேம்பு,6 வகையான வாகை,

நெல்லி,முருங்கை,மருது,நவ்வாப்பழம் மரம்,அத்தி உள்ளிட்டவைகள் உள்ளன.பசுமைப் புரட்சி செய்துவரும் இப்பள்ளியைப் போன்று கடலாடி பகுதியில் உள்ள 158 பள்ளிகளிலும்,இப்பகுதியில் உள்ள கிராமங்களிலும் மரங்களை வளர்ப்பதற்கு அரசு சார்பில் மரக்கன்றுகள் உதவியும்,தண்ணீர் பிரச்சனையை சரி செய்வதற்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளியின் ஆசிரியர் பண்டாரக்கண்ணன் கூறியதாவது:குடியரசு தலைவர் அப்துல் கலாம் பசுமை புரட்சி ஏற்படுத்தி மாசற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியது போல எங்கள் பள்ளியில் அனைத்து வகையான மரங்களையும் வளர்த்து வருகிறோம்.மாணவர்களுக்கு கல்வியையும்,பசுமை மரங்களை வளர்ப்பது குறித்தும் கூறுகிறோம்.

பள்ளி மாணவர்கள் கூறுகையில்,எங்கள் ஊரில் குடிநீர் பிரச்சனை இருக்கிறது.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!