Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பட்ஜெட் ப்ளஸ்: 29,000 கோடிக்கு வரிச்சலுகைகள்

இந்தியாவின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சில நாள்களுக்கு முன் சமர்ப்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வரிச்சலுகை ஏதும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், நிதிஅறிக்கை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்தபோது 29,000 கோடிக்கு புதிய வரிச்சலுகைகளை அமைச்சர் அறிவித்தார்.

அமைச்சர் பிரணாப் முகர்ஜி தன் பேச்சில் உற்பத்தி வரி மற்றும் சேவை வரிகள் தலா 2 சதவீதம் குறைக்கப்படுவதாகத் தெரிவித்தார். கட்டுமானத் துறையை ஊக்குவிக்கும் பொருட்டு சிமென்ட் மீதான உற்பத்தி வரி 2 சதவீதம் குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சிறிய ரக கார்களுக்கு 8 சதவீதமும், பெரிய கார்களுக்கு 20 சதிவீதமும் இப்போது எக்ஸைஸ் வரி விதிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்படும் வரிகளிலும், சிகரெட் போன்ற ஆடம்பரப் பிரிவில் வரும் பொருள்களுக்கு விதிக்கப்படும் மருந்துகளின் விலைகளிலும் மாற்றமில்லை.

மாநில அரசுகளின் பற்றாக்குறை 3 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதம் வரை இருக்க் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மாநில அரசுகளுக்கு இதனால் ரூ.91,000 கோடி கூடுதல் நிதி கிடைக்கும், இந்த கூடுதல் நிதி ஆதாரத்தை அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்கப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஏற்கெனவே உற்பத்தி வரி 14 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது மேலும் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் உற்பத்தி வரி 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பதவி விலகல்

நடுவண் மின்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இன்று அமைச்சரவையிலிருந்து விலகினார். தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ள ஜெய்ராம் ரமேஷ், நிருபர்களிடம் 'தேர்தல், கட்சிப்பணிகளில் ஈடுபடுவதற்காக' அமைச்சர் பதவியை விட்டு நீங்குவதாகத் தெரிவித்தார்

மாநிலங்களவை உறுப்பினராக ஆந்திராவிலிருந்து ஜெய்ராம் ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இந்தியா: டீசல் விலை மேலும் ரூ.2 குறைகிறது?

டீசல் விலையை இரண்டு கட்டமாக ரூ.4/= குறைக்க மத்திய அரசு கடந்த டிசம்பரில் முடிவு செய்திருந்தது. அதன்படி மத்திய அமைச்சரவை கூடி முதற்கட்டமாக ரூ.2/= குறைக்க முடிவெட்டியுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாளையே மத்திய அமைச்சரவை கூட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டீசல் விலையை குறைத்தால் பணவீக்கம் குறையும். வாகன போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களின் விலை குறையும் என்பதாக அரசு எதிர்பார்க்கிறது.

ஆயினும், பெட்ரோல் விலை இப்போதைக்கு குறைக்கப்பட மாட்டாது என்றும் ரூ.10 விலை, இரண்டு கட்டமாக குறைக்கப்பட்டு விட்டது என்றும் அரசுத்தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

துருக்கி விமானம் நொறுங்கி விழுந்தது!

ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 20 பேர் காயமுற்றனர்.


134 பயணிகளுடன் இருந்த அந்த விமானம் ஓடுதளத்திற்கு சற்று உயரத்தில் மூன்று துண்டுகளாக நொறுங்கி விழுந்தது என்றும் ஆனால் தீப்பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


இந்த விமானத்தில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 134 பேர் பயணம் செய்ததாக விமான நிறுவனமும், 143 பேர் பயணம் செய்ததாக துருக்கி போக்குவரத்து அமைச்சரும் கூறியுள்ளனர்.


ஒருவர் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாயின. ஆனால் உயிரிழப்புகள் குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை என விமான நிறுவன அதிகாரி கூறினார். உயிர் பலி எதுவும் இல்லை என துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் கூறினார். ஆனால் ஆறுபேர் இச்சம்பவத்தில் பலியானதாக டச்சு வானொலி தெரிவித்தது. விமானத்தின் சிதறிய பாகங்களிலிருந்து சுமார் 20 பேர் எழுந்து சென்றதாக விபத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

இவ்விபத்து குறித்த அவசரத் தகவல்களுக்காகத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +90 800 219 8035

நவாஸ் ஷரீஃபுக்கு விதித்த தடை உறுதி!

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃபுக்கும் அவரது சகோதரர் ஷாபாசுக்க்கும் பாகிஸ்தான் அரசில் பங்கு வகிக்க நடத்தப்படும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட லாகூர் உயர் நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

நவாஸ் ஷரீஃபின் கட்சியான PML-N மேற்கு பஞ்சாபில் மிகவும் பலம் வாய்ந்ததாகும். நவாஸ் ஷரிஃபின் சகோதரர் ஷாபாஸ் தான் அங்கு முதல்வராக இருக்கிறார். பாகிஸ்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஷாபாசும் பதவி விலக வேண்டி வரும்.

இந்தத் தீர்ப்பை மேல் முறையீடு செய்யவும் இயலாதவாறு மேலும் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இது பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் சதி என்று கருதுவதாக நவாஸ் ஷரீஃப் தரப்பினர் கூறியுள்ளனர்.

முந்தைய அதிபர் முஷரஃபை பதவி விலக நெருக்கடி கொடுக்க ஜர்தாரியுடன் ஒன்று சேர்ந்த நவாஸ் ஷரீஃப், முஷரஃப் பதவி விலகியவுடன் ஜர்தாரி அதிபராக உதவி செய்தார். பின்னர் அவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு இருவரும் எதிரெதிராகச் செயல்பட்டு வருகின்றனர். நவாஸ் ஷரீஃப் அரசியலில் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்ற முனைப்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை மிரட்டி தடை உத்தரவு தீர்ப்பைத் திணித்துள்ளதாக நம்புவதற்குப் பெரிதும் இடம் இருப்பதாக நவாஸ் ஷரீஃபின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஸ்லம் டாக் படத்தில் நடித்த குழந்தைகளுக்கு பிளாட்

ஸ்லம் டாக் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களான அசாருதீன் இஸ்மாயில் மற்றும் ருபினா ரபீக் ஆகிய குழந்தைகளுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

ஸ்லம் டாக் திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை வாங்கியதை அடுத்து பல்வேறு இடங்களிலிருந்தும் அதில் நடித்த கலைஞர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இத்திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களான அசாருத்தீன் இஸ்மாயில் சேக் உஸ்மான் மற்றும் ருபினா ரபீக் அஸ்கர் அலி குரேசி ஆகிய இருவருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவான் நேற்று இரவு அறிவித்தார். மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சி மாநில முதல்வரிடம் வைத்த கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்குழந்தை நட்சத்திரங்கள் தற்போது மும்பையின் பந்த்ரா கிழக்குப் பகுதியில் உள்ள சேரிப் பகுதியான கரீப் நகர் பகுதியில் வசித்து வருகின்றன. ருபினாவின் தந்தை ரபீக் தச்சராகப் பணியாற்றி வருகிறார். அசாருதீனின் தந்தை இஸ்மாயில் பழைய மரச்சாமான்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

காஷ்மீரில் வேலை நிறுத்தம்

கடந்த நான்கு தினங்களுக்கு முன் இரு இளைஞர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்கும் முகமாய் அரசு கடுமையான நிபந்தனைகளை விதித்திருப்பதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போன்ற சூழ்நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிவினைவாத இயக்கங்கள் இந்தக் கொலைகளைக் கண்டித்து இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதை அடுத்து ஸ்ரீநகர் மற்றம் கஷ்மீரின் முக்கிய நகரங்களில் காவல் துறை மற்றும் இராணுவம் ஆயிரக் கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.

முகம்மது அமீன் தன்தாரி மற்றம் ஜாவித் அகமது என்ற இளைஞர்கள் சோபூரில் கடந்த 4 நாட்களுக்கு முன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். பிர்தோஸ் என்ற மற்றொரு இளைஞர் காயமுற்றார். இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிறன்னு சோபூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்நதது.

பங்களாதேஷில் எல்லைப் பாதுகாப்பு படையினர் கிளர்ச்சி

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களது தலைமை அலுவலகத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இன்று காலை முதல் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்தினருக்கம் துப்பாக்கிச் சன்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு மேல் இராணுவ ஹெலிகாப்டர் மூலம் கண்கானிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டாக்கா முழுவதும் இராணுவம் குவிக்கப் பட்டுள்ளது. கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.

இதுவரை இந்த சன்டையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இராணுவத்தை எந்த வகையிலும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களுடைய ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாததையடுத்து இந்த கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு அதன் தலைமையகத்தில் வங்கதேசப் பிரதமர் சேக் ஹசீனா நேற்றைய தினம் விருதுகளை வழங்கிச் சிறப்பித்திருந்த நிலையில் இக்கிளர்ச்சி நடைபெற்றுள்ளது.

இரு தரப்பும் ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாகவும் வங்க தேச அரசு அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அகற்றுக- உச்ச நீதிமன்றம்.


சென்னை வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.


இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் முன்பு தெரிவித்திருந்தது. தற்போது முக்கியத்துவம் கருதி இம்மனு 25-ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கறிஞர் - காவல்துரை மோதல் தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நடுவர் ஸ்டீவ் பக்னர் ஓய்வு

மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஸ்டீவ் பக்னர் வரும் மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். 62 வயதாகும் பக்னர், 126 டெஸ்ட் மற்றும் 179 ஒரு நாள் போட்டிகளில் நடுவராக பணியாற்றி சாதனை படைத்துள்ளார். தொடர்ச்சியாக 5 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்றதும் அவரது சாதனைகளில் ஒன்று.

62 வயதாகும் தனக்கு மேலும் ஒன்றிரண்டு வருடங்கள் நடுவராக செயல்பட இயலும் என்றாலும் ஓய்வு பெறுவதற்க்கு இதுவே சரியான தருனம் என்றும் தெரிவித்தார்.


வரும் மார்ச் மாதம் தென்னாப்பிரிக்க-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற உள்ள 3-வது டெஸ்ட் போட்டிக்குப்பின் தான் ஓய்வு பெரும் முடிவை ஐ.சி.சி. யிடம் தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார்.

தனது ஒய்விற்குப்பிறகு மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற விரும்புவதாகவும் ஸ்டீவ் பக்னர் தெரிவித்தார்.

கஷ்மீரில் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் : பி.டி.பி.

Published on: செவ்வாய், 24 பிப்ரவரி, 2009 // , , , , ,
கஷ்மீரில் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் மாநிலக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி கோரியள்ளது.

சோபூர் நகரில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது துண்பியல் நாடகம் என்று வர்ணித்த மக்கள் ஜனநாயகக் கட்சி, கஷ்மீர் மாநிலத்தில் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSP) நீக்க வேண்டும் எனவும், மாநிலத்தில் உள்ள இராணுவனத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் அப்பாவிகளைக் கொலை செய்வதை தனி ஒரு நிகழ்வாகப் பார்க்க இயலாது என்றும் அக்கட்சி கூறியுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினர் ஆயுதங்களுடன் இருப்பது மனித உரிமைக்கு விடுக்கும் அச்சுறுத்தல் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

முகமது அமீன் மற்றும் ஜாவீத் அகமது என்ற இளைஞர்கள் கடந்த சனிக்கிழமையன்று பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த போது இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தீவிரவாதிகள் மக்களுடன் பதுங்கியிருந்த போது இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வின் போது மேலும் இருவர் காயமுற்றதாகவும் அதில் ஒருவர் இறந்திருக்கக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கூகிள் மின்மடல் (ஜிமெயில்) சேவையில் தடங்கல்!

கூகிள் வழங்கி வரும் பல சேவைகளில் ஒன்று ஜிமெயில் எனப்படும் மின்மடல் சேவை. இச்சேவையை இலவசமாகவும், நிறுவனங்களுக்குக் கட்டண சேவையாகவும் கூகிள் வழங்கி வருகிறது. இச்சேவையில் நேற்றும் இன்றும் தடங்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை கூகிளும் உறுதி செய்துள்ளது.

ஜிமெயில் சேவை 99.9 விழுக்காடு பயனுறத் தக்கதாக இருக்கும் என கூகிள் தனது சேவை வாக்களிப்பில் உறுதியளித்திருந்தாலும், இரு நாட்களாக ஏற்பட்டுவரும் தடங்கல் அதன் இலவசப் பயனாளர்களையும் கட்டணப் பயனாளர்களையும் பாதித்துள்ளது.

சென்ற ஆகஸ்டில் இதே போன்று ஜிமெயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டு அது சிலமணிநேரங்களில் சரி செய்யப்பட்டது நினைவிருக்கலாம். தற்போதைய தடங்கல் எதிர்பாராதது எனவும், தடங்கலுக்கான மூலகாரணம் கண்டறியப்பட்டு களையப்படும் என்றும் ஜிமெயில் சேவையின் மேலாளர் டோட் ஜாக்ஸன் தெரிவித்துள்ளார்

ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு நாடாளுமன்ற அவைகளில் பாராட்டு!

ஸ்லம் டாக் திரைப்படத்திற்கு 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருப்பதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தலைமையிலும், மாநிலங்களவைக் கூட்டம் அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலும் இன்று நடைபெற்றது. மூன்று இந்தியர்களுக்குக் கிடைத்த இந்த அகாடமி விருதுகள் இந்தியக் கலைஞர்களுக்கான சர்வதேச அங்கீகாரம் என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை இது என்றும் கூறப்பட்டது.


மக்களவைக் கூட்டம் தொடங்கிய உடனே அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, ஸ்லம் டாக் மற்றும் ஸ்மைல் பிங்கி திரைப்படங்களுக்காக விருது பெற்றவர்களுக்கும் இத்திரைப்படங்களில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.


ஸ்லம் டாக் திரைப்படம் சிறந்த திரைப்படம் என்ற விருது உட்பட 8 பரிசுகளை வென்றிருப்பது பெருமிதம் அடைய வேண்டிய செய்தி என்றும், ஏ. ஆர். ரஹ்மான், குல்சார், ரசூல் பூக்குட்டி ஆகியோரின் இந்த வரலாற்றுச் சாதனையால் ஒவ்வொரு இந்தியனின் இதயமும் மகிழ்வடைவதாகவும் அவர் கூறினார்.


ஸ்மைல் பிங்கி படம் குறையுடைய உதடுகளைக் கொண்ட இந்தியப் பெண் குறித்த குறும் ஆவணப் படம் என்பது குறிப்பிடத் தக்கது.

"முதல்வரின் உண்ணாவிரத அறிவிப்பு வெறும் கண்துடைப்பு" - இராமதாஸ்

வக்கீல் போலீஸ், ஒற்றுமைக்காக உண்ணாவிரதம் இருப்பேன் என்று முதல்அமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது கண்துடைப்பு நாடகம் போல் தான் இருக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்காக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தி வரும் போராட்டத்தை தடுப்பதற்காகவும் அதை திசை திருப்புவதற்காகவும் எங்கள் அணிக்கு கூடும் மக்கள் கூட்டத்தைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் எங்கள் மீது அவதூறுகளை பேசி வருகிறார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். மருத்துவர் இராமதாசுடன் வைகோ, தா.பாண்டியன், திருமாவளவன் ஆகிய தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் உடனிருந்தனர்.


உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு காரணமான அதிகாரிகளை இதுவரையில் ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என்று கேட்ட இராமதாசு "எங்களை பார்த்து சதிகாரர்கள் என்கிறீர்களே! ஐகோர்ட்டில் நடந்த சம்பவத்திற்கு யார் சதி செய்தது? தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அந்த சதிகாரர் யார்? இதை முதலமைச்சர் கருணாநிதி விளக்க வேண்டும்" என்று கோரினார்


மேலும் அவர் பேசுகையில்...

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்துவதை விட்டு விட்டு உணவு, மருந்து பொருட்களை அனுப்ப வேண்டும் என்று கூறி வருகிறீர்களே? போர் நிறுத்தம் ஏற்பட்டால் நீங்கள் சொன்னது நடந்து விடாதா? முதல் கட்டத்தை விட்டு விட்டு கடைசி கட்டத்துக்கு போய் விட்டீர்களே? முதல் தேவை போர் நிறுத்தம் தானே! என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சம்பளக்கணக்கில் தவறிழைத்த மைக்ரோசாஃப்ட்

பொருளாதார நெருக்கடியில் உலகம் முழுதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திணறி போயுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனமும் 5,000 ஊழியர்களை அடுத்த 18 மாதங்களுக்குள் பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்திருந்தது. அதன் முதல்கட்டமாக கடந்த ஜனவரி 22ம் தேதி 1,400 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி அவர்களுக்கு இழப்பீடும் வழங்கியது. ஆனால் இழப்பீடு வழங்கியதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தவறு நடத்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

சில ஊழியர்களுக்கு பணம் அதிகமாகவும், சிலருக்குக் குறைவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
பணம் குறைவாகக் கொடுக்கப்பட்டவர்கள் நிர்வாகத்திடம் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால், சிலருக்கு பணம் அதிகம் அளிக்கப்பட்ட விவகாரம் நிறுவனத்துக்கு தெரிய வர பல நாட்களாகிவிட்டது. இதில் அந்நிறுவனத்தின் மனிதவள துறையும் அதிக அக்கறைக் காட்டவில்லை.

இந்நிலையில் சம்பள பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட தவறுதலே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம், சம்பளத் தொகை அதிகம் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்கமாறு கடிதம் எழுதியுள்ளது.



இப்படி கடிதம் கிடைக்கப்பெற்ற ஒருவர் அதை ஊடகத்துக்கு வழங்கியதால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணம் அதிகம் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு சராசரியாக ரூ. 2.2 லட்சம் கூடுதலாக கொடுத்துள்ளது.

முதலில் இது நிறுவனத்துக்கும், ஊழியர்களுக்கும் இடைப்பட்ட தனி விவகாரம் எனக் கூறிய மைக்ரோசாப்ட் பின்னர் தனது தவறுகளை ஒத்துக்கொண்டது.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணம் அதிகம் பெற்ற ஊழியர்கள் அதை திருப்பிக் கொடுக்க வேண்டும். குறைவாகக் கொடுக்கப்பட்டவர்களுக்கு பணம் விரைவில் திருப்பி கொடுக்கப்படும். அவர்கள் அனைவரும் மனிதவள துறைத் தலைவர் லிசா பிரம்மலை நேரில் சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இராணுவப் பயிற்சி

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு அமெரிக்க இராணுவத்தார் பயிற்சி அளித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தியை அமெரிக்காவே வெளியிட்டுள்ளது.

தலிபான் தீவிரவாதிகளை எப்படி ஒடுக்க வேண்டும் என்று அமெரிக்க இராணுவம் பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
70 அமெரிக்க உயர் அதிகாரிகள் மற்றும் போர் நிபுணர்கள் இந்தப் பயிற்சியை அளித்து வருவதாகவும் 8 மாதத்துக்கு மேலாக இந்தப் பயிற்சி நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.எந்த இடத்தில் பயிற்சி நடக்கிறது என்ற விபரங்களை வெளியிடவில்லை. இரகசிய இடத்தில் பயிற்சி நடக்கிறது.

ஒரு காலத்தில் தாலிபானுக்கும் அமெரிக்காவே பயிற்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி

தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, தற்காலிக தலைமை நீதிபதியாக முகோபாதயா செயல்பட்டு வருகிறார். அலகாபாத் தலைமை நீதிபதியாக பணியாற்றிவரும் எச்.எல்.கோகலேவை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.இதற்கு குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்துவிட்டார்.

மும்பை நீதிமன்றத்தைல் 1994ம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கோகலே, பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 1995ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டு, மும்பை உயர்நீதிமன்றத்துக்கே மீண்டும் மாற்றப்பட்டார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, 2007ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி நியமிக்கப்பட்டார். இப்போது சென்னை உயர்நீதிமன்றத் தலைமைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் சில மாநில உயர்நீதிமன்றங்களிலும் தலைமை மாற்றம் இருக்கும் எனத் தெரியவருகிறது

புலிகள் போர் நிறுத்தம்: இலங்கை ஏற்க மறுப்பு

புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஐ நா, ஐரோப்பிய யூனியன்,பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், மற்றும் நார்வே உள்ளிட்ட நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்


ராக்கெட் லாஞ்சர், பீரங்கி மூலமாக அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தினமும் 50ல் இருந்து 100 அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருகின்றனர். ஏற்கனவே, 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு விட்டனர்; 5,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது போன்ற சம்பவங்களை உலக நாடுகள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, இலங்கை அரசுடன் போர் நிறுத்தம் செய்ய தயாராக உள்ளோம். பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண, உலக நாடுகள் உதவ வேண்டும். அதே நேரத்தில், எந்த காரணத்தைக் கொண்டும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய மாட்டோம்.
இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே ஆயுதம் ஏந்தியுள்ளோம்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் கொல்யா ரம்புக்வெல்லா கூறுகையில், "தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு விடுதலைப் புலிகளே காரணம். தமிழ் அரசியல் கட்சித்தலைவர்கள், அப்பாவி மக்கள் என ஏராளமானோரை புலிகள் கொன்று குவித்துள்ளனர். புலிகளுடன் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் ஆயுதங்களை கீழே போடாதவரை போர் நிறுத்தம் செய்ய முடியாது' என்றார்.

"அத்வானி பிரதமராக வாய்ப்பில்லை" - லாலு

'அத்வானி பிரதமராக வாய்ப்பில்லை' என்று மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இனவாதமும், பயங்கரவாதமும் உடன்பிறந்த சகோதரிகள். பா ஜ க ஒரு இனவாதக் கட்சி என்பது வெளிப்படை. இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கே மக்கள் வாக்களிப்பர் என்ற லாலு தான் இம்முறை சரண் மக்களவைத் தொகுதியில் போட்டியிடப்போவதாகக் கூறினார்.
தன்னுடைய சாப்ரா தொகுதி சீரமைப்பில் சரண் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர் உயர்ந்த சாதியில் உள்ள ஏழைகளுக்குப் பயன்தரும் வகையில் அமைப்பு வாரியான சட்டத்திருத்த மசோதாவுக்கு தங்கள் கட்சி ஆதரவளிக்கும் என்றார்

கல்விதான் வலிமையான நாடாக மாற்றும்: ப.சிதம்பரம்

கல்விதான் வலிமையான நாடாக மாற்றும்: ப.சிதம்பரம்


சிங்கம்புணரி, பிப். 22: கல்விதான் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றும். ஆகவே, கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி வரை படிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஞாயிற்றுக்கிழமை பாரத ஸ்டேட் வங்கியின் புதிய கிளையைத் திறந்துவைத்து, அவர் பேசியது:

இந்தியாவில் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. ஆனால், 25 கோடி மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். வறுமையை ஒழிப்பதே அரசின் நோக்கம். நமது நாட்டில் வங்கிகளின் நிதி நிலை வலுவாக உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது.

பாரத ஸ்டேட் வங்கி தமிழ்நாட்டில் 50 ஆயிரம் கோடி அளவுக்கு கடன்களை வழங்கியுள்ளது. நிதிநிலை சீராக இருப்பதால்தான், விவசாயக் கடன் ரூ. 60 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும், கடந்த ஆண்டுவரை 72 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 57 கோடி பயிர் இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 14 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 34 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 66 கோடி அளவுக்கு விவசாயக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இந்தியாவில் 53 லட்சம் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு உதவித் தொகையும், 11 லட்சம் பெண்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது என்றார் ப.சிதம்பரம்.

முன்னதாக, அமைச்சர் சிதம்பரம் 12 பேருக்கு கல்விக்கடன் உதவி, 17 பேருக்கு சுய உதவிக்குழுவினருக்கான கடன் உதவிகளை வழங்கினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!