Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பிரிட்டிஷ் ஏர்வேஸ் கொல்கத்தா-லண்டன் விமான சேவை நிறுத்தம்!

மார்ச் 30 ஆம் தேதி முதல் கொல்கத்தா-லண்டன் விமான சேவையை முற்றிலும் நிறுத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

1932 ஆம் ஆண்டு முதல் தனது சேவையைத் துவக்கிய இந்நிறுவனம், இடையில் 1985-ல் தற்காலிகமாக நிறுத்தி பின்னர் 1993 முதல் சேவையை மறுபடியும் துவங்கியது.


வாரம் மூன்று முறை கொல்கத்தா-லண்டன் நேரடி விமான சேவை வழங்கி வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், லாபமின்மைக் காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.


பிரிட்டிஷ் ஏர்வேஸ் தற்போது தில்லி,மும்பை,சென்னை,ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து தனது நேரடி சேவையை வழங்கி வருகிறது.

இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம்

இலங்கையில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதலைக் கண்டித்து ஆஸ்திரேலியாவில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

சிட்னியில் முக்கியப் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சிட்னி, மெல்போர்ன் மற்றும் கன்பெர்ரா ஆகிய பகுதிகளிலிருந்து தமிழர்கள் 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். சிட்னியின் மார்ட்டின் ப்ளேஸ் பகுதியில் புறப்பட்ட பேரணி டவுன் ஹால் வரை சென்றது.

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

மேம்படுத்தப் பட்ட பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று காலை 11.15 மணி அளவில் ஏவப்பட்ட ஏவுகணை 150 விநாடிகளில் இலக்கை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவ உயர் அதிகாரிகளான லெஃப்டினன்ட் ஷேகான், லெஃப்டினன்ட் ராவ், மேஜர் திவாரி, பிரமோஸ் திட்டத் தலைவர் சிவதானு பிள்ளை மற்றும் இராணுவ தளவாட ஆராய்ச்சிக் கழக இயக்குநர் வேணுகோபால் ஆகியோர் இச்சோதனையின் போது அங்கிருந்தனர்.

இந்த சோதனையின் மூலம் பிரமோஸ் ஏவுகணையின் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டது என்றும் ஏற்கனவே இது இராணுவத்தின் உபயோகத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஒரிசாவில் குண்டு வெடித்து 4 பேர் பலி!

ஒரிசாவில் ஒரு வீட்டில் குண்டு வெடித்து 4 பேர் பலியானார்கள். மேலும் 13 பேர் காயமுற்றனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பெர்ஹாம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புருஷோத்தம்பூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் இன்று காலை 2 மணி அளவில் இந்த குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிகழ்வு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.

திமுகவில் ஜெகத்ரட்சகன்!

ஜனநாயக முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.

திமுக கூட்டணியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டதாகவும், அவரை கட்சியில் சேருமாறு திமுக தலைமை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவரும், ஜனநாயக முன்னேற்றகழக நிர்வாகிகளும் இன்று முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து திமுகவில் இணைந்தனர்.


திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்ரட்சகன், "இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி முன்னிலையில் ஜனநாயக முன்னேற்ற கழக தலைமை நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளோம். ஜனநாயக முன்னேற்ற கழகம், வீரவன்னியர் பேரவை போன்றவை சமுதாய அமைப்புகளாக தொடர்ந்து செயல்படும்", என்று கூறினார்

வருண்காந்தி மீது தேசியபாதுகாப்புச்சட்டம் - மாயாவதி ஆலோசனை

தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கடும் வெறுப்பை உமிழ்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பிலிஃபிட் தொகுதி வேட்பாளர் வருண்காந்தி மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாயாவதி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வருண்காந்தி தானே முன்வந்து பிலிஃபிட் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.ஆனால், காவல்துறை முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தது

வருண்காந்தி பிணையில் விடுதலையாக மனுதாக்கலும் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

வருண்காந்தி நேற்று நீதிமன்றம் வந்தபோது ஆயிரக்கணக்கான பாரதீய ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். . வருண்காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன் காவலர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் காவல்துறை தடியடி நடத்தியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினார்கள்.

வன்முறை நடந்ததால் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி கடும்கோபம் அடைந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். வருண் காந்தியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வது குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக அரசு சார்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாயாவதி கூறியுள்ளார்

கடலூரில் களம் காண்கிறார் திருமா?

மக்களவைத் தேர்தலில் தி மு க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தெரிந்ததே! சிதம்பரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். ஆனால், எதிரணியான அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் நட்புக் கட்சியான பாமக வுக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விபரம் அறிந்து, போட்டியைத் தவிர்க்க, திருமாவளவன் இப்போது கடலூர் தொகுதியைக் கேட்பதாகத் தெரிகிறது.

அதுபோல, மற்றொரு தொகுதியாக விழுப்புரத்தையும் கேட்டுள்ளாராம்.

மகளை வன்புணர்ந்து 11 குழந்தைகளைப் பெற்றதாக தந்தை கைது!

கொலாம்பியாவில் தன்னுடைய மகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து வன்புணர்ந்து 11 குழந்தைகளைப் பெற்றதாக எழுந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

கொலாம்பியாவில் அதிர்வலைகளை எழுப்பியுள்ள இக்குற்றச் சாட்டிற்கு ஆளான 58 வயது மனிதர் தான் நீதிமன்றத்திற்கு வரும்போது காவல் துறை மற்று இராணுவ பாதுகாப்பு வேண்டும் என்று கோரியுள்ளார்.

தற்போது 30 வயதாகும் அந்தப் பெண் தான் 10 வயதை அடையும் முன்பிருந்தே தன்னுடைய தந்தை தன்னை வன்புணர்ந்து வந்ததாகக் குற்றம் சுமத்தினார்.

தாங்கள் ஒருவரையொருவர் விரும்புவதால் செக்ஸ் தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்தப் பெண் தன்னுடைய சொந்த மகள் இல்லை என்றும் குற்றம் சாட்டப் பட்டவர் நீதிமன்றத்தில் கூறினார்.

தான் அவரை தந்தையைப் போன்றே மதிப்பதாகவும், அவர் தன்னுடைய தந்தைதான் எனவும் அந்தப் பெண் கூறினார். தன்னை தன்னுடைய தந்தை வன்புணர்ந்ததன் மூலம் 11 குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் மூன்று குழந்தைகள் இறந்ததாகவும் அவர் கூறினார்.

மஹாதிர் மீண்டும் UMNO கட்சியில் சேருகிறார்

Published on: // ,
மலேசியாவின் முன்னாள் பிரதமர், டாக்டர் மஹாதீர் முஹம்மது மீண்டும் UMNO கட்சியில் சேருவதாக அறிவித்துள்ளார்.
நேற்று நடந்து முடிந்த அக்கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர், விரைவில் கட்சியில் இனைவதாக உறுப்பினர்களின் ஏகோபித்த கரவொலிக்கிடையே அறிவித்தார். கடந்த ஆண்டு, இப்போதைய பிரதமர், அப்துல்லாவின் செயல்கள் மற்றும் அரசின் கொள்கைகளால் அதிருப்தி அடைந்து இருந்த டாக்டர் மஹாதீர், UMNO கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அறிவித்து இருந்தார்.
அதன் பிறகு தொடர்ந்து, அரசினை வெளிப்படையாக விமரிசித்து அப்துல்லா அரசிற்கு நெருக்கடி கொடுத்து வந்தது குறிபிடத்தக்கது.

உ.பி., ஆசிரமத்தில் இளம்பெண் மர்மச்சாவு!


முன்னாள் எம்.பி யும் உ.பி மாநில அளவிலான ஒரு கட்சியின் தலைவருமான சட்சிதானந்த் ஹரி சாக்ஷி மஹராஜின் ஆசிரமத்தில் உள்ளூர் பள்ளி ஆசிரியை லட்சுமி (24) மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.


இறந்த அப்பெண்ணின் உடலில் நிறைய காயங்கள் காணப்படுகின்றன என்றும், அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், ஓடிப்போன ஆசிரமத்தின் பாதுகாவலரைத் தேடி வருவதாகவும் ஷியாம் நகர் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் தெரிவித்தார்.


பாஜக விலிருந்து தன் அரசியல் வாழ்வைத் துவக்கிய சச்சிதானந்த், சமாஜ்வாதி கட்சிக்குத் தாவி, பின்னர் கல்யான்சிங் துவக்கிய ராஷ்டிரிய கிராந்தி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் தலைவராக உள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக சட்சிதானந்த் கூறியிருந்தார். இவ்வேளையில் இந்த கொலை நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியுலிலாந்துக்கெதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி - தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

நியுசிலாந்தின் நேப்பியர் நகரில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா சற்றுமுன் வரை, தனது இரண்டாவது இன்னனிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து இருந்தது. அதிரடி வீரர் சேவாக் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, காம்பீரும், டெண்டுல்கரும் நிதானமாக ஆடி வருகின்றனர். காம்பீர் 84 ரன்களும், டெண்டுல்கர் 37 ரன்களும் எடுத்து தொடர்நது விளையாடி வருகின்றனர். முன்னதாக டிராவிட் பொறுமையாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். காம்பீர் விரைவாக 2000 ரன்கள் எடுத்த மூன்றாம் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

தேர்தல் கமிஷன் விளம்பர மாடலாகும் கிரிக்கெட் வீரர் தோனி


'இளைஞர்கள் தங்களின் ஓட்டுரிமையை பதிவு செய்ய வேண்டும். ஓட்டளிப்பதை தவிர்க்கக் கூடாது' என, பிரசாரம் செய்வதற்காக பிரபல கிரிக்கெட் வீரர் தோனியை, தங்களின் விளம்பர மாடலாகப் பயன்படுத்த தேர்தல் கமிஷன் பரிசீலித்து வந்தது.


ஓட்டளிப்பதை தங்களின் உரிமை மற்றும் கடமை என்பதை மக்கள் உணர வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இதை உணர வேண்டும்.


அவர்கள் தங்களின் ஓட்டுரிமையை பதிவு செய்யும்படி தூண்டுவதற்காக, அரசியல் பின்னணி இல்லாத பிரபல நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை கொண்டு விளம்பரப் படம் தயாரித்து, அது பல இடங்களிலும் ஒளிபரப்பப்பட உள்ளது.


இதற்கான விளம்பர மாடலாக பிரபல கிரிக்கெட் வீரர் தோனி உட்பட சிலரை தேர்வு செய்வது குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலித்து வந்தது.


இன்றைய இளைஞர்களின் நட்சத்திர நாயகனாக விளங்கும் தோனியும் சம்மதம் தெரிவித்ததால், இவ்விளம்பரம் மக்கள் மத்தியில் பிரபலம் அடையும் என்று தேர்தல் கமிஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!