Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காங்கிரசுக்கு ஆதரவாக சல்மான் கான் பிரச்சாரம்

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

வரும் ஞாயிற்கு கிழமை முதல் அவர் உத்திரப் பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்று அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அனு டான்டன் கூறினார்.

இந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தும் பல்வேறு விழாக்களிலும் அவர் பங்கு கொள்வார் என்று கூறப்படுகிறது.

பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகை பிரீத்தி ஜிந்தா ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வார்கள் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத் தக்கது.

ஒபாமாவை சந்திக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்

வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக அளவில், வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் தலைவர்களின் (G-20) மாநாடு லண்டன் நகரில் தொடங்குகிறது.

பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் மற்றும் பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் மன்மோகன்சிங் G-20 மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். பின்னர் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனையும் அவர் சந்திக்கிறார்.

இரு தலைவர்களையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 7 தொகுதிகள்!

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்தார். அவை:-

1. ஸ்ரீபெரும்புதூர்

2. அரக்கோணம்

3. திருவண்ணாமலை

4. கள்ளக்குறிச்சி

5. சிதம்பரம் (தனி)

6. தர்மபுரி

7. புதுச்சேரி.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளை நடத்த துபாய் மறுப்பு?

பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பத்து நாடுகள் கலந்து கொள்ள இருக்கும் இந்தப் போட்டிகைள நடத்த தயாராக இல்லை என துபாய் விளையாட்டு நகர் அலுவல் ரீதியாக ஆசிய ஹாக்கி அமைப்புக்கு தகவல் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

2010 உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றாகக் கருதப்படும் இந்தப் போட்டிகளை மலேசியா நடத்த வேண்டும் என ஆசிய ஹாக்கி அமைப்பு கோரியுள்ளது.

அல்காயிதா அமைப்பை துடைத்தொழிப்போம் - ஒபாமா சூளுரை

அல்காயிதா அமைப்பு பாகிஸ்தானில் பாதுகாப்பான இடங்களில் இருந்துக் கொண்டு இன்னும் செயல்பட்டு வருவதாகவும், மேலும் புதிய தாக்குதல்களை நடத்த அது திட்டமிட்டு வருவதாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். அல்காயிதா அமைப்பினர் செயல்படும் பாகிஸ்தானின் எல்லைப்புறப் பகுதிகள், 'அமெரிக்கர்களுக்கு உலகிலேயே மிக ஆபத்தான பிரதேசங்கள்' என்றும் அவர் வர்ணித்தார்.

செப்-11 தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்கு ஆட்சி அமைத்திருந்த தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறக்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் அங்கு போர் முடிவுக்கு வரவில்லை என்பதையும், கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் ஒபாமா நினைவு கூர்ந்தார்.

அல்காயிதா பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதைப் பற்றி பல உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்த பின்னரும் பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், அமெரிக்கா நேரடியாக நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் ஒபாமா எச்சரித்தார்.

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சியளிப்பதற்காக மேலும் 21,000 பேர் கொண்ட படையினரை அனுப்பப் போவதாக ஒபாமா அறிவித்தார். இதோடு ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 65,000 ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

4 வயது மாணவியைக் கொன்றதாக திருச்சியில் நர்சரி ஆசிரியை கைது!

திருச்சியில் நான்கு வயது மழலையர் பள்ளி மாணவியைக் கொன்றதாக, மழலையர் பள்ளி ஆசிரியையும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ரோகிணி என்ற இச்சிறுமி தவறு செய்ததாகவும், அவரைக் கண்டிக்க ஆசிரியை அடித்தபோது அது அச்சிறுமியின் நெற்றியில் பட்டு, சிறுமி இறந்ததாகவும் கூறப்படுகிறது. புதன்கிழைமை நடந்த இச்சம்பவத்தை அடுத்து சிறுமியைக் காணாத பெற்றோர் காவல் துறையில் புகார் அளிக்க, வியாழக் கிழமையன்று சிறுமியின் உடலை அருகிலிருந்த கிணற்றிலிருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் சிறுமி கொலை செய்யப் பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆசிரியை ஜெயாராணி (25), பள்ளி உதவியாளர்கள் ஆரோக்கியராஜ் (27), சகாயராஜ் (26) ஆகியோர் வெள்ளிக் கிழமையன்று கைது செய்யப் பட்டனர்.

நாளை பிரமோஸ் ஏவுகணை சோதனை

இந்தியா மற்றும் ரஷியா இணைந்து தயாரித்த பிரமோஸ் ஏவுகணை சோதனை நாளை (ஞாயிற்றுக் கிழமை) ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் சோதித்துப் பார்க்கப்படுகிறது. அங்கிருந்து அஜாசர் என்ற இடத்தில் நிறுவப்படும் இலக்கை குறிவைத்து தாக்கும். சூப்பர்சானிக் குரூஸ் வகையைச் சார்ந்த இந்த ஏவுகணை தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கவல்லது.

இதற்கு முன் பிரமோஸ் ஏவுகனை கடந்த ஜனவரி 20 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

கூட்டணி ஒப்பந்தம் 2 நாட்களில் - ம.ம.க.

தொகுதி ஒதுக்கீடு குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். ம.ம.க தலைவர்கள் நேற்று தி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, "நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு முதல்வரைச் சந்தித்தோம். ஒரு தொகுதி கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முதல்வரிடம் கூறினோம். எங்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக அவர் பதிலளித்தார். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார்.

ஜவாஹிருல்லாவுடன், ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொருளாளர் ரகமதுல்லா ஆகியோரும் முதல்வர் கருணாநிதியை சந்திக்க உடன் சென்றிருந்தனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!