Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கொல்கத்தாவை லண்டன் போல மாற்றுவோம்-மமதா

"தற்போது மக்களவை தேர்தல் தான் நடைபெறவுள்ளது,அடுத்து எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் வெற்றிப்பெற்றால், மாநில வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, கொல்கத்தாவை லண்டன் போல மாற்றிக்காட்டுவோம்", என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர்," மேற்கு வங்கத்தில் வளர்ச்சி என்றால் என்ன என்பதை செயலில் காட்டுவோம்,மேற்கு வங்க கடலோரப் பகுதியான 'திகா' கோவா போல வளர்ச்சியடைய முடியாதா?,அத்தனை வளங்களும் இங்கு இருக்கும்போது ஏன் வளர்ச்சியடைய முடியாது?, எங்கள் ஆட்சியில் கொல்கத்தா நகரை நிச்சயமாக லண்டன் மாநகரைப் போல் மாற்றிக் காட்டுவோம்", என்றார்.

காங்கிரசுக்கு ஆதரவாக ஷாருக் கான் பிரச்சாரம் ?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக் கான் பிரச்சாரம் செய்வார் என்று காங்கிரஸ் கட்சி இன்று கூறியுள்ளது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் இன்று கான்பூரில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். ஷாருக் கான் மட்டுமின்றி, நடிகர் கோவிந்தா (இவர் ஏற்கனவே காங்கிரஸ் எம்.பி), நடிகைகள் நக்மா, பிரீத்தி ஜிந்தா ஆகியோரும் காங்கிரஸ் கட்சிக்காக பேரணிகள் மற்றும் பிரச்சாரங்களில் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில் ஷாருக்கான் மற்றும் பிரீத்தி ஜிந்தா ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களா என்று கேட்டபோது, இதற்காக அவர்கள் நேரம் ஒதுக்குவார்கள் என்று பதிலளித்தார்.

10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்!

10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கைப்பற்றி உள்ளது. அமிர்தசரஸ் நகரில் புனிதத் தளம் ஒன்றின் அருகே ஹீரா சிங் என்பவரிடம் 10 கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப் பட்டது.

மத்தியப் புலனாய்வுத் துறையின் டில்லி பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. ஹீரா சிங் இந்த ஹெராயினை அமிர்தசரசில் இருந்து டெல்லிக்கு எடுத்துச் செல்லவிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்த புலனாய்வு நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மத்திய புலனாய்வுத் துறையின் தகவல்படி போதைப் பொருள் கடத்தலில் பஞ்சாப் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

"பிரதமர் பதவிக்கு மன்மோகனே !"- சோனியா திட்டவட்டம்

பிரதமர் பதவிக்கு மன்மோகனே காங்கிரஸ் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலையில் மூன்றாவது அணியுடன் காங்கிரஸ் சேருமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ராகுல்காந்தி கட்சிக்குத் தலைமை தாங்குவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த சோனியா "பொறுத்து பாருங்கள், தேவை ஏற்படும் சூழலில் அது பற்றி பேசலாம்" என்றார்.


இதற்கிடையில் வலிமையற்ற ஒரு பிரதமர் என்ற அத்வானியின் தாக்குதல் பேச்சுக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங் " என் வலிமைகளை என் சாதனைகள் சொல்லும். ஆனால், அத்வானி அப்படி என்ன நாட்டுக்கு நல்லது செய்துள்ளார்?" என்று வினா எழுப்பினார். "பாபர்மசூதி இடிப்பதற்கு மும்முரம் காட்டி தேசத்துக்கு பாரிய கெடுதியை விளைத்ததைத் தவிர அத்வானி வேறு என்ன சாதித்துவிட்டார்" என்று கேட்டார் பிரதமர்.

கிலோ அரிசி/கோதுமை 3 ரூபாய் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மாதம் 25 கிலோ வரை கிலோ அரிசி ரூ. 3 என்ற விலையில் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் சோனியாயால் வெளியிடப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் பெற்றுக்கொண்டார்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை கிலோ ரூ.3 விலையில் வழங்கப்படும்
.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பெறுவோருக்கு தினமும் ரூ.100 கூலி வழங்கப்படும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் நலிவடைந்தோர் முன்னேற்றத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.

முன்னேற்றம் தொடரும் - உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் சிறப்பான இடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த முன்னேற்றம் தொடரும்

மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்


இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

அ தி மு க கூட்டணியில் பா.ம.க - இன்று முடிவு

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக வுடன் தேர்தல் கூட்டணி காண்பதாக தெரிய வந்துள்ளது.
ஏழு மக்களவை இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் என்ற பேரம் படிந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தங்கள் கூட்டணியில் பாமகவை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தொடர்ந்து முயன்று வருகின்றது. மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேற்று காலை மருத்துவர் இராமதாஸைச் சந்தித்து கூட்டணி பற்றி பேசினார். அதன்பின் முதலமைச்சர் கருணாநிதியையும் சந்தித்த தங்கபாலு பாமக கூட்டணி பற்றி அவரிடம் எடுத்துரைத்துள்ளார்.

மத்திய அமைச்சரும், இராமதாஸ் மகனுமான அன்புமணி காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் விருப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் 26ந்தேதி கூடவிருக்கும் மாநில செயற்குழுவில் தங்கள் முடிவு திட்டவட்டமாக அறிவிக்கப்படும் என்று பாமக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிமுக தருவதாகச் சொல்லியுள்ள 7 மக்களவை+1 மாநிலங்களவை தொகுதிகளை இராமதாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அப்படி அதிமுகவுடன் கூட்டணி உறுதியானால் "அன்புமணி, வேலு ஆகிய மத்திய அமைச்சர்கள் பதவி விலகிவிடுவார்கள் - நேச்சுரலி" என்றார் அவர்.

பெண் கலெக்டரைத் திட்டினாரா முலாயம் சிங்?

உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிப் பிரமுகர்கள் சிலர் வைத்திருந்த துப்பாக்கி உரிமங்களை மணிப்புரி மாவட்ட ஆட்சியர் மணிஸ்தி திலீப் விலக்கம் செய்திருந்தார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிகழ்வால் கோபம் கொண்ட கட்சித்தலைவர் முலாயம் சிங் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை பெண் என்றும் பாராமல் தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

"நீ ஒரு பெண், நான் எனது கட்டுப்பாட்டை இழந்து விட்டால் நீ பெண்ணாக இருக்கமாட்டாய். நீ மோசமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியது வரும்" என்று ஆபாசம் கலந்த வார்த்தைகளை பயன்படுத்திப் பேசினார் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சு பற்றி தேர்தல் ஆணையம் விசாரித்து இதில் தேர்தல் விதி மீறல் இருக்கிறதா? என்று ஆராய்ந்து வருகிறது.

ஐ பி எல் போட்டிகளை நடத்த தெ. ஆப்ரிக்கா உறுதி

இந்தியாவில் நடக்க இருந்த ஐ பி எல் போட்டிகள், வேறு நாட்டில் நடத்த போவதாக பிசிசிஐ அறிவித்த பின், தங்கள் நாடுகளில் நடத்த, நீயா, நான என தென் ஆப்ரிக்காவும், இங்கிலாந்தும் போட்டி போட்டன. இப்பொழுது தென் ஆப்ரிக்காவில் தான் போட்டிகள் நடக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவும் பருவநிலையயை கருத்தில் கொண்டு பிசிசிஐ இம்முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஐ பி எல் போட்டிகளை நம்பி நுற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் பல வகையில் தங்களின் தயாரிப்புகளை விளம்பரம் செய்து இருந்தன. இவைகளின் நிலமைகள் எல்லாம் என்ன என்பது போக போகத்தான் தெரியும். ஏற்கனவே, உலக நிதி நெருக்கடியில் பல நிறுவனங்கள், ஆட் குறைப்பு செய்து வரும் நிலையில், ஐ பி எல் போட்டிகள் வேறு நாட்டில் நடக்கும் போது நிலைமை மேலும் மோசமாகலாம்.

நாயைச் சுட்டவரை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீசார்

ஸ்போகேன் -வாஷிங்டன். அதிவேகமாகக் கார் ஓட்டியவரை போலீசார் துரத்திச் சென்றதைக் கண்ட கார் ஓட்டுனர் காட்டுப் பகுதியில் காரைப் போட்டு விட்டுத் தப்பி ஓடினார். அவரைப் பின் தொடர்ந்து போலீஸ்காரரும் அவருடைய நாயும் சென்ற போது கார் ஒட்டுனர், ஜானி லாங்கஸ்ட் நாயைச் சுட்டுவிட்டார். அதைக் கண்ட போலீஸ்காரர் உடனடியாக கார் ஓட்டுனரை சுட்டதில் படுகாயாமடைந்த அவர் மருத்துவமனையில் மரனமடைந்தார்.

போலீஸ் நாய் தற்போது கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஸா போரின்போது இஸ்ரேலிய மத குருக்கள் இரானுவ வீரர்களை மதவெறியூட்டினர்.


காஸா போரின்போது இஸ்ரேலிய மத குருக்கள் இராணுவ வீரர்களிடம் இது நமது மத சம்பந்தப்பட்ட போர் நமது மதம் அல்லாதவருக்கு எதிரான போர் என்பதை மனதில் நிறுத்தி மிக ஆக்ரோஷமாக போரிடும்படி வெளிப்படையாக ஒவொரு இராணுவ முகாமுக்கும் சென்று பிரச்சாரம் செய்தனர் என்று ஹாரட்ஸ் என்ற இஸ்ரேலிய இடது சாரிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் போர் முடிந்து திரும்பிய வீரர்களுக்கான மறு சீரமைப்பு முகாம் ஒன்றில் நடந்த கலந்துரையாடலில் பேசிய வீரர்கள் " இது கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட பூமி, இதை ஆக்ரமிக்கும் நமது வழியில் வந்து நிற்கும் யூதர் அல்லாத மற்ற மதத்து மக்களை கடுமையாக போரிட்டு அப்புறப்படுத்துவதில் எல்லா வழிகளையும் கையாள வேண்டும் என்றும் அப்பாவி பொதுமக்களைக் கண்ட இடத்தில் சுடும்படி தங்களுக்கு படைத்தளபதியே உத்தரவிட்டதாகவும்" கூறியது ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் குழுக்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வெளியான சில ரகசிய தகவல்களை உறுதிப்படுத்திய இஸ்ரேலிய இராணுவ அகாடமியின் இயக்குநர் கூறுகையில், 22 நாட்களாக நடந்த இராணுவ நடவடிக்கை எங்களது மதக்கடமையை நிறைவேற்றியது போன்று மன அமைதியை நாங்கள் அனுபவிக்க முடிகிறது என்றார்.


அவிவ் என்ற பெயரிட்ட கிவாத் பிரிகேட்டில் படை உறுப்பினராக இருந்த ரம்ஸ் என்பவர் சொல்லும்போது "ஒவ்வொரு வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே சென்று இருப்பவர்கள் யாவரையும் கொன்று குவிக்கும்படி அவரின் தளபதி உத்தரவு பிறப்பித்ததாகவும்" அதன் படி செயலபடுவதில் அனைத்து வீரர்களும் மிக்க மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார்.


இஸ்ரேலிய வீரர்களின் கொடூரங்கள் பற்றி வெளியான செய்திகள் குறித்து கருத்துக்கூறிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பராக் கூறுகையில் "இஸ்ரேலின் இராணுவம் உலகத்திலேயே மிகச்சிறந்த, ஒழுக்கம் மிக்க, மிக நேர்மையான இராணுவம் என்றும் அதற்கு இனையாக உலகத்தில் வேறு நேர்மை மிக்க இராணுவம் கிடையாது" என்றும் கூறினார். வேறு ஏதும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதுபற்றி விசாரிப்போம் என்றார்.

மோஷே எனும் வீரரின் கூற்றுப்படி நாங்கள் நடந்து கொள்ளும்முறை பற்றி எங்களிடம் கடுமையான முறையில் விசாரனை ஏதும் செய்யப்படுவதில்லை. இதைப்பற்றி யாரும் கண்டுகொள்ளப் போவதுமில்லை. போர்களில் இதெல்லாம் சாதாரணம் என்றார்.

மோடிக்கு மாற்றமாக குஜராத் காவல்துறை இயக்குநர் கருத்து!

ஐ.பி.எல். போட்டிகளை தேர்தல் நேரத்தில் நடத்தினால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்ய இயலாது என்று கூறி மாற்றுத் தேதிகளில் நடத்த மத்திய அரசு பரிந்துரைத்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க தயார் என்றும், இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடு பாதுகாப்பு தர முடியாதது வெட்கக்கேடு. காமன்வெல்த் போட்டிகளுக்கு மட்டும் பாதுகாப்பு தர முடியுமா? என்றும் நாட்டின் மானத்தை காப்பாற்ற குஜராத் அரசு ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்பு தர முடிவு செய்துள்ளது என்றும் கூறியிருந்தார். ஆனால் குஜராத் மாநில காவல்துறை இயக்குநர் இதற்கு மாற்றமாகக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் நர்கரி அமீன் என்பவருக்கு அம்மாநில காவல்துறை இயக்குநர் எழுதிய கடிதத்தில் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியிலிருந்து மே 3ஆம் தேதிவரை 20-20 போட்டிகளை நடத்த தகுந்த பாதுகாப்பு அளிக்க இயலாத நிலையில் குஜராத் அரசு இருப்தாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ள இந்தப் போட்டிகளை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு முன் அல்லது மே 10ஆம் தேதிக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளை நடத்த குஜராத் அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று மோடி கூறியிருந்ததற்கு மாற்றமாக காவல் துறை இயக்குநர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதய சூரியன் சின்னத்தை நீக்கக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை நீக்க வேண்டும் என்று கோரிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமையன்று தள்ளுபடி செய்தது.

சூரியன் இந்துக்களின் கடவுள் என்றும் எனவே அது தேர்தல் சின்னமாக இருக்கக் கூடாது என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து இளைஞர் அமைப்பு என்ற இயக்கம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தி.மு.க.விற்கு உதய சூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்ததில் எந்தவித சட்ட முரணும் இல்லை என்று கூறி இந்த வழக்கை அவர்கள் தள்ளுபடி செய்தனர்.

ஏற்கனவே இத்தகைய மனு ஒன்று தேர்தல் ஆணையத்திடமும் அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையமும் அதனை நிராகரித்தது குறிப்பிடத் தக்கது.

வருண் தான் வேட்பாளர்-பா.ஜ.க. முரண்டு!

பிலிபித் தொகுதியில் வருண் தான் வேட்பாளர் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது. டில்லியில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடைபெற்றது.

வருண் மீது குற்றம் சாட்டப்படுவதற்கு முன்னர் அவருக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்திருக்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் பல்பிர் பூஞ் தெரிவித்துள்ளார்.

வருணை நேரில் சந்தித்த பல்பிர் பூஞ். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,வருண் தான் பிலிபித் தொகுதிதயில் பா.ஜ.க. வேட்பாளர். இது கட்சி மேலிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு. தேர்தல் கமிஷனுக்கு, கட்சிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்க உத்தரவிடும் உரிமை இல்லை கூறியுள்ளார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!