Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தமிழகம்: பிஜேபியுடன் சரத்குமார், கார்த்திக் கட்சிகள்

தமிழ்நாட்டில் பாஜகவுடன் பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணி அமைக்க முன் வரவில்லை. விஜயகாந்தின் தேமுதிக வை தனது அணியில் சேர்க்க பாஜக எடுத்து வரும் முயற்சிக்கும் வெற்றி கிடைக்கவில்லை.

இதையடுத்து சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக் தலைமையில் இயங்கும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி போன்றவற்றுடன் பாஜக கூட்டணி சேர முயற்சி நடந்ததாகவும் இதற்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்தது.சமத்துவ மக்கள் கட்சிக்கு எத்தனை இடம், வேட்பாளர்கள் யார் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்த கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.இது போல கார்த்திக்கும் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடலோரப்பாதுகாப்பு: அமெரிக்கவிமானம் வாங்குகிறது இந்தியா

மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தை முன்னிட்டு கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய அரசு முடிவு செய்திருந்தது.இதற்காக நவீன ரோந்து விமானங்களையும், கப்பல்களையும் வாங்க முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் 'போயிங்கோ பி-81' விமானத்தை வாங்க முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்க நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.


இந்தியா மொத்தம் 8 விமானங்களை வாங்குகிறது. இவற்றின் மொத்த விலை ரூ. 10 ஆயிரம் கோடி. இதே போல ரோந்து படகுகளையும் பல்வேறு நாடுகளிலிருந்து வாங்க திட்டமுள்ளதாம்

'மூன்றாவது அணியில் சேர மாட்டோம்' - சமாஜ்வாதி

மூன்றாவது அணியில் இருந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் வெளியேறினாலும் சமாஜ்வாதி கட்சி இணைய வாய்ப்பில்லை என்று சமாஜ் வாதி பொதுச்செயலாளர் அமர்சிங் தெரிவித்துள்ளார்.

அமர்சிங் நிருபர்களின் கேள்விக்குயொன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்

"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தனிப்பட்ட மற்றும் அரசியல் வேறுபாடு அறிந்தவர். அவர் பொதுச் செயலராக இருந்திருந்தால், மூன்றாவது முன்னணியில் சேர்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருந்திருக்கும்" என்றார் அமர்சிங். "ஆனால்,பிரகாஷ் காரத்தின் ஆதிக்கத்தின் கீழ் மூன்றாவது அணியில் சேர விரும்பவில்லை"

"காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னையால் கூட்டணி ஏற்படவில்லை என்றாலும், அக்கட்சியுடன் சில கொள்கை உடன்பாடு நிலவுகிறது.அத்வானி, மாயாவதி மன்மோகன் சிங் என்று பார்த்தால், பிரதமருக்கான சிறந்த தேர்வாக மன்மோகன் சிங்கையே கருதுகிறோம்" - இவ்வாறு அமர்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

வருண்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து பேசிய பாஜகவின் ஃபிலிபிட் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் வருண்காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. மட்டுமின்றி, குற்ற வழக்கும் அவருக்கு எதிராகப் பதிவு செய்துள்ளது.

பேச்சு குறித்த ஒலிநாடாக்களைக் கோரியுள்ள தேர்தல் ஆணையம், வரும் செவ்வாயன்று இப்பிரசினையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

அரசியல் சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் "தெளிவாக,இப்பேச்சுகள் சட்ட மீறலாகும்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தான் சமூக வெறுப்புணர்வைத் தூண்டுமாறு பேசவில்லை என்றும், அவை திரிக்கப்பட்டுள்ளதாகவும் வருண்காந்தி தெரிவித்துள்ளார்.

மத உணர்வுகளைப் புண்படுத்துவது கட்சியின் கலாச்சாரம் இல்லை - பா.ஜ.க.

மத உணர்வுகளைப் புண்படுத்துவது பாரதீய ஜனதா கட்சியின் கலாச்சாரம் இல்லை என்றும், தங்களது கட்சியின் வேட்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்றும் பா.ஜ.க. கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் பேசிய பேச்சின் விளைவால் எழுந்துள்ள விமர்சனங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் வருண், அங்கு நடந்த கூட்டமொன்றில் பேசிய போது, (தமது கையை உயர்த்தி) 'இது "கை" (காங்கிரசின் சின்னம்) இல்லை. தாமரையின் (பா.ஜ.க. சின்னம்) சக்தி. இது முஸ்லிம்களின் தலையை வெட்டும். ஜெய் ஸ்ரீராம்' என்று குறிப்பிட்டார்.

மற்றொரு கூட்டத்தில் பேசிய வருண், "எவரேனும் இந்துக்களுக்கு எதிராக கையை நீட்டினால் அல்லது இந்துக்கள் பலவீனமானவர்கள், தலைமை இல்லாதவர்கள் என்று எவரேனும் எண்ணினால், எவரேனும் இந்துக்களுக்கு எதிராக கையை உயர்த்தினால், பகவத் கீதை மீது ஆணையாக அந்த கையை நான் வெட்டுவேன்" என்றும் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

ராஷ்டிரிய ஜனதா தளம் - லோக் ஜன சக்தி தொகுதி உடன்பாடு

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கும் லோக்ஜனசக்தி கட்சிக்கும் இடைய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா கட்சி 25 தொகுதிகளிலும், லோக்ஜனசக்தி கட்சி 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்றார். மேலும் பேசிய அவர் பாஜக தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பதே எங்களின் நோக்கம் என்றார்.

2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், லோக் ஜன சக்தி கட்சி 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் நான்கு தொகுதிகளிலும் போட்டியிட்டது குறிப்பிடத் தக்கது.

கட்சிக்கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தார் ஜெட்லி

பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தார் அருண்ஜெட்லி. இன்று பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் டில்லியில் கூடி ஆந்திரா, குஜராத், டில்லி மற்றும் உ.பி., மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம் ராஜ்நாத்சிங் தலைமையில் ந‌டந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தை அருண்ஜெட்லி புறக்கணித்தார். மார்ச் 13ம் தேதி நடந்த கூட்டத்தையும் ஜெட்லி புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்‌தக்கது.

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கும் அருண் ஜெட்லிக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் அதிகரித்து வருவதையே இது குறிக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முன்னதாக அருண் ஜெட்லியைச் சந்தித்து சமாதானம் ஏற்படுத்த முயன்ற பா.ஜ.க. தலைவர்களை அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாயின. பாரதீய ஜனதா கட்சியில் பிளவு ஏற்படுவதைத் தவிர்க்க ஆர். எஸ். எஸ். அமைப்பும் முயற்சிகளை மேற்கெண்டு வருகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!