Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

92 வயது மூதாட்டி 60 வயது குழந்தையை பெற்றெடுத்தார்

92 வயது மூதாட்டி 60 வயது குழந்தையை பெற்றெடுத்தார் என்று சொல்வது ஆச்சரியமாக இருந்தாலும் இது உண்மை. தெற்கு சீனாவில் வசிக்கும் ஹுவாங் இஜுன் 92, என்பவர் சமீபத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தான் சுமந்து வந்த குழந்தையை பெற்றார்.

ஆனாலும் குழந்தை உயிருடன் இல்லை. அது வெறும் கற்குழந்தையாகவே வெளிவந்தது. குழந்தை கருத்தரித்த பிறகு கரு பாதிக்கப்பட்டால் இவ்வாறு கருவில் உள்ள குழந்தை கால்சியம் அமில உப்புகளால் பாதிக்கப்பட்டு கல்லாக மாறிவிடுவது மிகவும் அரிதானது என்றும் அதற்கு அறிவியலில் lithopedian என்றும் சொல்லப்படுகிறது.

இதுவரையில் இதுபோன்று 290 சம்பவங்கள் மருத்துவத்துறையில் பதியப்பட்டுள்ளது , இதற்கு முன்பாக மேடம் கோலம்பே சாத்ரி என்ற 68 வயது பிரான்ஸ் நாட்டு பெண்ணுக்கு அவர் 1582 ல் இறந்த பின் கல்குழந்தை அவருடைய வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது. அவர் 28 வருடங்களாக வீங்கிய வயிற்றுடனும் வேதனையுடனும் வாழ்ந்து வந்தார்.

அக்குழந்தை பிரான்ஸ் நாட்டு பணக்காரருக்கு விற்கப்பட்டு பின் பல கைகள் மாறி இறுதியாக டென்மார்க் அரசருக்கு விற்கப்பட்டு அது அவருடைய மியூசியத்தில் வைக்கப்பட்டு பின் காணாமல் போய்விட்டதாகவோ அல்லது அடக்கம் செய்யப்பட்டதாகவோ கூறப்படுகிறது.

தேர்தலுக்குப்பிறகு சரத்பவார் பிரதமராக சமாஜ்வாதி ஆதரவு

மக்களவை தேர்தலுக்குப் பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் பிரதமராகும் சூழ்நிலை ஏற்பட்டால் அவரை எதிர்க்க மாட்டோம்; துணைநிற்போம் என்று சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

தனியார் தொ.கா ஒன்றுக்கு பேட்டியளித்த சமாஜ்வாதி பொதுச்செயலாளர் அமர்சிங், அதுபோல சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் பிரதமராகும் சூழல் ஏற்பட்டால் தேசியவாத காங்கிரஸ் கட்சி அதற்கு முழு ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்."நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி எதுவும் வைத்திருக்கவில்லை. அரசியல் சூழல் மற்றும் நிர்ப்பந்தம் காரணமாகவே அந்தக் கட்சியுடன் உறவு வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது. மதச்சார்பற்ற கட்சிகளுக்குள் நாங்கள் தனிக்குழுவாகச் செயல்படுகிறோம்" என்றார் அமர்சிங்.

தலித் பெண் கூட்டுக் கற்பழிப்பு : 6 ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சிறை!

குஜராத் மாநிலத்தின் படான் நகரில் 19 வயது தலித் மாணவி கூட்டாகக் கற்பழிக்கப் பட்ட வழக்கில், 6 கல்லூரி ஆசிரியர்களுக்கு வாழ் நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்களான மனீஷ் பர்மார், மஹேந்திரா பிரஜாபதி, அஷ்வின் பார்மர், கிரன் படேல், சுரேஷ் படேல் மற்றும் அதுல் படேல் ஆகியோரை கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவஸ்தவா குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டார்.

மேலும் இக்குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

குஜராத் மாநிலத்தில் படான் நகரில் மாநில அரசால் நடத்தப்படும் இக்கல்லூரியில் படித்த அந்த தலித் மாணவியை இந்த ஆறு ஆசிரியர்களும் ஆறு மாதங்களாகத் தொடர்ந்து கற்பழித்தனர் என்று இப்பெண்ணின் பெற்றோர் கடந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் புகார் தெரிவித்தார்.

தங்களுக்கு ஒத்துழைக்க மறுத்தால் மிகக் குறைவான உள் மதிப்பெண்களே வழங்குவோம் என்று இந்த ஆசிரியர்கள் அந்தப் பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய காவல்துறை தேடல்.

கடந்த 1ம் தேதியன்று திருப்பூரில் நடந்‌த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஏளனமாகவும் பேசியதாக அவர் மீது திருப்பூர் வடக்குப் பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்டையில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்வதற்காக திருப்பூர் காவல்துறையினர் சென்னை வந்தனர். அண்ணாநகரில் உள்ள வைகோவின் வீட்டில் பதுங்கியிருக்கலாம் என்று கருதி, அவரை பிடிப்பதற்காக தெரு முனையில் காத்திருந்தனர். அப்போது, வேலூருக்கு கிளம்பிய வைகோவின் காரில் அவர் ஒளிந்திருக்கலாம் என்று, கார் டிக்கி உட்பட அனைத்து இடங்களையும் தேடினர். ஆனாலும் அவர் சிக்கவில்லை.

ஒருவழியாக அவரை சென்னையில் கைதுசெய்த திருப்பூர் காவல்துறையினர் தாம்பரம் காவல்நிலையத்தில் அவரை முன்னிலைப் படுத்தினர்.

மார்ச் 30 முதல் டெல்லி-பாங்காக் நேரடி விமான சேவை

மார்ச் 30ம் தேதி முதல் புதுடெல்லியில் இருந்து பாங்காக்கிற்கு தினசரி நேரடி விமானசேவை நடத்த இருப்பதாக கதே பசிஃபிக் ஏர்வேஸ் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. கதே பசிஃபிக் நிறுவனம் ஹாங்காங்கை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.

டெல்லியில் அதிகாலை 3.30 க்கு புறப்படும் கதே விமானம் பாங்காக்கிற்கு, தாய்லந்து நேரப்படி 8.55 க்கு போய் சேரும். அங்கிருந்து 17.25 க்கு புறப்படும் அந்த விமானம் டெல்லிக்கு, இந்திய நேரப்படி 19.45 க்கு வந்து சேரும்.

பயண நேரம் குறைவாக இருப்பதால் பாங்காக்கிற்கு சுற்றுலா வருபவர்கள் ஒரு பகல் முழுவதையும் ஊர் சுற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்று டெல்லி பிராந்திய கதே பசிஃபிக் மேலாளர் டிம் ரைட் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து பாங்காக் செல்லும் அந்த கதே விமானம், தன் மையமான ஹாங்காக் வழியாகவே செல்லும் என்பதால பயணிகள் எளிதாக அதே விமானத்தில் ஹாங்காங்கும் செல்லலாம். மேலும் ஜப்பான், கொரியா மற்றும் சீனா செல்ல விரும்புபவர்களுக்கும் இது வசதியாக இருக்கும் . கதே பசிஃபிக் விமான நிறுவனம், இந்தியாவில் கடந்த 55 வருடங்களாக விமான சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கள்ளத்தனமான துப்பாக்கித் தொழிற்சாலைகள் கண்டுபிடிப்பு

ஒன்றல்ல; இரண்டல்ல பத்து துப்பாக்கித் தொழிற்சாலைகள் சட்டவிரோதமாகச் செயற்பட்டு வந்ததை பீகார் மாவட்ட காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
முங்கீர் மாவட்டத்தில் உள்ள ஹசரத்கஞ்ச் என்ற இடத்தில் 10 கைத்துப்பாக்கித் தொழிற் சாலைகள் முறைகேடாக செயல்பட்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.


அனுமதி பெறாமல் தயாரிக்கப்பட்டிருந்த ஏராளமான கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு லாரிகளில் ஏற்றி காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.இந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இதுவரை கைது செய்யப் படவில்லை.

இதன்றி, இப்பகுதியில் செயல்பட்டு வந்த இரண்டு கள்ளச்சாராய தொழிற்சாலைகளில் திடீர் சோதனை நடத்தி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளச் சாராயத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்

உயர்நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு கோரி அரசுக்கு கடிதம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி நிகழ்வுற்ற காவல்துறை-வழக்குரைஞர் மோதல் சம்பவத்துக்குப் பின் வழக்குரைஞர்கள் இதுவரை பணிக்குத் திரும்பவில்லை.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக லக்ஷ்மண் கோகலே நாளை மறுநாள் பதவியேற்கவிருக்கிறார்.

புதிய தலைமை நீதிபதியின் பதவியேற்பை முன்னிட்டும் மீண்டும் பணிக்குத் திரும்ப விரும்பும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசுக்கு பதிவாளர் மாலா கடிதம் எழுதியுள்ளார். நீதிமன்றம், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!