Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் 7ஆம் தேதி முதல் வெளியீடு!

Published on: செவ்வாய், 3 மார்ச், 2009 // , , ,
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் 7ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி காங்கிரஸ் மத்திய தேர்வு கமிட்டியின் கூட்டம் வருகிற 7 மற்றும் 8ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. அப்போது மாநில வாரியாக வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யும் பணிகள் தொடங்கும்.

7ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் தேர்வு கமிட்டி கூட்டத்தில் சில வேட்பாளர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிடுகிறது.

சீனா இறக்குமதி தடையை இந்தியா விலக்கியது!

சீனாவிலிருந்து பொம்மைகள் இறக்குமதி செய்ய முன்னர் விதித்திருந்த தடையை இந்தியா நீக்கம் செய்தது. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதாக சீனா உறுதியளித்ததைத் தொடர்ந்து தடை விலக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய வணிக அமைச்சகம் தெரிவித்தது.

சீனா பொம்மைகளினால் பொது ஆரோக்கியத்திற்குப் பங்கம் விளையும் எனக் கருதியதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இந்திய அரசு இத்தடையை விதித்திருந்தது. உலக வியாபார கழகத்தில் இந்தியாவின் தடையின் மீது கேல்வி எழுப்புவோம் என சீனா பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், முன்னர் விதித்தத் தடை உலக வியாபார கழகத்தின் அனுமதியுடனேயே செயல்படுத்தப்பட்டது என வணிக அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

உலக விளையாட்டுப் பொருட்களில் 70 சதவீதத்தையும் சீனா ஆக்ரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"இந்தியா ஒளிர்கிறது" தவறான பிரச்சாரம் - அத்வானி!

"இந்தியா ஒளிர்கிறது" என்ற தவறான பிரச்சாரமும் அளவுகடந்த தன்னம்பிக்கையுமே 2004 ல் நடந்த மக்களவை தேர்தலில் என்.டி.ஏ தோல்வியடைந்ததற்கான காரணங்கள் என பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறினார்.

அடல் பிகாரி வாஜ்பேய் அவர்களின் தலைமையில் நல்லதொரு ஆட்சி நடத்திக் காட்டியதால் மீண்டும் அரசமைக்க இயலும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்தோம் என பாஜக வணிகர்கள் பிரிவு கூட்டத்தில் பேசும் பொழுது அத்வானி நினைவு கூர்ந்தார்.

"நாங்கள் வெற்றி பெறுவோம் என எதிராளிகளோ அல்லது அரசியல் பார்வையாளர்களோ கருதவில்லை. அளவுக்கதிகமான தன்னம்பிக்கையே தோல்விக்கான முதல் காரணமாகும் - இரண்டாவது "இந்தியா ஒளிர்கிறது" என்ற தவறான பிரச்சாரங்களுமாகும்" என அவர் தொடர்ந்து பேசினார்.

"உங்களின் வீடுகள் ஒளிர்கின்றதா என்ற எதிராளிகளின் கேள்விக்கு முன்னால் அனைவருக்கும் பிரச்சனைகளே இருந்தன. வீடுகள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் நாட்டில் இப்பொழுதும் வறுமை நிலைநிற்கின்றது. விவசாயிகளுக்கும் அவர்களுக்கான பல பிரச்சனைகள் இருக்கின்றன. நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2004 ல் அடிதட்டு மக்களின் ஓட்டுகளைக் கொண்டு ஆட்சியினைக் கைப்பற்றிய யு.பிஏ வை இம்முறை மக்கள் கீழே இறக்குவர்" என்றும் அவர் பேசினார்.

ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா நியூசிலாந்தை வென்றது

நேப்பியரில் இன்று நடைப்பெற்ற முதலாம் ஒருநாள் மட்டைப்பந்து ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது. மழை குறுக்கிட்டதன் காரணமாக டக்வெர்த்-லூயிஸ் முறைப்படி பந்துவீச்சு சுற்றுகள் வெகுவாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்தியா 38 சுற்றுகளுக்கு 4 ஆட்டக்காரர்களை இழந்து 273 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் தோனி ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களும், துணைத்தலைவர் சேவாக் 77 ஓட்டங்களும், ரெய்னா 66 ஓட்டங்களும், யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

அதன்பின் நியூசிலாந்து ஆடிய 17ஆவது சுற்றில் மீண்டும் மழை குறுக்கிட நியூசிலாந்துக்கான இலக்கு 28 சுற்றுகளில் 215 ஓட்டங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து 9 ஆட்டக்காரர்களை இழந்து 162 ஓட்டங்களையே எடுத்தது.இதனால் இந்தியா 53 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் தரப்பில் ஹர்பஜன்சிங் மூவரையும் பிரவீன் குமார் இருவரையும் ஜாஹிர்கான், யுவராஜ் சிங், யூசுப் பதான் ஆகியோர் தலா ஒருவரையும் ஆட்டமிழக்கச்செய்தனர்.

கடந்த 20-20 ஆட்டங்கள் இரண்டிலும் நியூசிலாந்திடம் தோற்றிருந்த இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு!

பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

லாஹூரில் உள்ள கடாபி கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அருகில் இது நடந்துள்ளது. இதில் 8 இலங்கை வீரர்கள் காயமுற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை பேட்ஸ்மேன் குமார் சங்கர்கரா உள்பட வீரர்கள் காயமுற்றதாக இலங்கை அணியின் மேலாளர் கூறியதாக இணைய தகவல்கள் கூறுகின்றன.

இது இலங்கை அணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என பாகிஸ்தானிய தொலைக்காட்சிகள் கூறுகின்றன. இரு வீரர்களுக்கு நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளதாகவும், ஒருவருக்கு காலில் குண்டு பாய்ந்துள்ளதாகவும், காவல்துறையின் வாகனத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன. இரண்டு குழுக்களுக்கிடையே நடந்த மோதல்களில் இலங்கை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் போன்றதே இத்தாக்குதல் எனவும், அந்தப் பகுதியில் தற்போதும் 12 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் பாகிஸ்தானிய காவல்துறை கூறியுள்ளது.

இலங்கை வீரர்களை அந்தப் பகுதியிலிருந்து அழைத்துச் செல்வதற்காக சற்று முன் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அதில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

உ.பி. : பா.ஜ.க. - ராஷ்ட்ரீய லோக் தள் தொகுதி உடன்பாடு

உத்திரப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி ராஷ்ட்ரீய லோக் தளத்துடன் தொகுதி உடன்பாடு ஏற்படுத்தியுள்ளது. இதன்படி ராஷ்ட்ரீய லோக் தளம் மதுரா, பாக்பட், நகினா, ஹத்ரஸ், அம்ரோஹா, சீதாபூர் மற்றும் முசப்பர் நகர் ஆகிய ஏழு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

மேலும் ஒரு தொகுதி தங்களுக்குக் கிடைக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள் எதிர்பார்த்திருக்கிறது. ஆனால் அக்கட்சிக்கு 7 தொகுதிகள்தான் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

2004ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரீய லோக் தளம் 3 தொகுதிகளில் வென்றது. பா.ஜ.க. 10 இடங்களில் வென்றது.

ரெட் கிராஸ் அமைப்பைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் - இந்தியா.

யுத்தப்பகுதியினுள் அகப்பட்ட சாதாரண மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்க்க, ரெட் கிராஸ் போன்ற சர்வதேச அமைப்புகளை அனுமதிக்க வேண்டும் எனவும் விடுதலை புலிகள் முன்வைத்த யுத்த நிறுத்த வாக்குறுதியை அங்கீகரிக்க இலங்கை அரசு தயாராக வேண்டும் எனவும் இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

கொல்கொத்தாவில், "தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பாதுகாப்பும் சமாதானமும்" என்ற செமினாரில் பேசும் பொழுது வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இக்கோரிக்கை விடுத்தார்.

யுத்தப்பகுதியினுள் அகப்பட்டுள்ள சாதாரண பொது மக்களின் பாதுகாப்பு குறித்து மட்டுமே கவலைப்படுவதாகவும் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் மீது எவ்வித அனுதாபமும் இல்லை எனவும் அவர் கூறினார்.

அதே நேரம், விடுதலை புலிகளின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள கோரிய இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு புறக்கணித்ததாக செய்திகள் கூறுகின்றன. இது குறித்து இந்தியாவிலிருந்து அரசு சார்பாக எவ்வித கோரிக்கையும் கிடைக்கப்பெறவில்லை எனவும் புலிகள் ஆயுதத்தைக் கீழே வைத்தால் மட்டுமே பிரச்சனை முடிவுக்கு வரும் என்ற தங்களின் நிலைபாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இலங்கை வெளியுறவு துறை செயலர் பலிதா கொஹானா கூறினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!