Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கர்நாடக முதல்வரின் ஹெலிகாப்டர் பயண செலவு ரூ. 4.5 கோடி

Published on: சனி, 28 பிப்ரவரி, 2009 // , ,
கர்நாடக முதல்வரின் ஹெலிகாப்டர் பயண செலவு ரூ. 4.5 கோடி

பெங்களூர், பிப். 27: கடந்த 9 மாதங்களில் முதல்வர் எடியூரப்பா ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்காக வாடகையாக ரூ. 4.52 கோடியை அரசு செலவு செய்துள்ளது.

மாவட்டங்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும்போது இப்போதெல்லாம் முதல்வர்கள் ஹெலிகாப்டர்களையே பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த வகையில் மற்ற முதல்வர்களை விட ஹெலிகாப்டரை முதல்வர் எடியூரப்பா அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக மேலவையில் மதச்சார்பற்ற ஜனதாதள உறுப்பினர் பசவராஜ் ஹொரட்டியின் கேள்விக்கு அரசு எழுத்து மூலம் பதில் அளித்துள்ளது.

இதில் முதல்வர் எடியூரப்பா 2008-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி பதவி ஏற்றார். அன்று முதல் கடந்த 9 மாதங்களில் அரசு முறைப் பயணத்துக்கு முதல்வர் எடியூரப்பா ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் வாடகைப் பணமாக இதுவரை ரூ. 4.59 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2004-ம் ஆண்டு மே மாதம் முதல் 2006-ம் ஆண்டு பிப்ரவரி வரை முதல்வராக இருந்த தரம்சிங் ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்கு அரசு ரூ. 3.75 கோடி செலவு செய்துள்ளது.

2006-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2007-ம் ஆண்டு அக்டோபர் வரை முதல்வராக இருந்த குமாரசாமி ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்காக அரசு ரூ. 4.94 கோடி செலவு செய்துள்ளது.

2004-ம் ஆண்டுமுதல் 2009-ம் ஆண்டு பிப்ரவரி வரை அமைச்சர்கள், அதிகாரிகள் ஹெலிகாப்டரை பயன்படுத்தியற்காக அரசு ரூ. 13.28 கோடி செலவு செய்துள்ளது என்று பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஹெலிகாப்டருக்காக குறைந்த காலத்தில் அதிக அளவில் செலவு செய்த முதல்வராக எடியூரப்பா உள்ளார்.

பீகார் வெள்ள நிவாரண உதவி: லாலு ரூ.40கோடி வழங்கினார்.

"கோசி ஆற்று வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பீகார் அரசு, மத்திய அரசு, அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என, ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை துடைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள அந்தப் பணியில் நாங்களும் பங்கேற்றுள்ளோம்" என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், ரூ.40 கோடிக்கான இரண்டு காசோலைகளை பீகார் முதலமைச்சரும் தன் அரசியல் எதிரியுமான நிதீஷ் குமாரிடம் அளித்துள்ளார்.

முதல் காசோலை இரயில்வே ஊழியர்களிடம் இருந்து ஒருநாள் சம்பளமாகத் திரட்டப்பட்ட முப்ப்த்தெட்டு கோடி ரூபாய்க்கானது. மற்றொரு காசோலை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட ரூ.இரண்டு கோடிக்கானது. இதுதவிர வேஷ்டி, சேலைகள், போர்வைகள் மற்றும் உணவு தானியங்கள் போன்றவற்றை வழங்கப்போவதாகவும் லாலு கூறினார்.

அரசியல் ரீதியான பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள இது சரியான நேரம் அல்ல என்று கூறிய லாலு,வெள்ள நிவாரண நிதியாக பீகார் அரசு கேட்ட 14 ஆயிரத்து 800 கோடி ரூபாயை மத்திய அரசு தரவில்லை என, முதல்வர் நிதிஷ்குமார் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்தார். லாலுவுக்கு பீகார் அரசு சார்பாக நிதீஷ்குமார் நன்றி தெரிவித்தார்.

இந்தியா: ஹோண்டா புதிய தொழிற்சாலைத் திட்டம் கைவிடல்?

தன் இரண்டாவது இந்தியத் தொழிற்சாலையை ரூ.1000 கோடி முதலீட்டில் தொடங்க இருந்த ஜப்பானின் ஹோண்டா வாகன தயாரிப்பு நிறுவனம் அதை தற்காலம் நிறுத்திவைப்பதாக அறிவித்திருக்கிறது.பொருளாதார மந்த நிலை காரணமாக கார்களின் விற்பனை பெருமளவில் குறைந்து போனதையடுத்து ஹோண்டா நிறுவனம் இம்முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.

இந்தியாவில் சீல் குரூப்புடன் சேர்ந்து ஹோண்டா சீல் கார்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஹோண்டாவுக்கு, நொய்டாவில் ஏற்கனவே ஒரு கார் தயாரிப்புத்தொழிற்சாலை இருக்கிறது. ஒரு லட்சம் கார்களை தயாரிக்கக்கூடிய வசதி இருந்தும் கூட, அந்த தொழிற்சாலை 55,000 கார்களை மட்டுமே தயாரிக்கிறது.

மட்டுமின்றி, 1,000 தற்காலிக ஊழியர்களையும் இந்நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

தமிழகம்: பனிமூட்டத்தால் விமான, பேருந்து சேவைகளில் தடங்கல்

மெல்ல தலைநீட்டிக்கொண்டிருக்கிறது கோடைக்காலம். இருந்தும் அதிகாலை நேரங்களில் தமிழ்நாட்டில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும்பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் விமான, பேருந்து சேவைகள் தடங்கலும் தாமதமும் அடைகின்றன.

நேற்று கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானமொன்று தரையிறங்குகையில் பனிமூட்டத்தின் காரணமாக பறவையொன்றுடன் மோதியதில் விமான எந்திரத்தில் பறவையின் இறக்கை சிக்கிக்கொண்டது. என்றாலும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.

இன்று காலை சென்னையிலும் கடும்பனி காணப்பட்டதால்,வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குவைத்தில் இருந்து வந்த குவைத் ஏர்லைன்ஸ் விமானமும்,கொழும்பில் இருந்து வந்த ஜெட் லைட் விமானமும் பனி மூட்டம் காரணமாக தரையிறங்க முடியவில்லை. அவை பெங்களூருக்குத் திருப்பியனுப்பப்பட்டன. அதுபோல, ஷார்ஜாவிலிருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓமன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டன. விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன.

தூத்துக்குடியில் கடும் பனி மூட்டத்தால் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் நான்கு பெண்கள் காயமடைந்தனர்.

கொல்கத்தாவிலும் இதுபோன்ற பனிப்பொழிவு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய ரூபாய் ரிக்கார்ட் வீழ்ச்சி!

தொடர்ச்சியான நான்காம் நாளான நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு விழ்ச்சியைச் சந்தித்தது. இதுவரை இல்லாத அளவு முதன் முறையாக டாலருக்கு 51 ரூபாய் கடந்தது.

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 50.60 ரூபாய் ஆனது. அதற்குப் பின் தற்பொழுது மிக அதிகபட்சமாக 51.60 ஆக ஆகியுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளிலும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலும் டாலருக்கு அதிக தேவை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குழந்தையின் நுரையீரலில் பல்ப்: வெற்றிகரமாக அகற்றப்பட்டது

சுமார் 2 மி.மீ நீளமும், 1 மி.மீ அகலமும் கொண்ட சிறிய பல்ப் ஒன்று சிறுமியின் நுரையீரலிலிருந்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இச்சம்பவம் மேற்குவங்க மாநிலம் சோனார்பூரில் நடந்துள்ளது.

சோனார்பூரை சேர்ந்த நான்கு வயது சிறுமி பிராதிமா அலிம்ஜார். கடந்த வாரம் சிறிய பல்ப் ஒன்றை தவறுதலாக விழுங்கவிட அந்தச் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உணவுக்குழாயில் பல்ப் சிக்கி விட்டதாக நினைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சில மலமிளக்கிகள் கொடுத்து பல்பை வெளியேற்ற முயற்சி செய்துள்ளனர்.

அந்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காததால் சிறுமி உடனடியாக கொல்கத்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

அங்கும் சிறுமிக்கு மூச்சு திணறலும், சளித் தொல்லையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பல்ப் நுரையீரலில் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல்ப் அகற்றப்பட்டது.

இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் அருண்வா சென்குப்தா கூறுகையில்,

பல்ப் குழந்தையின் வலது நுரையீரலில் சிக்கி கொண்டது. அவளது நிலைமை தொடர்ந்து மோசமாகி கொண்டிருந்ததால் தான் அறுவை சிகிச்சை முடிவுக்கு வந்தோம். நுரையீரல் மிகவும் மென்மையான பகுதி என்பதால் பல்ப் உடையாமல் எடுப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம் என்றார்

இலங்கை எந்த நாட்டிற்க்கும் காலனி நாடு அல்ல-இலங்கை பிரதமர்

இலங்கையில் போரை நிறுத்தும்படி சர்வதேச நாடுகள் வற்புறுத்துவது தொடர்பாக இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரம நாயகே கூறியதாவது:-

போரை நிறுத்தும்படி பல நாடுகள் எங்களை வற்புறுத்திவருகின்றன. இதற்காக நாங்கள் வளைந்து கொடுக்க முடியாது. விடுதலைப்புலிகளை முற்றிலும் தோற்கடித்த பின்தான் போரை நிறுத்துவோம். போர் கடைசி கட்டத்தில் இருக்கும் போது எப்படி அதை நிறுத்த முடியும்?

சில நாடுகள் எங்களை போரை நிறுத்துங்கள் என்று தொடர்ந்து சொல்கின்றன. நாங்கள் அவர்களின் காலனி நாடு அல்ல அவர்கள் சொல்லை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.

இலங்கை ஜனநாயக நாடு. எனவே மக்கள் சொல்வதை மட்டுமே நாங்கள் கேட்போம்.

விடுதலைப்புலிகள் அரசை எதிர்த்து போராடுகிறார்கள். அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி சர்வதேச நாடுகளோ, அல்லது அமைப்புகளோ எங்களை வற்புறுத்த கூடாது. எங்களுடைய உணர்வுகளுக்கு மற்ற நாடுகள் மதிப்பளிக்க வேண்டும் , என்று கூறினார்.

மோடியின் செல்வாக்கை அதிகரிக்க மின் அஞ்சல் பிரச்சாரம்

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தின் 7ஆம் நினைவு நாளான வெள்ளிக் கிழமையன்று, மோடியின் செல்வாக்கை அதிகரிக்க மின் அஞ்சல் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

குஜராத் மாநில முதல்வராக குஜராத்திற்கு அவர் செய்த சாதனைகளை மறைத்து, குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் என்று அவர் மீது குற்றம் சுமத்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனவே கோத்ரா இரயில் எரிப்பு நாளான இன்று இந்த மின் அஞ்சல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது என்று மாநில பாரதீய ஜனதா கட்சிப் பிரமுகர் ஒருவர் கூறினார்.

"கோத்ரா அவலம் நடந்து ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரும், கோத்ரா கலவரம் தொடர்பான கெட்ட நினைவுகள் வருகின்றன. ஆனால் இந்தப் பிரச்சாரம் மூலம் குஜராத் மாநிலத்திற்கு மோடி செய்த சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டப்படுகிறது" என்று பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினர் ஒருவர் கூறினார்.

ஆனால் இந்த மின் அஞ்சல் பிரச்சாரம் கோத்ராவை முன்னிட்டுச் செய்யவில்லை என்றும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் இதுபோன்ற பிரச்சாரம் செய்யப்பட்டதாகவும், மக்களவைத் தேர்தல் அண்மித்து வருவதால் இப்பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தகவல் நுட்பப் பிரிவு தலைவர் சசிரஞ்சன் யாதவ் கூறினார்.

வெள்ளிக்கிழமையன்று சுமார் 2 இலட்சம் மின் அஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹோலோகாஸ்ட் பிஷப்பின் மன்னிப்பை வாட்டிகன் நிராகரித்தது

ஹோலோகாஸ்டை மறுத்து வந்த இங்கிலாந்து பிஷப்பின் மன்னிப்பை வாட்டிகன் ஏற்க மறுத்துவிட்டது. தன்னுடைய கருத்தை அவர் மனப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தன்னுடைய கருத்து மற்றவர்களின் மனதை இந்த அளவு பாதிக்கும் என்பது எனக்குத் தெரிந்திருந்தால் என் கருத்தை நான் தெரிவித்திருக்க மாட்டேன் என்று இங்கிலாந்தைச் சார்ந்த பிஷப் ரிச்சர்டு வில்லியம்சன் தெரிவித்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன் தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் அவ்வாறு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

ஹோலோகாஸ்ட் பொய் என்பதை அவர் நம்புகிறாரா இல்லையா என்பதை இந்த பிஷப் தெளிவுபடுத்தவில்லை என்று யூதத்தலைவர்கள் கூறினர். பிஷப் ரிச்சர்டு உண்மையாகவே மன்னிப்புக் கேட்கவில்லை என்றும், பல பொருள்களைத் தரும் வார்த்தைகளை உபயோகித்து தந்திரத்தைக் கையாண்டுள்ளார் என்றும் யூதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

வாட்டிகன் பிஷப் ரிச்சர்டுக்கு விதித்த நிபந்தனைகளை அவர் மதித்தது போல் தோன்றவில்லை என்று வாட்டிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிகோ லோம்பார்டி கூறினார்.

இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் தேதியை அறிவித்தார் ஒபாமா

அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் இராக்கிலிருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளிக் கிழமையன்று அறிவித்தார்.

கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் இராக்கிலிருந்து 16 மாதங்களுக்கு அமெரிக்கப் படைகளைத் திரும்பெறுவேன் என்று ஒபாமா வாக்குறுதி அளித்தார். அவரது வாக்குறுதிக்கு 3 மாதங்கள் அதிகமாக 19 மாதங்களில் அமெரிக்கப் படைகள் திரும்ப அழைக்கப் படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இராக்கில் தற்போது 142,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். இவர்களில் 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை 2011 ஆம் ஆண்டு வரை இராக்கில் இருப்பார்கள் எனவும், மற்றவர்கள் 2010 ஆகஸ்டு மாத இறுதிக்குள் திரும்பிவிடுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புஷ் அரசும் இராக் அரசும் செய்து கொண்டு ஒப்பந்தப்படி 2011 ஆம் ஆண்டு இறுதி வரை அமெரிக்கப் படையினர் இராக்கில் இருக்க வகை செய்யப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

2003ஆம் ஆண்டு முதல் இதுவரை 4,250 அமெரிக்கப் படையினர் இராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!