கர்நாடக முதல்வரின் ஹெலிகாப்டர் பயண செலவு ரூ. 4.5 கோடி
கர்நாடக முதல்வரின் ஹெலிகாப்டர் பயண செலவு ரூ. 4.5 கோடி
பெங்களூர், பிப். 27: கடந்த 9 மாதங்களில் முதல்வர் எடியூரப்பா ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்காக வாடகையாக ரூ. 4.52 கோடியை அரசு செலவு செய்துள்ளது.
மாவட்டங்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும்போது இப்போதெல்லாம் முதல்வர்கள் ஹெலிகாப்டர்களையே பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த வகையில் மற்ற முதல்வர்களை விட ஹெலிகாப்டரை முதல்வர் எடியூரப்பா அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக மேலவையில் மதச்சார்பற்ற ஜனதாதள உறுப்பினர் பசவராஜ் ஹொரட்டியின் கேள்விக்கு அரசு எழுத்து மூலம் பதில் அளித்துள்ளது.
இதில் முதல்வர் எடியூரப்பா 2008-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி பதவி ஏற்றார். அன்று முதல் கடந்த 9 மாதங்களில் அரசு முறைப் பயணத்துக்கு முதல்வர் எடியூரப்பா ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் வாடகைப் பணமாக இதுவரை ரூ. 4.59 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2004-ம் ஆண்டு மே மாதம் முதல் 2006-ம் ஆண்டு பிப்ரவரி வரை முதல்வராக இருந்த தரம்சிங் ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்கு அரசு ரூ. 3.75 கோடி செலவு செய்துள்ளது.
2006-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2007-ம் ஆண்டு அக்டோபர் வரை முதல்வராக இருந்த குமாரசாமி ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்காக அரசு ரூ. 4.94 கோடி செலவு செய்துள்ளது.
2004-ம் ஆண்டுமுதல் 2009-ம் ஆண்டு பிப்ரவரி வரை அமைச்சர்கள், அதிகாரிகள் ஹெலிகாப்டரை பயன்படுத்தியற்காக அரசு ரூ. 13.28 கோடி செலவு செய்துள்ளது என்று பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஹெலிகாப்டருக்காக குறைந்த காலத்தில் அதிக அளவில் செலவு செய்த முதல்வராக எடியூரப்பா உள்ளார்.
0 comments