தமிழகம்: பனிமூட்டத்தால் விமான, பேருந்து சேவைகளில் தடங்கல்
மெல்ல தலைநீட்டிக்கொண்டிருக்கிறது கோடைக்காலம். இருந்தும் அதிகாலை நேரங்களில் தமிழ்நாட்டில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும்பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் விமான, பேருந்து சேவைகள் தடங்கலும் தாமதமும் அடைகின்றன.
நேற்று கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானமொன்று தரையிறங்குகையில் பனிமூட்டத்தின் காரணமாக பறவையொன்றுடன் மோதியதில் விமான எந்திரத்தில் பறவையின் இறக்கை சிக்கிக்கொண்டது. என்றாலும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.
இன்று காலை சென்னையிலும் கடும்பனி காணப்பட்டதால்,வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குவைத்தில் இருந்து வந்த குவைத் ஏர்லைன்ஸ் விமானமும்,கொழும்பில் இருந்து வந்த ஜெட் லைட் விமானமும் பனி மூட்டம் காரணமாக தரையிறங்க முடியவில்லை. அவை பெங்களூருக்குத் திருப்பியனுப்பப்பட்டன. அதுபோல, ஷார்ஜாவிலிருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓமன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டன. விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன.
தூத்துக்குடியில் கடும் பனி மூட்டத்தால் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் நான்கு பெண்கள் காயமடைந்தனர்.
கொல்கத்தாவிலும் இதுபோன்ற பனிப்பொழிவு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments