தேர்தல் ஆணையரை நீக்க தலைமைத் தேர்தல் ஆணையர் பரிநதுரை
Published on: சனி, 31 ஜனவரி, 2009 //
தேர்தல் 2009,
தேர்தல் ஆணையம்,
Election 2009,
Election Commision
தேர்தல் ஆணையர்களில் ஒருவரான நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால் சாமி குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார்.
நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் அவர் அக்கட்சிக்கு சார்பாக நடந்து கொள்கிறார் என்றும் பாரதீய ஜனதா கட்சி ஏற்கனவே வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையரும் இக்கோரிக்கையை வைத்திருப்பதைத் தொடர்ந்து இந்திய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
கோபால் சாமியின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவருக்குப் பின் நவீன் சாவ்லாதான் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பார். பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இப்பரிந்துரையால் தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் அரசியல் வெளிப்பட்டுள்ளதாகக் கருத முடிகிறது.
தலைமைத் தேர்தல் அதிகாரியின் இப்பரிந்துரையை ஏற்று நவீன் சாவ்லாவை உடனடியாக நீக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் டி. ராஜா, இப்பரிந்துரை அரசியல் நோக்கம் கொண்டது என்று குற்றம் சுமத்தினார்.






