அமெரிக்காவைச் சேர்ந்த மார்கஸ் ஷ்ரன்கர் (வயது 38) என்ற விமான ஓட்டி பல்வேறு நிதி மோசடி வழக்குகளில் சிக்குண்டு காவலர்களால் தேடப்பட்டு வந்தார். இந்த வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக இவர் போலியாக விமான விபத்து சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை இன்டியானா மாநிலம் ஆன்டர்சன் நகரிலிருந்து ப்ளோரிடாவுக்கு விமானத்தில் பறந்தார். அலபாமா மாநில எல்லையில் இருக்கும் போது விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு போலியாக அவசர அழைப்பு விடுத்து தனது விமானத்தின் இறக்கைகள் சேதமடைந்துள்ளதாக தகவல் தந்தார். பி்ன்பு விமானம் தானாகவே இயங்கும் வகையில் ஏற்பாடு செய்தார். பின்பு பாராசூட்டைக் கட்டிக் கொண்டு விமானத்திலிருந்து குதித்துவிட்டார். விமானம் ப்ளோரிடா மாநிலம் மில்டன் நகர் அருகே தரையில் விழுந்தது.
இப்படி அவர் செய்யக் காரணம் தான் இறந்துவிட்டதாகப் பதியப்பட்டு விட்டால் நிதி மோசடி வழக்குகளிலிருந்து தப்பிக்கலாம் என்பதற்காக. ஆனால் அவர் போலியாக விடுத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து அவரது விமானத்திற்கு உதவி செய்ய இராணுவ விமானம் ஒன்று விரைந்து வந்தது. அவர்கள் அந்த விமானத்தின் அருகி்ல் வந்து பார்த்தபோது விமானத்தின் கதவு திறந்த நிலையில் இருப்பதை அறிந்தனர். எனினும் விபத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் அலபாமா நகரில் ஒருவர் கால் முட்டியில் காயத்துடன் தனது ஓட்டுநர் உரிமத்தைக் காண்பித்து தனக்கு உதவி தேவை என்று காவலர்களிடம் கோரினார். ஓட்டுநர் உரிமத்தி்ல் ஷ்ரன்கர் என்று அவர் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது. தான் ஒரு விபத்தில் அடிபட்டதாகக் கூறிய அவரை காவலர்கள் ஒரு விடுதியில் தங்க வைத்தனர். சற்று நேரத்திற்குள் அலபாமா காவலர்களுக்கு போலி விமான விபத்து தகவல் வந்து சேர்ந்தது. விடுதிக்கு வந்து ஷ்ரன்கரைத் தேடியபோது அவர் தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது.