Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இராக்கில் குண்டு வெடித்து 25 பேர் பலி!

Published on: திங்கள், 23 மார்ச், 2009 // , , , , ,
வடக்கு இராக்கில் உள்ள தியாலா மாகாணத்தில் படை குண்டு வெடித்து 25 பேர் பலியானார்கள். 40க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

தியாலா மாகாணத்தில் உள்ள ஜலாவ்லா என்னும் இடத்தில் மரண வீட்டில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது. இது தற்கொலைக் குண்டு வெடிப்பாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது. மேலும் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அங்கோலா-போப்., வரவேற்பு கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி!

கத்தோலிக்க மத குருவான போப்பாண்டவர் 16-வது பெனடிக்ட், ஆப்பிரிக்க நாடான அங்கோலாவுக்கு சென்றுள்ளார். அவரை வரவேற்க செயண்ட் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அவரைப் பார்ப்பதற்காக மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் போப்பாண்டவரை அருகில் சென்று பார்க்க ஆசைப்பட்டனர். பலர் முண்டியடித்துச் சென்றதால் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கிய பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மிதித்தபடி மற்றவர்கள் சென்றனர். இந்த நெரிசலில் சிக்கி 2 பேர் பலியானார்கள், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யாததால் நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாலு,பாஸ்வானுக்கெதிராக வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை-காங்கிரஸ்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப்பொவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனில் சர்மா தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக ஐ.மு. கூட்டனி அரசை வெற்றிகரமாக செயல்படுத்த உதவியதற்க்கு நன்றிக்கடனாக, இந்த இரு தலைவர்களையும் எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சுழல் பந்து வீச்சாளர் பில் ஹாரிஸ் அபாரமாக பந்து வீசி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் எடுத்தார். முன்னதா ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 422 ஒட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அதன் ஆல் ரவுண்டர் ஜான்ஸன் அசத்தலாக ஆடி 123 ஒட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

விஜய ராஜேந்தர் அதிமுகவிற்கு பிரச்சாரம்?

ஒவ்வொரு தேர்தலிலும் அந்தர் பல்டி அடித்துக் கொண்டிருக்கும் விஜய ராஜேந்தர் அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்ய இருக்கிறாராம். தனக்கும், விஜய காந்திற்கும் ஆகாத நிலையில், ஒரு வேளை விஜய காந்த் திமுக கூட்டணியில் இணைந்தால், தனக்கு பெரும் சங்கடமாக இருக்கும் என்றும், இதற்கு அதிமுகவிற்கு ஆதரவு பிரச்சாரம் செய்வதே மேல் என்று நினைப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஜெ சம்மதிப்பார் என்றே தெரிகிறது.

திமுகவிற்கு ஆதரவாக S.Ve. சேகர் பிரச்சாரம்

அதிமுகவில் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள S.Ve. சேகர், திமுகவிற்கு ஆதரவாக வருகிற மககளவை தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன், அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விடுவார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அவர் விரைவில் அதிமுகவை விட்டு நீக்கப்படுவார் என அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபத்தில் அவர் தென் இந்திய பிராமணர் கூட்டனி என்ற அமைப்பை ஆரப்பித்து பிராமணர்களுக்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டது நினைவிருக்கலாம்.

லட்ச ரூபாய் நானோ கார் இன்று முறைப்படி அறிமுகம்!

லட்ச ரூபாய் நானோ கார் இன்று முறைப்படி அறிமுகம் ஆகிறது.

மூன்று மாடல்களில் வெளியாகும் நானோ கார்களில், டீலர்களுக்கு சப்ளை செய்யப்படும் அடிப்படை மாடலின் விலை ரூ.1 லட்சம். கமிஷன் மற்றும் வரிகள் கூடுதலாக ரூ.20,000 வரை ஆகலாம்.

உலக நாடுகள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், நானோ காருக்கு வரவேற்பு உள்ளது. எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு நானோ காரை ஏற்றுமதி செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

நானோ வருகையைத் தொடர்ந்து அதற்குப் போட்டியாக பஜாஜ் நிறுவனம் 2011ல் தனது ரூ.1.25 லட்சம் காரை வெளியிட தயாராகி வருகிறது.

அமெரிக்காவில் விமான விபத்து 16 பேர் பலி!

அமெரிக்காவின் வடமாநிலமான மோன்டானாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 16 பயணிகள் கொல்லப் பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

பட்டே விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கும் போது அருகில் இருந்த கல்லறைத் தோட்டத்தில் விமானம் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆகாய சுற்றுலா சென்ற விமானமாக இது இருக்கக் கூடும் என்று முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

ஜப்பானில் கார்கோ விமானம் நொறுங்கி விழுந்தது

பெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கார்கோ விமானம் ஒன்று டோக்கியோ அருகே நொறுங்கி விழுந்தது. அதில் பயணித்த இருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் குவாங்சோ விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நாரிடா விமான நிலையத்திற்கு இந்த விமானம் வந்து கொண்டிருந்த போது நாரிடாவில் வீசிய வேகமான காற்றால் இந்த விமானம் நொறுங்கி விழுந்து தீபிடித்ததாகவும், தீயை அணைக்க அரை மணி நேரத்திற்கு மேல் ஆனதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவைச் சார்ந்த விமான ஓட்டியும், துணை ஓட்டியும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டனர். ஆனால் இருவரும் இறந்துவிட்டதாக உறுதி செய்யப் பட்டது.

வருண் குற்றவாளி : தேர்தல் ஆணையம்

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வருண் குற்றவாளி என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக் கிழமை இரவு அறிவித்தது. பாரதீய ஜனதா கட்சி வருணை தேர்தலில் நிறுத்தக் கூடாது என்றும் அது உத்தரவிட்டுள்ளது.

29 வயதான வருண் தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்து அது தொடர்பாக நேற்று 10 பக்க உத்தரவை வெளியிட்டது. வருணின் பேச்சு மிகவும் இழிவானது என்றும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக சன்டையை மூட்டிவிடும் ஆபத்தானது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மத உணர்வைப் புண்படுத்தியவர் பொதுத்தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்றும் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தால் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப் படாதவரை அவரை தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர் என அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டம் இடம் அளிக்கவில்லை எனவும், பாரதீய ஜனதா கட்சி வரும் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியி இவருக்கு இடம் அளிக்கக் கூடாது என தன்னுடைய எதிர்பார்ப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது

சமாஜ்வாதி தலைவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து!

சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராஜா பையா என்றழைக்கப் படும் ராகுராஜ் பிரதாப் சிங் பயணம் செய்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று ஞாயிற்றுக் கிழமை இரவு விபத்துக்குள்ளானது. அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

அலகாபாத் அருகில் பிரதாப்கர் மாவட்டத்தில் ஹத்கவான் எனும் நகர் அருகே நெடுஞ்சாலையில் இந்த ஹெலிகாப்டர் விழுந்தது. அதில் பயணம் செய்த பிரதாப் சிங்கும் அவரது பயிற்சாளர் புட்டோவும் காயமுற்றனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். முன்னாள் அமைச்சாரன சிங்குக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது குடும்பத்தினரும் உதவியாளர்களும் இந்த ஹெலிகாப்டர் விபத்தை மறைப்பதாக் கூறப்படுகிறது. அவரது உதவியாளரை செய்தியாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, ஹெலிகாப்டர் விபத்து எதுவும் இல்லை எனவும், பிரதாப் சிங் அகமதாபாத் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாகக் கூறினார்.

ஆனால் காவல்துறை உயர் அதிகாரி இவர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்றதாகக் கூறினார். இந்த ஹெலிகாப்டர் ராஜா பையாவுக்குச் சொந்தமானதாக இருக்கக் கூடும் என்றும், ஹெலிகாப்டரை இயக்கத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா என ஆய்வு நடப்பதாகவும், உரிய உரிமம் இல்லையெனில் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் உத்திரப் பிரதேச காவல் துறை இயக்குநர் பிரிஜ் லால் செய்தியாளர்களிடம் கூறினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!