Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சென்னை விமானநிலையத்தில் இரண்டாவது ஓடுதளம் அமைக்கும் பணி

Published on: வியாழன், 5 மார்ச், 2009 // , , , , , , ,
சென்னை விமான நிலையத்தை 1,808 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. அதிநவீன வசதிகள் கொண்ட புதிய உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனைய விரிவாக்கம், புதிய ஓடுபாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.


இந்த விரிவாக்க திட்டங்களுக்காக தமிழக அரசு இலவசமாக தருவதாக அறிவித்த 1,059 ஏக்கர் நிலத்தில், தற்போது 120 ஏக்கர் நிலம் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த இடத்தில், அடையாறு ஆற்றின் மேல் இரண்டாவது ஓடுதளம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆற்றின் மேற்பகுதியில் நவீன தொழில் நுட்பத்துடன் இரண்டாவது ஓடுதளம் அமைகிறது. தற்போது, கெருகம்பாக்கம் பகுதியில் ஓடுதளம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளமான இடங்களில் மண்ணை கொட்டி சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

சிறையில் தோண்டத் தோண்ட செல்பேசிகள்

புதுவை மாநிலம் காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இதில் உள்ள 276 கைதிகளில் 5 பேர் பெண்கள். 79 பேர் தண்டனைக் கைதிகளாகவும், மற்றவர்கள் விசாரணைக் கைதிகளாவும் உள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஆய்வில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியொன்றில் கழிவறைத் தொட்டி அருகில் ஒரு வித்தியாசமான பொருள் புதைந்த நிலையில் இருந்தது தெரிய வந்து சோதனை செய்த போது அங்கு செல்பேசியொன்று கைப்பற்றப்பட்டது.


இதையடுத்து அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கழிவறைத் தொட்டி அருகில் தோண்டத் தோண்ட செல்பேசிகளாக வந்தன. ஒன்பது செல்பேசிகள், 18 மின்கலன்கள், மூன்று மின்னிணைப்புக்கருவிகள், ஒரு எண் அட்டை கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு பணிகள், கண்காணிப்பு ஒளிப்படக்கருவி செல்பேசி மின்னணுத்தடைக் கருவி உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ளும் திட்டத்திற்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பாஜக பிரமுகரின் மிரட்டலால் தூக்குப்போட்டு தற்கொலை

கேசவ் கிசான் ஜக்தாப் என்பது அவர் பெயர். அவருடைய மகன் குணாலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்களுள் ஒருவரான காசிநாத் கோகட்டே என்பவரின் மகளுடன் காதல் தொடர்பு இருந்தது. காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓடிவிட, பாஜக தலைவர் காசிநாத்தின் ஆதரவாளர்கள் கேசவ் வீட்டுக்குச் சென்று தகராறு செய்து, பின்விளைவுகள் குறித்து கடுமையாக எச்சரித்ததாகவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பயந்த 45 வயது கேசவ் கிசான் கடந்த ஞாயிறன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவர் மனைவி சங்கீதா அளித்த புகாரின் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். என்றாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இச்சம்பவம் அவுரங்காபாத்தில் நிகழ்ந்துள்ளது.

இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக, இந்தியாவை சம்பந்தபடுத்தி வரும் செய்திகளுக்கு, பாக். மறுப்பு

Published on: //
பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக இந்தியாவை சம்பந்தபடுத்தி வந்த செய்திகளுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக, உள்துறை அமைச்சின் தலைமை அதிகாரி, ரகுமான் மாலிக் கூறுகையில், இந்தியாவை சம்பந்தபடுத்தி வரும் செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

'Slum Dog' சிறு நாயகன் வீடு இடிப்பு.

ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படத்தில் சிறுவயது சலீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் அஸ்ஹருத்தீன் முஹம்மத் இஸ்மாயில். பாந்த்ரா கரீப் நகரின் சேரியில் ஒரு குடிசையில் வசித்து வந்தான். அனுமதிபெறாமல் கட்டிய குடிசை என்ற வகையில் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க பம்பாய் மாநகராட்சி இருவாரங்களுக்கு முன் இடித்துத் தள்ளிய 200 குடிசைகளுள் அஸ்ஹருத்தீன் குடிசையும் ஒன்று.

அதன்பிறகு அவர்கள் தார்ப்பாலினால் தற்காலிக கூடாரம் அடித்து தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், மாநகராட்சியால் அதுவும் விரைவில் அகற்றப்படலாம் என்று தெரிகிறது. பெருநகர குடிநீர்க் குழாய்களை ஒட்டி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்ற உயர்நீதிமன்றம் அண்மையில் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், அப்படத்தில் நடித்த சிறுவர்களுக்கு குடியிருப்பு வழங்குவதாக படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்த செய்தி என்ன ஆனது என்று தெரியவில்லை

புதிய தலைமை தேர்தல் ஆணையர் மீது புதிய வழக்கு

நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நவீன்சாவ்லா ஏப்ரல் 20ம் தேதி பதவியேற்கிறார். இது தொடர்பாக குடியரசுத்தலைவர் அளித்த ஒப்புதல், சட்ட விவகாரங்கள் துறை செயலருக்கு அனுப்பப்படும். அதன்பின், இதை அரசிதழில் வெளியிட சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்யும். இதன் மூலம் நடக்கவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலிலிருந்து (ஏப்ரல் 20 முதல்) இவர் பொறுப்பேற்பார்.

இதற்கிடையே, நவீன் சாவ்லாவை தலைமை தேர்தல் ஆணையராக நியமித்தது துரதிருஷ்டமானது என, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. பா ஜ க பொதுச் செயலர் அருண்ஜெட்லி "தான் பாரபட்சமற்ற நபர் என்பதை சாவ்லா நிரூபிக்க வேண்டும். தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, தன் குடும்பத்தினரால் நடத்தப்படும் அரசு சார்பற்ற அமைப்புக்கு காங்கிரஸ் எம்.பி.,க்களிடம் இருந்து நிதியுதவி பெற்றது போன்ற குற்றச்சாட்டுக்கள் சாவ்லா மீது சுமத்தப்பட்டுள்ளன' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை வரும் 20ம் தேதி நடக்கும் என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்
எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இரண்டு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் உட்பட ஐந்து பேர் அடங்கிய குழுவால், தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரையை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளாக பதவி வகித்தவர்களை மட்டுமின்றி, பிரபலமான வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள், உச்ச; உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும். அதுபற்றி பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசியல் சட்டத்தின் 324வது பிரிவு மற்றும் துணைப் பிரிவு 5ன்படி, தேர்தல் ஆணையரை நீக்கும்படி, தலைமை தேர்தல் ஆணையர் பரிந்துரை செய்யலாம். அந்த அடிப்படையில்தான் நவீன் சாவ்லாவை நீக்கும்படி கோபாலசாமி பரிந்துரை செய்துள்ளார். எனவே, நவீன் சாவ்லாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
என்று கோரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வங்கதேசம் சுற்றுப்பயணம் தள்ளிவைப்பு ?

Published on: //
பாகிஸ்தானில் சில தினங்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் வங்கதேச சுற்றுப்பயனம் கேள்விகுறியாக உள்ளது. இது குறித்து அரசு செய்தியாளர் கூறுகையில், பாகிஸ்தானின் சுற்றுபயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் முடிந்து விட்ட நிலையில், சுற்றுபயணம் தொடர்வது சம்பந்தமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அனைத்துலக கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக குறிப்பிட்டார்.

இதற்கிடையே, பாக் மற்றும் இந்தியா நாடுகளில் 2011 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட், பாதுகாப்பு காரணங்களினால் வேறு நாடுகளுக்கு மாற கூடிய சூழ்நிலையில், ஆஸ்திரேலியா, போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழருக்காக உண்ணாவிரதம் -ஜெயலலிதா அறிவிப்பு

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மார்ச் 10ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அதிமுக தலைவி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும், வருகிற 10-ந்தேதி அதிமுக சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். மற்ற மாவட்டத் தலை நகரங்களில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப் போராட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். அதில் முதலில் எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு நிதியை அளித்து தொடங்கி வைக்க உள்ளேன். அந்தந்த மாவட்டங்களில் வைக்கப்படும் உண்டியலில் செலுத்தப்படும் நிதிகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் பின்னர் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


என்று கூறியுள்ளார்
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!