புதிய தலைமை தேர்தல் ஆணையர் மீது புதிய வழக்கு
நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நவீன்சாவ்லா ஏப்ரல் 20ம் தேதி பதவியேற்கிறார். இது தொடர்பாக குடியரசுத்தலைவர் அளித்த ஒப்புதல், சட்ட விவகாரங்கள் துறை செயலருக்கு அனுப்பப்படும். அதன்பின், இதை அரசிதழில் வெளியிட சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்யும். இதன் மூலம் நடக்கவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலிலிருந்து (ஏப்ரல் 20 முதல்) இவர் பொறுப்பேற்பார்.
இதற்கிடையே, நவீன் சாவ்லாவை தலைமை தேர்தல் ஆணையராக நியமித்தது துரதிருஷ்டமானது என, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. பா ஜ க பொதுச் செயலர் அருண்ஜெட்லி "தான் பாரபட்சமற்ற நபர் என்பதை சாவ்லா நிரூபிக்க வேண்டும். தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, தன் குடும்பத்தினரால் நடத்தப்படும் அரசு சார்பற்ற அமைப்புக்கு காங்கிரஸ் எம்.பி.,க்களிடம் இருந்து நிதியுதவி பெற்றது போன்ற குற்றச்சாட்டுக்கள் சாவ்லா மீது சுமத்தப்பட்டுள்ளன' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை வரும் 20ம் தேதி நடக்கும் என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்
எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இரண்டு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் உட்பட ஐந்து பேர் அடங்கிய குழுவால், தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரையை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளாக பதவி வகித்தவர்களை மட்டுமின்றி, பிரபலமான வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள், உச்ச; உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும். அதுபற்றி பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசியல் சட்டத்தின் 324வது பிரிவு மற்றும் துணைப் பிரிவு 5ன்படி, தேர்தல் ஆணையரை நீக்கும்படி, தலைமை தேர்தல் ஆணையர் பரிந்துரை செய்யலாம். அந்த அடிப்படையில்தான் நவீன் சாவ்லாவை நீக்கும்படி கோபாலசாமி பரிந்துரை செய்துள்ளார். எனவே, நவீன் சாவ்லாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.என்று கோரப்பட்டுள்ளது.
0 comments