Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாகிஸ்தான் மரியாட் நட்சத்திர விடுதியில் தீ விபத்து!

Published on: வியாழன், 26 பிப்ரவரி, 2009 // , ,
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மரியாட் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.


தீ விபத்தில் சிக்கி 9 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்தாண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மரியாட் விடுதியின் மீது மோதச் செய்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதில் அயல்நாட்டினர் உட்பட 55 பேர் உயிரிழந்தனர்.


தற்கொலைத் தாக்குதல் காரணமாக கடுமையாகச் சேதமடைந்த மரியாட் நட்சத்திர விடுதி 3 மாதங்களுக்கு பின் மீண்டும் செயல்படத் துவங்கிய நிலையில், தற்போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் கருணாநிதி ராம.கோபாலன் சந்திப்பு

முதல்வர் கருணாநிதியை, இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் சந்தித்துப் பேசினார். முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரத முடிவைக் கைவிட வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.

கலைஞரிடம் நலம் விசாரித்த ராம. கோபாலன், வக்கீல்கள் போலீஸாருக்கிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக உண்ணாவிரதம் இருப்பேன் என்ற அறிவிப்பை கைவிட வேண்டும். உங்களது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சாலை விபத்துகளில் 22ஆயிரத்துக்கும் அதிகமான மரணம்!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 2004 மற்றும் 2006 ஆண்டுகளுக்கிடையில் 22, 841 பேர் மரணமடைந்ததாக மாநிலங்களவையில் இன்று தெரிவிக்கப் பட்டது.

கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து இணை அமைச்சர் முனியப்பா இதனைத் தெரிவித்தார். 2004ஆம் ஆண்டு 6, 438 பேரும், 2005 ஆம் ஆண்டு 8,090 பேரும், 2006 ஆம் ஆண்டு 8,313 பேரும் மரணமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி ஏற்பட்ட சாலை விபத்துகளில் இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 83, 937 பேர் காயமுற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டு தேசிய சாலைப் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றதென்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு உரிமம் அளிக்கப்படக் கூடாது என்று அப்போது முடிவெடுக்கப் பட்டதாகவும் அவர் கூறினார். அவ்வாறு உரிமம் வழங்கப்படவில்லை என்று உறுதி செய்யுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் போக்குவரத்துச் செயலாளர்களும் 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேட்டுக் கொள்ளப் பட்டார்கள் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமங்களை மறுபரிசீலனை செய்யுமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

யாஹூ நிறுவனம் கைப்பெட்டியை மூடுகிறது!




உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கோப்புகளைச் சேமித்துக் கொள்ளும் சேவையான யாஹூ கைப்பெட்டி (Yahoo! Breifcase) சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. இலவசமாகவும் கட்டணம் பெற்றும் இச்சேவையை வழங்கி வந்த யாஹூ நிறுவனம் வரும் மார்ச்சு மாதம் 30ஆம் நாளுடன் இந்தச் சேவையை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாகவும், அதற்கு முன் வாடிக்கையாளர்கள் தங்கள் கோப்புகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளக் கோரியும் வாடிக்கையாளர்களுக்கு மின் அஞ்சல்களை அனுப்பி உள்ளது.

கட்டணம் செலுத்தி இச்சேவையைப் பெற்றவர்கள் தங்கள் கணக்குகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறும், மிகுதியாகச் செலுத்தப் பட்டிருந்தால் திருப்பித் தரப்படும் என்றும் கூறியுள்ளது.

யாஹூ மின் அஞ்சல் சேவை எல்லையற்ற சேமிப்பு வசதியைத் தருவதாலும் Flickr போட்டோ மற்றும் வீடியோ சேமிப்பு வசதிகளைத் தருவதாலும் கைப்பெட்டிச் சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

வழக்குரைஞர்கள் காவலர் மோதல் விசாரிக்க உச்சநீதிமன்றக் குழு!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 19ஆம் தேதி காவல்துறையினருக்கும் வழக்குரைஞர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன் இடைக்கால விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் வழங்கவும் கோரியுள்ளது.

காவல்துறையின் அத்துமீறல் குறித்து விசாரிக்கம் வேளை, நீதிமன்றத்திற்குள் காவலர்களை நுழைய உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது குறித்து இக்குழு ஆய்வு செய்யும் எனவும் கூறப்படுகிறது.

ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, குல்சாருக்கு தங்கப்பதக்கம் கேரள அரசு முடிவு

ஆஸ்கார் விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒலிக் கலவை நிபுணர் ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

நேற்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஆஸ்கார் விருதை வென்ற மூவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடத்தி தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.

மூவருக்கும் வசதியான ஒரு நாளில் இந்தப் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அச்சுதானந்தன் தெரிவித்தார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!