சாலை விபத்துகளில் 22ஆயிரத்துக்கும் அதிகமான மரணம்!
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 2004 மற்றும் 2006 ஆண்டுகளுக்கிடையில் 22, 841 பேர் மரணமடைந்ததாக மாநிலங்களவையில் இன்று தெரிவிக்கப் பட்டது.
கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து இணை அமைச்சர் முனியப்பா இதனைத் தெரிவித்தார். 2004ஆம் ஆண்டு 6, 438 பேரும், 2005 ஆம் ஆண்டு 8,090 பேரும், 2006 ஆம் ஆண்டு 8,313 பேரும் மரணமடைந்ததாக அவர் தெரிவித்தார்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி ஏற்பட்ட சாலை விபத்துகளில் இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 83, 937 பேர் காயமுற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
2004ஆம் ஆண்டு தேசிய சாலைப் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றதென்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு உரிமம் அளிக்கப்படக் கூடாது என்று அப்போது முடிவெடுக்கப் பட்டதாகவும் அவர் கூறினார். அவ்வாறு உரிமம் வழங்கப்படவில்லை என்று உறுதி செய்யுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் போக்குவரத்துச் செயலாளர்களும் 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேட்டுக் கொள்ளப் பட்டார்கள் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமங்களை மறுபரிசீலனை செய்யுமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
0 comments