"ஒன்றுபடாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்" - கருணாநிதி
Published on: திங்கள், 23 பிப்ரவரி, 2009 //
அரசியல்,
ஈழப்பிரசினை,
கருணாநிதி,
தமிழகம்,
Eelam,
Karunanidhi,
Tamilnadu
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று மாலை வெளியிட்ட உருக்கமான அறிக்கையில் வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் இணக்கமாகச் செல்லும்படி உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலமைச்சர் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் துவங்கிய அறவழிக்கிளர்ச்சியில் தாங்களும் ஓரணியில் வந்து நிற்பதாகக் கூறிவிட்டு ஆரம்பத்திலேயே அந்த அணியைச் சிதைக்க, இலங்கைத் தமிழர் பிரச்னையை தங்கள் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள இரண்டு, மூன்று நண்பர்கள் ஈடுபட்டதை தமிழ்நாடு நன்கறியும். திமுக காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகளுக்கு அதில் தொடர்பு இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு தங்களுக்கென தனிவழி வகுத்துக் கொண்டவர்கள்.
அந்த நண்பர்களுக்கு இப்போது இலங்கையில் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல. அந்த கோஷத்தை வைத்து தமிழகத்தில் தங்கள் அரசியலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்.அதனால் தான், தி.மு.க., - காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டணியை உடைப்பதற்கு மக்களிடத்தில் தவறான பிரசாரங்களைச் செய்தும், யார் தமிழகத்தில் எந்தவொரு காரியத்திற்காக அமைதியாக கிளர்ச்சி நடத்தினாலும், அங்கே போய் புகுந்துகொண்டு அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, அதை பூதாகாரமாக ஆக்கி, திமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று கனவு காணுகின்றனர்.
எதிர்பாராத விதமாக திடீரென துருதிர்ஷ்டவசமாக வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் அவர்களுக்குப் பிரதான ஆயுதமாகக் கிடைத்திருக்கிறது.
அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு, இன்னும் தையல் பிரிக்காத நிலையில், தினசரி உடல்நலிவோடு மருத்துவமனையில் இருக்கிற என் மனம் நோகும்படி, என்னென்ன காரியங்களை இந்த ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடப்படுகின்றன என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். இதற்கு வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் பலியாகிவிடக்கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள். அவர்கள் தங்களுக்கிடையே இடையே ஏற்பட்டுள்ள கசப்பை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நான் தொடர்ந்து வேண்டிக் கொண்டுவருகிறேன். இந்த அரசு அடித்தட்டிலே உள்ள ஏழை எளிய மக்களுக்கு எல்லா வகையான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்பது தான்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் செய்யும் முயற்சிகளுக்கு அறிந்தோ, அறியாமலோ பலியாகிவிடக்கூடாது. இரு தரப்பும் இந்த அரசில் சகோதரர்கள் போல ஒன்றுபட்டு நற்பணி புரிய வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், பல நீதிபதிகளும் ஒரு சுமுகமான சூழ்நிலை இந்த இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்களை மீண்டும் போராட தூண்டிக் கொண்டிருக்கும் சிலர் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக் கும்பலைப் பற்றி கவலைப்படாமல் ஒன்றுபடுங்கள்; ஜனநாயக நெறிகளை உயர்வடையச் செய்ய ஒத்துழையுங்கள்; நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்க ஆர அமர அமர்ந்து பேசி நல்ல முடிவுகளை எடுப்போம்.அப்படி ஒன்றுபட முடியாவிட்டால், நீங்கள் ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில், மருத்துவமனையில் இருக்கிற நான் உண்ணாநோன்பு இருப்பதாக முடிவு செய்திருக்கிறேன்.அந்த முடிவை நான் மேற்கொள்வதா, இல்லையா என்பதை நீங்கள் அளிக்க இருக்கிற விடையின் மூலம் தெளிவு பிறந்து, அதற்கான தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.
முதலமைச்சர் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.