நெருக்கடியில் டிராவல்ஸ் நிறுவனங்கள்!
நெருக்கடியில் டிராவல்ஸ் நிறுவனங்கள்!
கோவை, பிப். 21: சர்வதேச நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தகவல் தொழில் நுட்ப (ஐடி) நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு வழங்கி வந்த இலவச வாகன போக்குவரத்து வசதியை ரத்து செய்ய துவங்கியுள்ளது. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு கார்களை இயக்கி வந்த டிராவல்ஸ் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா வங்கிகளில் ஏற்பட்ட சரிவு, பொருளாதார மந்த நிலைக்கு காரணமாக அமைந்தது. இதனால் அமெரிக்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டன. அமெரிக்கா ஐடி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் பணிகளை குறைத்து வருகின்றன. இதனால் கோவையில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான பணி வரத்து கடுமையாகப் பாதித்துள்ளன. இப் பிரச்னையில் இருந்து பெரிய நிறுவனங்களும் தப்பவில்லை.
ஆள்குறைப்பு, அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஐடி நிறுவனங்கள் மேற்கொள்ளத் துவங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஊழியர்களுக்கு வழங்கி வந்த இலவச வாகனப் போக்குவரத்து வசதியை பல நிறுவனங்கள் ரத்து செய்துள்ளது.
கோவை சரவணம்பட்டி, ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை வீட்டில் இருந்து அழைத்து வரவும், பணி முடிந்தவுடன் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடும் வேலையில் ஏராளமான டிராவல்ஸ் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஐடி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இப் பணியை டிராவல்ஸ் நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தன.
இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்த சில ஐடி நிறுவனங்கள், தங்களுக்கு வாகன போக்குவரத்து வசதி தேவையில்லை என அதிரடியாக அறிவித்துள்ளன. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் டிராவல்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள்.
"கடந்த ஒரு மாதமாகவே கார்களை வாடகைக்கு எடுப்பதை ஐடி நிறுவனங்கள் வெகுவாகக் குறைத்துவிட்டன. ஐடி நிறுவனங்களுக்கு ஓட்டுவதற்காக வாங்கப்பட்ட சொகுசு கார்களையும், வேன்களையும் வெளி வாடகைக்கு இயக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்' என்கிறார் சரவணம்பட்டி உள்ள தனியார் ஐடி நிறுவனங்களுக்கு கார்களை இயக்கும் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன்.
"ஐடி நிறுவனங்களுக்காக கார்களை ஓட்டும்போது நல்ல லாபம் கிடைத்தது. தற்போது கார்களை வாடகைக்கு எடுப்பதை ஐடி நிறுவனங்கள் குறைத்துக் கொண்டிருப்பதால் கிடைக்கும் லாபம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
ஐடி நிறுவனங்களுக்காக இயக்கலாம் என்ற எண்ணத்தில் வங்கிகளில் கடன் பெற்று, கார்களை வாங்கிய டிராவல்ஸ் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
ஓராண்டுக்குள் ஐடி நிறுவனங்களின் நிலையை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னரே ஐடி நிறுவனங்களை நம்பி இருக்கும் டிராவல்ஸ் தொழிலும் உயிர் பெறும்' என்றார் மற்றொரு தனியார் டிராவல்ஸ் நிறுவன அலுவலர் கண்ணன்.
0 comments