Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சீனா: நிலக்கரிச் சுரங்கம் வெடித்து 74 பேர் பலி

Published on: ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009 // , , , , ,
சீனாவின் சான்க்ஸி மாகாணத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட பெருவெடிப்பில் சிக்கி 74 பேர் பலியாகியுள்ளனர். 114 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலக்கரிச் சுரங்கத்தில் சுமார் 400க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ, பிரதமர் வென் ஜிபாவோ மீட்புப்பணிகளை முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஒரு வருட காலத்தில் இது பெருவிபத்தாகக் கருதப்படுகிறது.

இந்தியா: வாகனம் ஓட்டும்போது தொலைபேசினால் ரூ.5000 அபராதம்

வாகனம் ஓட்டும் போதும் கைபேசியில் பேசுவது அதிகரித்து வருவதால ஏராளமான விபத்துகள் நடக்கின்றன; உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வண்டி ஓட்டும் போது தொலை பேசினால், முதல் முறையாக 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை அதே குற்றத்தைச் செய்தால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை இதே குற்றம் தொடர்ந்தால் 5,000 ரூபாய் அபராதத்தோடு, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்ற சட்டத்தை மத்திய அரசு யோசித்து வருகிறது.


இதற்கு வகை செய்யும் விதமாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குழு ஏற்கனவே இதற்கு பரிந்துரை அளித்துள்ள நிலையில், சட்டத்தைக் கடுமையாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கார் ஓட்டும் போது தொலைபேசினால், சில மாநிலங்களில் 100ல் இருந்து 300 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகை சிறிதாக இருப்பதால், அதை யாரும் பொருட்படுத்துவது இல்லை. இதன் காரணமாகவே, சட்டத்தைக் கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஒரிசாவில் வேன் மீது இரயில் மோதி 13 பேர் பலி

ஒரிசாவில் கல்யாண நிகழ்விற்குச் சென்று கொண்டிருந்த வேன் மீது இரயில் மோதி 13 பேர் பலியானார்கள்.

ஒரிசா மாநிலம் பார்கர் நகருக்கு அருகில் ஆளில்லா கிராசிங்கில் இன்று மாலை 4 மணி அளவில் இச்சம்பவம் நடந்தது. மஹிந்திரா பொலிரோ வாகனத்தில் கல்யாண நிகழ்விற்குச் சென்ற மணப்பெண் உள்பட 13 பேர் பலியானார்கள். மேலும் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட அருகில் இருந்த கிராம மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், அந்த இரயிலை அங்கிருந்து விட மறுத்து நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரிசாவில் அடுத்தடுத்து 10 நாட்களுக்குள் நடக்கும் இரண்டாவது இரயில் விபத்து இது என்பது குறிப்பிடத் தக்கது.

ராஜ் தாக்கரேவை கைது செய்ய நீதிமன்ற ஆணை

வட இந்தியாவில் கொண்டாடப்படும் 'சாட்' என்னும் திருவிழாவைப் பற்றி தவறான கருத்து கூறியதாக, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தக்கரே மீது, முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராஜ் தாக்கரே இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிந்திர குமார் சின்கா, வழக்கை முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றினார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்சூரத், கடந்த டிசம்பர் மாதம் தாக்கரேவுக்கு அறிவிக்கை அனுப்பியிருந்தார். ஆனால், தாக்கரே முன்னிலையாகவில்லை. அதனால் அவருக்கு நீதிபதி கைது ஆணை பிறப்பித்துள்ளார்.

திருச்சியில் புதிய விமானநிலைய முனையம் திறப்பு

திருச்சியில் புதியதாகக் கட்டப்பட்ட விமானநிலைய முனையத்தை நடுவண் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு மத்திய தகவல்-தொழிற்நுட்பத்துறை அமைச்சர் ராஜா தலைமை வகித்தார். ஒருஇலட்சத்து எட்டாயிரம் சதுர அடி பரப்பளவில் இப்புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எட்டாயிரம் சதுர அடி ஓடுபாதையாக உள்ளது. விரைவில் ஓடுதள அளவு பத்தாயிரமாகவும், பின்னர் படிப்படியாக பன்னிரண்டாயிரம் சதுர அடியாகவும் விஸ்தரிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
வளர்ந்துவரும் பெருநகரான திருச்சியில் பிரம்மாண்டமான விமானநிலையம் அமைய அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.

மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் ரகுபதி, தமிழக அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், திருச்சி மக்களவை உறுப்பினர் கணேசன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ்ஸின் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

கோவை சிறையில் கைதிகள் சிறைக்காவலர் இடையே மோதல்

கோவை சிறையில் கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதில் 8 சிறைக்காவலர்கள் உள்பட15 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலசுப்ரமணி, சுப்ரமணியன், செந்தில் குமார் ஆகிய மூன்று சிறைக்காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு இலேசான காயம் என்பதால் புற நோயாளியாகவே சிகிச்சப் பெற்று திரும்பியதாகவும் சிறைக் கண்கானிப்பாளர் கோவிந்தராஜ் கூறினார்.

சிறையில் உள்ள சுமார் 1500 பேருக்கும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் போட்டுக் காட்டியதாகவும், படம் முடிவடைந்தவுடன், அவரவர் செல்லுக்கு உடனே திரும்ப வேண்டும் என்று கூறியதால் ஆத்திரமடைந்த கைதிகள் அவர்களுடை சன்டையில் ஈடுபட்டதாக அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

கைதிகள் சிறையிலிருந்த கம்பு மற்றும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு சிறைக் காவலர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 8 சிறைக்காவர்களும் 7 கைதிகளும் காயமுற்றதாக சிறை தகவல்கள் கூறுகின்றன.

திருப்பூர் மாவட்டம் உதயம்!

தமிழகத்தின் 32ஆவது மாவட்டமாக திருப்பூர் இன்று துவக்கி வைக்கப் பட்டது. இதன் துவக்கவிழா இடுவம்பாளையம் அரசு பள்ளியில் இன்று மாலை 4.00 மணிக்கு நடந்தது. இவ்விழாவிற்கு வருவாய்த்துறை அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்தார். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தைத் துவக்கி வைத்தார்.

முன்னதாக திருப்பூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டார். இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார். திருப்பூர் உருவாக்கத்திற்கு இவர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

அத்வானி பிரதமராக தெலுங்கு தேசம் ஆதரவளிக்காது!

அத்வானி பிரதமராவதற்கு தெலுங்கு தேசம் ஆதரவளிகாது என்று தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்தால் தெலுங்கு தேசம் ஆதரிக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், தமது கட்சி ஒருபோதும் ஆதரிக்காது என்றும், இந்தக் கேள்வியே எழாதும் என்றும் கூறினார். தங்களுடைய கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்குப் பின்போ பாரதீய ஜனதா கட்சியுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு, குஜராத் கலவத்திற்குப் பிறகு பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தங்கள் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்றும் அதனாலேயே ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த முறை வாஜ்பாய் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிமையத்த போது தெலுங்கு தேசக் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்தது குறிப்பிடத் தக்கது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!