Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சிறுநீரக தானம் உடல்நலத்தைப் பாதிக்காது.

சிறுநீரக தானம் உடல்நலனைப் பாதிக்காது என்று மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு சிறுநீரகத்தை தானமளித்தவர்களும் இரு சிறுநீரகம் உடைய மற்றவர்களைப் போலவே வாழ்வைத் தொடரலாம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சிறுநீரகக்கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மற்றும் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் சிறுநீரகதானத்தின் காரணமாக அதிகப்படுவதில்லை என்றும், வயது, பாலினம், பரம்பரை உள்ளிட்ட நோய்வாய்க்காரணிகளில் சிறுநீரகத்தானம் செய்தவர், செய்யாதவர் என்ற பாகுபாடு பாரிய வேறுபாட்டை ஏற்படுத்துவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகவலை பல்கலை.மருத்துவர் ஹசன் இப்ராஹிம் வெளியிட்டுள்ளார். "60 விழுக்காடு சிறுநீரக தானமளித்தவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கிய நிலைகள் சாதாரண பொதுமக்களின் நிலைகளை விடவும் தாழ்ந்துவிடவில்லை" மற்றவர்களைப் போன்ற இயல்பான வாழ்வை தானமளித்தவர்கள் தொடர்வதில் எந்தத் தடையுமில்லை" - என்கிறார் மருத்துவர் இப்ராஹிம்.

நாளை கூடுகிறது தி மு க செயற்குழு.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளநிலையில் தி மு க செயற்குழு நாளை கூடுகிறது.

உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் நாளை கூடும் திமுக செயற்குழுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், நாளைய கூட்டத்திற்கு அவர் தலைமை வகிப்பார் என தெரிகிறது.

நாளை இலங்கை விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என ஊடக உலகில் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்யாணத்தை நிறுத்திய கலெக்டர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது கடம்பர அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா. இவருக்கு 16 வயது. திப்பம்பட்டி அரசினர் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கும், பேதாதம்பட்டியைச் சேர்ந்த துரைவளவன் என்பவருக்கும் நேற்று பேதாதம்பட்டி மணமகன் வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அமுதாவுக்கு தகவல் கிடைத்து. அரசின் சட்டவிதிகளுட்பட்டு மணப்பெண்ணின் வயது ஆகவில்லை என்ற குற்றச்சாட்டினை
யடுத்து மாவட்ட கலெக்டர் அமுதா, இளம் பெண் வெண்ணிலாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த அரூர் டிஎஸ்பி மோகனுக்கு உத்தரவிட்டார்.

இதன் பேரில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரிடம் பேசிய போலீசார் வெண்ணிலாவின் பால்ய திருமணம் சட்ட விரோதமானது எனக் கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

தலைமை தேர்தல் ஆணையரின் பரிந்துரை நிராகரிப்பு

குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை மத்திய அரசு இன்று நிராகரித்தது.

இந்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை நீக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால் சாமி குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு பரிந்துரைக் கடிதம் எழுதியிருந்தார். தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு மாதங்களும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதே அளவு நாட்களும் மீதம் உள்ள நிலையில் கோபால்சாமியின் இக்கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இப்பரிந்துரைக் கடிதத்தை அரசு இன்று நிராகரித்துள்ளது. இதன் மூலம் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இப்பிரச்சனை தொடர்பாக கருத்து கூறிய சட்ட அமைச்சர் பரத்வாஜ், தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பாக அரசின் கொள்கை இருப்பதாகவும், அந்த கொள்கை தொடரும் என்றும் கூறினார். இந்த சர்ச்சை துரதிருஷ்டவசமானது என்று கூறிய அவர் சாவ்லாவின் பணியை இது பாதிக்காது என்றும் கூறினார். கோபால் சாமி தேர்தல் ஆணையாளராகப் பணிபுரிய வேண்டும். அரசியல் கட்சித் தலைவர் போன்றல்ல என்றும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையராக டி.என் சேஷன் இருந்தபோது ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து ஆணையம் சீரமைக்கப்பட்டது. தேர்தல் ஆணையராக ஒருவர் என்ற நிலை மாறி மூன்று தேர்தல் ஆணையர்களும் அவர்களில் ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையர் என்றும் மாற்றியமைக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.

பாண்டிச்சேரியிலும் கல்லூரிகள் மூடல்

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், இந்திய அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தவிர்க்கும் நோக்கில் நேற்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகள் அனைத்தும் காலவரையறையின்றி மூட அரசு உத்தரவிட்டது.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இன்று முதல் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளை காலவரையறையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகவலை புதுச்சேரி கல்லூரி கல்வி இயக்குநர் ஜெயந்த குமார் தெரிவித்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருப்போரையும் விடுதியை விட்டுப் போகச் சொல்லப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!