Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

போதைப் பொருளுடன் காவல்துறை உயர் அதிகாரி கைது

Published on: திங்கள், 26 ஜனவரி, 2009 // , , , , , ,
ஞாயிற்றுக் கிழமை மும்பை தீவிரவாத தடுப்பு காவல் படை (ATS) 12 கிலோ ஹெராயின் வைத்திருந்த ஜம்மு கஷ்மீர் படைப்பிரிவைச் சார்ந்த இந்திய காவல் பணியின்  (IPS) அதிகாரி ஒருவரைக் கைது செய்துள்ளது.

ஷாஜ்ஜி மோகன் என்றறியப்படும் அந்த அதிகாரி திங்கள் கிழமை அதிகாலையில் வடக்கு மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 12 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்ட்ட ஹெராயினின் மதிப்பு இந்திய சந்தையில் 12 இலட்சம் எனவும் வெளிநாட்டுச் சந்தையில் 1கோடியே 20 இலட்சம் எனவும் தீவிரவாத தடுப்புப் படையின் தலைமை அதிகாரி ரகுவன்ஷி கூறினார்.

ஜனவரி 17ஆம் தேதி ஹரியானா காவல்துறையால் 1.500 கிலோ ஹெராயின் கைது செய்யப் பட்ட ராகேஷ் குமார் மற்றும் விக்கி ஓபராய் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மோகன் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து போதைப் பொருள் மட்டுமின்றி மடிக்கணினி ஒன்றும் சில சிடிகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஷஜ்ஜி மோகன் சண்டிகரில் போதைப் பொருள் தடுப்புத் துறையில் தொகுதி இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார். இன்று மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக இவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி இவரை இம்மாதம் 30ஆம் தேதிவரி காவல்துறையின் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.

60ஆவது குடியரசு தினம் - நாடு முழுவதும் கொண்டாட்டம்



இந்தியாவின் 60வது குடியரசு தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லி அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி அஞ்சலி செலுத்தினார். ராஜ்பத்தில் கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது.

இன்று காலை 8.45 மணிக்கு அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில், பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து ராஜ்பத்தில் குடியரசு தின விழா தொடங்கியது. கஜக்ஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நசர்பயேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவரை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் 24 முறை பீரங்கிக் குண்டுகள் முழங்கப்பட்டன.

பின்னர் நாட்டின் பாதுகாப்பிற்காக வீரமரணம் அடைந்த 11 பேருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஹேமந்த் கார்கரேவின் குடும்பத்தினர் உள்பட 11 பேரின் குடும்பத்தினர் இவ்விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறையினரின் அணிவகுப்பு, காவல் துறையினரின் அணிவகுப்பு. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டின் முக்கியத் தலைவர்களும் வெளிநாட்டுத் தலைவர் மற்றும் தூதரக அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலத்த பாதுகாப்பு 
ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. சுமார் 15000 துப்பாக்கி ஏந்திய காவலர்களும் 5000 துணை இராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

தமிழகத் தலைநகர் சென்னையில் மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

தமிழக முதல் கருணாநிதியின் உடல் நலக் குறைவால் அவர் இந்நிகழ்வில் பங்கு பெறவில்லை. அவருக்குப் பதில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு வீர தீரச் செயல் புரிந்தோருக்கு விருதுகளை வழங்கினார்.

வாசகர்களுக்கு இந்நேரம் குழுமம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இஸ்ரேலியப் படையினருக்கு சட்டப் பாதுகாப்பு - ஒல்மர்ட்

சமீபத்தில் காஸா மீது இஸ்ரேல் படையெடுத்து அங்குப் பெருமளவு சேதங்களை விளைவித்தது. இஸ்ரேலியப் படையினர் ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் இருக்கும் குடியிருப்புகளின் மீது சர்வதேசப் போர் நடைமுறைகளை மீறிக் கடும் தாக்குதல் நடத்தியதாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தின.

இதனையடுத்து 'ஹேக்'கில் இருக்கும் பன்னாட்டு நீதிமன்றத்தில் இஸ்ரேலியப் படையினர் மீது போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்போவதாக தொண்டுநிறுவனம் ஒன்று கூறியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் எஹூத் ஒல்மர்ட் அவ்வாறு வழக்குத்தொடுக்கப்பட்டால் அதனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் எந்த ஓர் இஸ்ரேலியப் படையினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டாலும் இஸ்ரேலிய அரசு அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பை அளிக்கும் எனத் தெரிவித்தார்.

சர்வதேசப் போர் நடைமுறைகளின் படி பொதுமக்கள் குடியிருப்புகள் மீது வெண்பாஸ்பரஸ் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது காஸாவில் வெண்பாஸ்பரஸ் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரசு, அதனைப் பொதுமக்கள் மீது வீசவில்லை என மறுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

கஞ்சா பயன்படுத்தல் குற்றம் என பிரிட்டன் மீளறிவிப்பு!

கஞ்சா பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றம் என மீண்டும் பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் போதை அளிக்கும் வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பிரிவில் முன்னதாக கஞ்சா B பிரிவு வேதிப்பொருள் என அறிவிக்கப்பட்டிருந்தது. டோனி பிளேய்ர் பிரதமராக இருந்த போது 2004 ஆம் ஆண்டு கஞ்சா C பிரிவில் நகர்த்தப்பட்டது.

பிரிட்டனின் சட்டப்படி C பிரிவு போதை மருந்துகளை வைத்திருப்பவரை சட்டம் ஒழுங்கு காவலர்கள் அறிவுறுத்த மட்டுமே முடியும். அவர்கள்மீது வழக்குத் தொடுக்கவோ தண்டனை பெற்றுத் தரவோ இயலாது.

தற்போது கஞ்சா B பிரிவு வேதிப் பொருள் என அறிவிக்கப்பட்டிருப்பதால் கஞ்சாவை வைத்திருப்பதோ பயன்படுத்துதலோ குற்றம் என்ற பிரிவில் அடங்கும். கஞ்சாவின் புழக்கம் பிரிட்டிஷ் சமூகத்தில் பெருமளவு அதிகரித்துவிட்டதால் கார்டன் பிரவுன் இந்த அறிவிப்பை அளிக்கப் பரிந்துரை செய்தார்.

இதன்படி முதல்முறை விதி மீறுவோருக்கு எச்சரிக்கையும், அவரே இரண்டாம் முறை பிடிபட்டால் 80 பவுண்டு அபராதமும், மூன்றாம் முறை பிடிபட்டால் சிறைத் தண்டனையும் அளிக்க்கப்படும்.

ஒபாமாவுக்கு வாட்டிகன் கண்டனம்

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியை மீண்டும் அளிக்க முடிவு செய்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வாட்டிகன் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு உலகளாவிய அளவில் அமெரிக்க அரசு நிதி உதவி செய்து வந்தது. இந்த நிதி உதவிக்கு கடந்த புஷ்ஷின் ஆட்சியின் போது தடை விதிக்கப்பட்டது. ஒபாமா பதவியேற்றதும் கடந்த வெள்ளிக் கிழமையன்று இந்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.
 
வாழ்க்யையும் மரணத்தையும் தாங்கள் தீர்மாணிக்க முடியும் என்ற எண்ணும் ஆட்சியாளர்களுக்கு வாட்டிகன் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்தார்.
 
அப்பாவிகள் கொல்லப்படுவதை எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிரான செயல் கருக்கலைப்பு என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

வியட்னாம் படகு விபத்தில் 40 பேர் பலி!

வியட்னாமின் தலைநகர் ஹனோயிலிருந்து தெற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள மத்திய குவாங் பின் பிரதேசத்திலுள்ள கியான் ஆற்றில் நிகழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களுள் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களுமாவர்.

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பொருள்கள் வாங்க அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த படகில் அளவிற்கு அதிகமாக பயணிகள் ஏற்றப் பட்டிருந்தனர். 20 பேர் மட்டுமே பயணம் செய்ய உரிமம் வழங்கப் பட்டிருந்த அப்படகில் 80-ற்கும் அதிகமானோர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. படகு கரையை நெருங்கியபோது விரைவாக படகிலிருந்து இறங்குவதற்காக பெரும்பாலான பயணிகள் முண்டியத்துச் சென்றபோது எதிர்பாராவிதமாக படகு கவிழ்ந்தது.

ஆற்றிலிருந்து இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. அவர்களுள் இரு கர்ப்பிணிகளையும் சேர்த்து 32 பேர் பெண்கள். 36 பேர் காப்பாற்றப் பட்டுள்ளனர். காணாமல் போன மேலும் சிலரைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

முல்லைத் தீவைக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

விடுதலைப்புலிகளின் வசமிருந்த முக்கியப் பகுதியான முல்லைத் தீவைக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. தொலைக்காட்சியி்ல் பேசிய இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முல்லைத்தீவை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தார். விடுதலைப் புலிகள் இப்போது 15 அல்லது 20 கிலோ மீட்டர் பகுதியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்றிய நிலையி்ல் முல்லைத் தீவை இழந்திருப்பது விடுதலைப்புலிகளுக்கு பலத்த அடியாகக் கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பின் முல்லைத் தீவை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது. முல்லைத் தீவு மீட்டுப் பணியில் 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக சனிக்கிழமை இலங்கை இராணுவம் முல்லைத் தீவை நோக்கி வரும்போது கல்மடுக்குளம் அணைக்கட்டைத் தகர்த்தனர். இதில் சுமார் 4000க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!