தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் திருமங்கலம் தொகுதியின் வாக்காளர்களுக்கு பலவிதமான அன்பளிப்புகள் வழங்கப் படுகின்றன.
சில நாட்களுக்கு முன்பு அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை வாக்காளர்களுக்கு விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது. அந்த வரிசையில் இப்போது சாப்பாட்டு இலைக்குக் கீழ் ரூ 2,000 திருநெல்வேலி அல்வா என அன்பளிப்புகள் வழங்கப் படுவதாகத் தெரிகிறது.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருமங்கலம் தொகுதியில் பிரச்சாரம் செய்துவரும் திரு வைகோ, "சாப்பாட்டு இலைக்குக் கீழ் 2,000 ரூபாய் வைக்கப்பட்டு நூதன முறையில் பணம் பட்டுவாடா நடக்கிறது," என்று குற்றம் சாட்டியுள்ளார். "ஆயிரக்கணக்கில் ஆடு, கோழி கறி விருந்துகள் நடத்தப்படுகிறது. அந்த விருந்துகளில் இலைக்குக் கீழ் 2,000 ரூபாய் வைக்கப்படுகிறது. இது ஊழல் பணம் வெள்ளமாக ஓடுவதைக் காட்டுகிறது," என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே திருமங்கலம் நகராட்சி 13-வது வார்டு முன்சீப் கோர்ட் ரோடு பகுதி, ராமச்சந்திரா தடாக ரோடு போன்ற பகுதியில் பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் சில பொருட்கள் வைக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதை அவர்கள் எடுத்துப் பார்த்தபோது 'நூற்றுக்கு நூறு' என்று எழுதப்பட்ட பிளாஸ்டிக் உறைகளில் அரை கிலோ 'திருநெல்வேலி அல்வா' இருந்தது. அதனுடன் திமுக-வின் விளம்பர பிரசுரங்களும் இருந்தன. ஆனால் இதை யார் தங்கள் வீட்டிற்கு முன் போட்டார்கள் என்பது வாக்காளர்களுக்குத் தெரியவில்லை.
இந்நிலையில் 'இலவசத்தை கேலி செய்பவர்கள் எல்லாம் இன்று 'இலை' வசம் ஆனவர்கள்' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். கடந்த வியாழக்கிழமை அன்று தமிழக அரசின் சார்பில் இலவச பொங்கல் பொருட்கள் மற்றும் வேட்டி, சேலை வழங்குவதற்கான துவக்க விழாவில் அவர் பேசினார்.
"பொங்கலை முன்னிட்டு இலவசமாக பொங்கல் பொருட்கள் வழங்குவதை சிலர் கேலி செய்கின்றனர். இப்படி வழங்காவிட்டால் 'நீங்கள் மட்டும் சாப்பிடுகிறீர்கள். ஏழைகள் எதுவும் இல்லாமல் அல்லல்படுகிறார்களே' என்று கேட்பவர்களும் இருக்கின்றனர். இலவசமாகக் கொடுத்தால் நாடு உருப்படுமா? என்று கேட்பவர்களும் இருக்கின்றனர்" என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
ஆனால் தேர்தல் ஆணையம் தடை விதித்ததைத் தொடர்ந்து திருமலங்கலம் தொகுதியில் மட்டும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.