சேவை வரியில் மாற்றம்
சேவை வரியிலிருந்து விலக்கு, 10 ரூபாய் வரை டீசல் விலை குறைப்பு, இந்தியா முழுவதும் சரக்குந்துகள் செல்ல அனுமதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சரக்குந்துகளின் உரிமையாளர்கள் திங்கள் கிழமை முதல் வேலை நிறுத்தத்தி்ல் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய சரக்குந்துகள் மற்றும் சிறிய சரக்குந்துகள் உட்பட சரக்குந்துகள் எதுவும் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் சிறிய சரக்குந்துகள் ஓடவில்லை என்றும் இதனால் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் உள்பட சுமார் 3 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. நாடு முழுவதும் பொங்கல் மற்றும் சங்கராந்தி போன்ற பண்டிகை நாட்கள் அண்மித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு இதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படும்.
இன்று மத்திய அரசு அதிகாரிகளுடன் சரக்குந்து உரிமையாளர்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் சரக்குந்து உரிமையாளர்களின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றான சேவை வரியை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கிளியரிங் முகமையாளர் (Clearing & Forwarding), பணியாள் சேர்ப்பு முகமையாளர்கள் (Manpower Recruitment), சரக்கு கையாளுநர்கள் (Cargo Handling), சரக்கு காப்பாளர்கள் (Cargo storage and Ware housing) மற்றும் இது தொடர்பான சேவை நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் தங்களின் மற்ற கோரி்க்கைகளும் ஏற்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று சரக்குந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
0 comments