Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பா.ஜ.க. அலுவலகத்தில் பணம் மாயம்?

Published on: செவ்வாய், 30 டிசம்பர், 2008 //
பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான பணத்தைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ளவர்கள் எவரேனும் இதனை தவறான வழியில் உபயோகித்திருக்க வேண்டும் அல்லது எடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

கட்சியின் பல்வேறு மாநிலக் கிளைகளிலிருந்தும் அனுப்பப்பட்ட இந்த தொகை தலைமை அலுவலகத்திற்கு வந்து சேரும் முன்போ அல்லது வந்த பின்போ தொலைந்து விட்டது என்று அதன் தலைமை நிலைய அலுவலர்கள் கூறியதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மையானவை அல்ல; அவை மிகைப்படுத்தப் பட்ட செய்திகளே என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார். பா.ஜ.கவின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராமதாஸ் அகர்வால் டெல்லி விரைந்துள்ளார் என்றும், கட்சியின் அனைத்து கணக்குகளும் சரி பார்க்கப்படும் என்றும் கூறப்பட்டது.

கைபர் வழியை பாகிஸ்தான் மூடியது

Published on: //

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படையினருக்கு உணவு மற்றும் இராணுவ தளவாடங்கள் எடுத்துச் செல்லப்படும் பாகிஸ்தானின் கைபர் வழியை பாகிஸ்தான் தற்காலிகமாக மூடியுள்ளது. 70 சதவீதத்திற்கும் அதிகமான பொருள்கள் இந்த வழியாகவே அனுப்பப்பட்டு வந்தன.

கடந்த சில நாட்களாக நேட்டோ படையினருக்கு தளவாடங்கள் எடுத்துச் செல்லப்படும் வாகணங்கள் மீது தாலிபான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி அவற்றை எரித்தது. சில சமயங்களில் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கடத்திச் சென்று விடுகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் தாலிபான் ஆதரவளார்கள் இத்தகைய வாகனங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

செப்டம்பர் மாதம் அமெரிக்க கூட்டுப்படையினர் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சில நாட்கள் பாகிஸ்தான் இந்தப் பாதையை சில நாட்களுக்கு மூடி வைத்திருந்தது. வாகன ஓட்டுநர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி சில நாட்கள் அந்தப் பகுதி வழியே செல்வதைத் தவிர்த்தனர்.

கைபர் வழி அடைக்கப்பட்டதால் பொருள்கள் வருவதற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என நேட்டை படை அதிகாரிகள் கூறினர்.

இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு

Published on: //
கடந்த நான்கு நாட்களாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அரசு அலுவலகங்கள், சிறைக் கூடம், தொலைக்காட்சி நிலையம், மசூதி என்று பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் குண்டுகளை வீசி வருகிறது. இதில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் நேற்று ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ராக்கெட்களை வீசினர். இவை நீண்டதூரம் சென்று இஸ்ரேலின் உள்பகுதியைத் தாக்கியதாகவும் இதில் இராணுவ வீரர் ஒருவர் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. காஸா பகுதியிலிருந்து 23 கி.மீ.தூரத்தில் உள்ள அஷ்துத் எனும் ஊரின் பேருந்து நிலையம் அருகே ஹமாஸ் வீசிய ராக்கெட் விழுந்து ஒரு பெண்மணி இற்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இரு தரப்பினரும் சன்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் இரு தரப்பினருக்கும் தம்முடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

காஸா பகுதி குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சார்கள் இன்று பாரிசில் கூடுகின்றனர். காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்புவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

4ஆம் நாளாகத் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்

Published on: //

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் நான்காவது நாளாக இன்றும் தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது. இன்றைய வான் வெளித் தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதுவரை 350க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 62 பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார். காஸாவைச் சுற்றிலும் இஸ்ரேலிய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை மற்றும் இடப் பற்றாக்குறை காரணமாக பெருங்குழப்பம் நிலவுவதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. இதனையடுத்து காஸாவிலிருந்து மருத்துவ உதவி பெறுவதற்காகவும் உதவிப் பொருள்களை எடுத்துச் செல்லவும் எகிப்து ரபாஹ் எல்லைப் பகுதியில் அனுமதி அளிக்கிறது.

வங்க தேசத்தில் அவாமி லீக் மீண்டும் ஆட்சியமைக்கிறது

Published on: //
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (திங்கள் கிழமை) நடைபெற்ற வங்கதேசத் தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 

எத்தனை இடங்கள் கிடைத்தன என்று இறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், அவாமி லீகும் அவரது கூட்டணிக் கட்சிகளும் மொத்தமுள்ள 300 இடங்களில் 255 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இறுதியான தகவல் எனில் வங்க தேச வரலாற்றில் இத்தகைய வெற்றி இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் தேர்தல்: ஷேக் ஹஸினாவுக்கு வெற்றி வாய்ப்பு!

Published on: //
பங்களாதேஷில் சென்ற திங்களன்று (டிச 29) நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸினாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக இன்னும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஷேக் ஹஸினாவின் கட்சி கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசிய கட்சியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

ஷேக் ஹஸினா 1996லிருந்து 2001 வரை பங்களாதேஷின் பிரதமராக இருந்தவர். இவர் பங்களாதேஷின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளாவார்.

நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளில் அவாமி லீக் கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான குறைந்த பட்சமான 151 இடங்களை வென்று மேலும் பல இடங்களில் வெற்று பெற்று வருகிறது.

பங்களாதேஷில் கடந்த 2007 ஜனவரியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. சென்ற டிசம்பர் 17 அன்றுதான் அது விலக்கிக் கொள்ளப்பட்டு தேர்தல் அறிவிக்கப் பட்டது.

எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் சுமுகமாக நடந்ததாக பத்திரிக்கைத் தகவல்கள் கூறுகின்றன. 2500 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் உட்பட சுமார் 2 லட்சம் பேர் இத்தேர்தலை மேற்பார்வையிட்டனர். 70 சதவிகித வாக்காளர்கள் இதில் வாக்களித்தனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!