பங்களாதேஷ் தேர்தல்: ஷேக் ஹஸினாவுக்கு வெற்றி வாய்ப்பு!
Published on செவ்வாய், 30 டிசம்பர், 2008
12/30/2008 07:37:00 AM //
உலகம்
பங்களாதேஷில் சென்ற திங்களன்று (டிச 29) நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸினாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக இன்னும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஷேக் ஹஸினாவின் கட்சி கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசிய கட்சியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
ஷேக் ஹஸினா 1996லிருந்து 2001 வரை பங்களாதேஷின் பிரதமராக இருந்தவர். இவர் பங்களாதேஷின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளாவார்.
நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளில் அவாமி லீக் கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான குறைந்த பட்சமான 151 இடங்களை வென்று மேலும் பல இடங்களில் வெற்று பெற்று வருகிறது.
பங்களாதேஷில் கடந்த 2007 ஜனவரியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. சென்ற டிசம்பர் 17 அன்றுதான் அது விலக்கிக் கொள்ளப்பட்டு தேர்தல் அறிவிக்கப் பட்டது.
எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் சுமுகமாக நடந்ததாக பத்திரிக்கைத் தகவல்கள் கூறுகின்றன. 2500 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் உட்பட சுமார் 2 லட்சம் பேர் இத்தேர்தலை மேற்பார்வையிட்டனர். 70 சதவிகித வாக்காளர்கள் இதில் வாக்களித்தனர்.
0 comments