Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காஸாவை நோக்கி இஸ்ரேலிய இராணுவம்

Published on: திங்கள், 29 டிசம்பர், 2008 //

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதுவரை விமான தாக்குதல் மட்டுமே நடத்தி வந்த நிலையில் காஸாவின் எல்லை அருகே இஸ்ரேலிய இராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.


இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் லிவ்னி கூறுகையில், "இந்த போர் ஹமாஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய பல்வேறு குழுக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில்தான். ஆனால் போரில் பொதுமக்களும் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது" என்று கூறினார். காஸா பகுதியை ஆக்ரமிப்பது எங்கள் நோக்கம் இல்லை என்றும் அவர் கூறினார்.


இதுவரை 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 5 சதவீதத்தினர் குழந்தைகள் எனவும் மொத்தம் 51 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.

கச்சா எண்ணெய் விலை உயருகிறது

Published on: //
கடந்த ஜூலை மாதம் 147 ஆக அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெய் மளமளவெனக் குறைந்து 40 டாலருக்கும் குறைவாக 37 டாலர்களாக கடந்த வாரம் இருந்து வந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் விமானம் மற்றும் தரைவழி தாக்குதல்கள் நடத்துவதைத் தொடர்ந்து, இன்று சிங்கை நேரம் மதியம் 1 மணி அளவில் கச்சா எண்ணெயின் விலை 5.6 சதவீதம் அதிகரித்து 39.82 டாலர் என்ற அளவில் உள்ளது.

காஸாவின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலின் எதிரொலியாகவே விலை உயர்ந்துள்ளதாக கென் ஹசகவே என்ற ஜப்பானிய கச்சா எண்ணெய் தரகர் கூறியதாக ராய்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜம்மு கஷ்மீர் - மீண்டும் கூட்டணி ஆட்சி

Published on: //
ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பாண்மை கிடைக்கவில்லை. தேசிய மாநட்டுக் கட்சி தனிப் பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அமைப்போம் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாஹ் கூறினார்.



காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று பிரதமர் மற்றும் காங்கிரஸின் உயர் மட்டத் தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இன்று மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தேசிய மாநாட்டுக் கட்சியின் கோரிக்கையை ஏற்று கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கட்சிகள் பெற்ற இடங்கள் வருமாறு: (அடைப்புக்குறிக்குள் 2002ஆம் ஆண்டில் பெற்ற இடங்கள்)



தேசிய மாநாட்டுக் கட்சி : 28 (28)

காங்கிரஸ் : 17 (20)

மக்கள் ஜனநாயகக் கட்சி : 21 (16)

பாரதிய ஜனதா கட்சி : 11 (1)

மற்றவர்கள் : 10 (22)

இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன

Published on: //




சனிக்கிழமை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் நடைபெற்ற சன்டையில் 50க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை விடுதலைப் புலிகள் நேற்று காட்சிப்படுத்தினர்.



இலகு இயந்திர துப்பாக்கிகள், T56 வகை துப்பாக்கிகள், கிரானைட்கள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டன.


சனிக்கிழமை கொல்லப்பட்ட இராணுவத்தினரில் 17 வயதே ஆன இலங்கை இராணுவ வீரரின் அடையாள அட்டையும் வெளியாகி உள்ளது. அவர் இந்த சன்டையில் கொல்லப்பட்டார்.

விடுதலைப்புலிகள் சிறுவர்களை சன்டையில் ஈடுபடுத்துகிறார்கள் என்று இலங்கை குற்றம் சாட்டி வந்த நிலையில் இலங்கை இராணுவத்தில் 17 வயதே நிரம்பியவர்களும் சன்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

வங்க தேசத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது

Published on: //
7 ஆண்டுகளுக்குப் பின் வங்க தேசத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வங்க தேச நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என்றாலும் தேர்தல் முடிவுகள் நாளையே தெரிய வரும்.

முக்கிய அரசியல் கட்சிகளான அவாமி லீக் மற்றும் வங்காள தேசிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. முன்னதாக சனிக்கிழமையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. முன்னாள் பிரதமர்களான பேகம் கலீதா ஜியா மற்றும் ஷேக் ஹஸீனா வஜீத் ஆகியோர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

தேர்தல் பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரம் இராணுவத்தினர், 75 ஆயிரம் காவலர்கள், 6 ஆயிரம் சிறப்பு அதிரப்படை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர 2 இலட்சம் உள்ளூர் பார்வையாளர்களும் மற்றும் 2 ஆயிரம் காமென் வெல்த் பார்வையாளர்களும் தேர்தல் கன்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 36 பேர் பலி

Published on: //
பாகிஸ்தானின் வடமேற்குப் பிரதேசத்தில் புனெர் என்ற நகரில் வெடித்த சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு 36 பேரை பலி வாங்கியிருக்கிறது. மேலும் 15 பேர் கடும் காயத்திற்கு ஆளாகியுள்ளனர். பாராளுமன்ற இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக பள்ளி ஒன்றில் பொதுமக்கள் கூடியிருந்தபோது குண்டு வெடித்தது.

குண்டு வெடிப்பின் விளைவாக பள்ளிக் கட்டிடம் முழுதுமாக இடிந்து விழுந்தது. அருகிலிருந்த ஒரு சந்தையின் கூரை சரிந்து விழுந்ததுடன் அருகாமையிலிருந்த பல வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்தன. இடிபாடுகளுக்கிடையே பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது.

தற்கொலைத் தாக்குதல் என்று நம்பப்படும் இந்தக் குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து நடக்கும் பல்வேறு தாக்குதல்களில் சுமார் 1500 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!