Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

நக்சல் நடமாட்டப் பகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு - ஒரு பார்வை

நக்சல் இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகமுள்ள ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலங்களில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவு மாலை 3 மணியுடன் முடிவுக்கு வந்தது.

மதியம் 1 மணி அளவில் சட்டீஸ்கர் மாநிலத்தில் 25 சதவீத வாக்குகளே பதிவு செய்யப் பட்டிருந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் மதியம் 12 மணி வரை 28.5 சதவீத வாக்குகள் பதிவ செய்யப் பட்டிருந்தன. ஒரிசாவில் மதியம் 1.30 மணி அளவில் 40 சதவீத வாக்குகளும் ஆந்திராவில் 25.67 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

மகாராஷ்டிரா மாநிலம் ராஜனன்ட்காவ்ன் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். ஜாமுஇ மாவட்டத்தில் கன்னி வெடியை வெடிக்கச் செய்தனர்.

பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற வன்முறைகளில் 9 பாதுகாப்பு அதிகாரிகள், இரு பொதுமக்கள் உள்பட 16 பேர் கொல்லப் பட்டனர்.

பல்வேறு இடங்களில் கன்னிவெடிகள் வெடிக்கச் செய்யப்பட்டன. லடேகர் மாவட்டத்தில் 4 தேர்தல் அதிகாரிகளை நக்சல்கள் கடத்திச் சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பீகாரில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். இரு பெண்கள் உள்பட ஆறுபேர் காயமுற்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கோடாபனூர் மற்றும் நராயண்பூர் ஆகிய இடங்களில் வாக்குச் சாவடிகளில் குண்டுகள் வெடித்தன.

ஒரிசாவில் மல்காங்கிரி மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் எரியூட்டப்பட்டன. வாக்குச் சாவடிகள் மீதும் தாக்குதல் நடைபெற்றன.

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் தங்கும் விடுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

அத்வானி மீது ஷூ வீச்சு!

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அத்வானி மீது இன்று ஷூ வீசப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது அத்வானியை நோக்கி ஒருவர் ஷூவை வீசினார். காவல் துறையினர் அவரை உடனடியாக கைது செய்து செய்தனர். கட்னி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த பவாஸ் அகர்வால்தான் ஷூ வீசினார் என்று கூறப்படுகிறது. கட்சியில் நிலவிய குழுப்போட்டியின் காரணமாக அவரை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து அண்மையில் பாரதீய ஜனதா கட்சி நீக்கியது. தன்னுடைய எதிர்ப்பைக் காண்பிப்பதற்காக அவர் இச்செயலில் ஈடுபட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

அசாம் : தேர்தல் அதிகாரி தற்கொலை முயற்சி!

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள ஹவுராகட் எனும் இடத்தில் வாக்குச்சாவடி அருகே, வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் தேர்தல் அதிகாரி ஒருவர் தன்னுடை தொண்டையை பிளேடால் அறுத்துக் கொண்டார். அந்த அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது தற்கொலை முயற்சிக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதே மாவட்டத்தில் மற்றொரு வாக்குச் சாவடி அருகே வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டு, செயலிழக்கச் செய்யப் பட்டது. மேலும் சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு கண்டுபிடிக்கப் பட்டு சரி செய்யப்பட்டன.

சிறுசிறு சம்பவங்களைத் தவிர்த்து அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நண்பகல் வரை அசாமில் 40 முதல் 50 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்கள் கூறுகின்றன.

வாக்குப் பதிவின் போது மாவோயிஸ்டுகள் தாக்குதல் 11பேர் பலி!

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பீகார், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியானார்கள். இவர்களில் 9 பேர் காவல்துறையினர் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தின் லேடேஹர் மாவட்டத்தில் கன்னிவெடிகளை வெடிக்கச் செய்தபோது, வாக்குச்சாவடியின் பாதுகாப்புக்காக அவ்வழியே சென்று கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையைச் சார்ந்த 7 பேர் கொல்லப் பட்டனர். அவர்கள் சென்ற வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளரும் இதில் கொல்லப் பட்டனர்.

பீகாரில் கயா மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடி மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு காவலர்கள் கொல்லப் பட்டனர்.

ஒரிசாவில் மல்கான்கிரி மற்றும் சுந்தர்கர் மாவட்டங்களில் வாக்கு இயந்திரத்தையும் ஒரு வாகனத்தையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!